இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோப்பாய் செல்வபுரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வீட்டு திட்டத்தை சென்று பார்வையிட்டார். அதன் பின்னர் மூன்று மணியளவில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள நடேஸ்வரா கல்லூரியை கையளித்து வைக்கும் நிகழ்வு குறித்த கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் வரவேற்புரையினை வடக்கு மாகாண முதலமைச்சர் ஆற்றினார். அவர் தனது உரையில், கோப்பாயில் அமைக்கப்பட்டு வரும் வீட்டு திட்டம் பொருத்தமற்றது எனவும், இந்த வீட்டுத்திட்டம் எங்களுடைய கால நிலைக்கு ஏற்றதல்ல எனவும் கூறினார்.
அத்துடன், குறித்த வீடு தரமானதாக இல்லை என்றும், வீட்டுக்குள்ளே மக்களை கவரும் வகையில் சில மின்னியல் பொருட்கள் கவர்ச்சிகரமாக வைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வீடு தொடர்பில் சிந்திக்க முடியாதவாறு அந்த கவர்ச்சி பொருட்களில் நாட்டம் கொள்ள வைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன் பின்னர் உரையாற்றிய மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், குறித்த வீட்டு திட்டம் உலகின் தரம் வாய்ந்த நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த வீடுகள் இங்குள்ள கால நிலைக்கு ஏற்றது எனவும், குறிப்பாக வெப்பம் உள்ளே செல்லாதவாறு அமைக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்டார்.
அதுமாத்திரமன்றி, சிங்கப்பூரில் இதுபோன்ற வீடுகளே அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனாலேயே அந்த நாடு வளர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறினார். இந்த வீட்டு திட்டத்தை மக்கள் விரும்புகின்ற போதிலும் அரசியல்வாதிகள் விரும்பாமை சந்தேகத்திற்கிடமாக உள்ளது என்றும் கூறினார்.
இதன் பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி, ‘குறித்த வீட்டு திட்டம் தொடர்பில் முதலமைச்சர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோர் தமது கருத்துக்களை கூறிவிட்டார்கள். ஆனால் அவர்கள் அங்கு சென்று குடியேறப்போவதில்லை. மக்களுக்காக தான் அந்த வீடுகள் அமைக்கப்படுகின்றனர்.
எனினும் வடக்கு மாகாண முதலமைச்சர் கூறியதனை நான் செவிமடுத்துள்ளேன். அவர் கூறியது தொடர்பில் ஆராய்ந்து மக்களின் கருத்துக்களின் கேட்டறிந்த பின்னர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த முரண்பாடான கருத்துக்களின் பின்னர் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அடிக்கடி சிரிப்பதனை நிறுத்தி கொண்டமையை அவதானிக்க முடிந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் குறிப்பிடுகின்றன.