
யாழ்ப்பாணத்திலுள்ள பொதுமக்களது காணிகளை படையினரது தேவைக்காக சுவிகரிப்பதற்கு நில அளவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணததில் தீவகம், மண்கும்பான், ஆனைக்கோட்டை பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சொந்தமான நிலங்களை படையினருடைய தேவைகளுக்காக சுவீகரிப்பதற்கு நில அளவை திணைக்களம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.மாவட்ட நில அளவை அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று(வெள்ளிக்கிழமை) அரசியல்வாதிகள் மற்றும் காணி உரிமையாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள யாழ்.மாவட்ட நில அளவை திணைக்கள அதிகாரிகள், குறித்த நடவடிக்கையானது தற்காலியாகவே கைவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த நடவடிக்கையினை நிறுத்துமாறு அறிவுறுத்தி தமக்கு இதுவரையில் எவ்விதமான கடிதங்களோ, அல்லது ஆவணங்களோ அனுப்பி வைக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாக பொதுமக்களின் காணிகளை அளவிடும் நடவடிக்கையானது பிரிதொரு தினத்தில் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பொதுமக்களின் காணிகளை படையினரது தேவைகளுக்காக சுவிகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக மாபெரும் கண்டணப்பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.