நல்லாட்சி அரசும் யுத்த குற்றவாளிகளை தப்பிக்க விடுகிறது : அமெரிக்கா

USA Flagஇலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போதும், யுத்தம் முடிவடைந்ததன் பின்னரும் மனித உரிமை மீறல்கள், மற்றும் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நிலைமை தொடர்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பாக சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், ஊழல், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள், தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நிலை நல்லாட்சி அரசிலும் தொடர்வதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள, ‘இலங்கையின் மனித உரிமைகள் நடைமுறைகள்-2015′ அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :- ‘கடந்த ஆண்டில், அறிக்கையிடப்பட்டுள்ள முக்கியமான மனித உரிமைகள் பிரச்சினைகளில், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுதல், தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அனுதாபிகள் எனக் கருதப்படுவோர் கண்டபடி கைது செய்யப்படுதல், தடுத்து வைக்கப்படுதல், சித்திரவதை செய்யப்படுதல், வல்லுறவுக்குட்படுத்தப்படுதல், இலங்கை படைகள் மற்றும் பொலிஸாரினால் ஏனைய முறைகளில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையில் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுதல் என்பனவும் அடங்கியுள்ளன. சிறைகளில் அதிகளவிலானோர் அடைக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி மற்றொரு பாரிய மனித உரிமைப் பிரச்சினையாகும். உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் மனித உரிமைகள் இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. பெண்கள், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்கிறது. ஆயுத மோதல்களின் போதும், மோதல்களின் பின்னரும், குற்றமிழைத்தவர்கள், குறிப்பாக சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், ஊழல், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள், தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நிலை பரந்தளவில் தொடர்கிறது.’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, சுதந்திரமாக நடத்தப்பட்ட தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் பதவியில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள இராஜாங்கத் திணைக்களம் இலங்கை அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி பாராட்டியுள்ளது. இதற்கமைய, ஓமந்தை சோதனைச்சாவடி மூடப்பட்டமை, இலங்கை ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் 19வது அரசியலமைப்புத் திருத்தம், ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியமை, ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்கள்-ஐ.நா குழுவினர் மற்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரை வரவேற்றமை, தேசிய நல்லிணக்கத்துக்கான செயலகம் ஆரம்பிக்கப்பட்டமை, தேசிய கலந்துரையாடல் அமைச்சை உருவாக்கியமை, காணாமற்போனோருக்கு காணாமற்போனவர் சான்றிதழை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்தமை, பல்வேறு புலம்பெயர் தமிழர் அமைப்புகள் – தனிநபர்கள் மீதான தடையை நீக்கியமை உள்ளிட்ட விடயங்களில் இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகளை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை பாராட்டியுள்ளது.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila