இறுதி யுத்ததின் போது காணமல் போன மற்றும் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் விபரங்கள் எட்டாவது ஆண்டிலாவது தீர்க்கப்படுமா என காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது சரணடையும் போராளிகளுக்கு பாதுகாப்பு வழங்கி பொதுமன்னிப்பு அளிக்கப்படும் என அரசாங்கம் உத்தரவாதம் வழங்கியிருந்தது.இதனையடுத்து, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் பலர் முல்லைத்தீவு, 58ஆவது படையணி இராணுவ அதிகாரிகளிடம் சரணடைந்திருந்தனர்.இந்நிலையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போன எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட சிலர் தொடர்பில் அவர்களது குடும்பத்தினர் வவுனியா மேல்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்துள்ளனர்.இவ்வழக்கானது, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்டது என்பதனால் அது குறித்து விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல்நீதிமன்றம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.இதன் காரணமாக இந்த வழக்கு விசாரணை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் சில வருடங்களாக நடைபெற்று வருகின்றது.இறுதிக்கட்ட யுத்ததின் போது சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவு முகாமில் இருப்பதாகவும் இதனை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் முல்லைத்தீவு நீதிமன்றம் கடந்த விசாரணையின் போது உத்தரவு பிறப்பித்திருந்தது.இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. எனினும், அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.இதன் காரணமாக குறித்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்து முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதேவேளை, இறுதியுத்தம் நிறைவுக்குவந்த எதிர்வரும் மே மாதம் 19ஆம் திகதியுடன் எட்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றது.குறித்த வழக்கு அன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ள நிலையில், எட்டாவது ஆண்டிலாவது குறித்த வழக்கு எடுபடுமா என வழக்கு தாக்கல் செய்தவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்