சமஷ்டி தொடர்பான பேச்சுக்கே இடமில்லை : அரசாங்கம்
புதிய அரசியலமைப்பின் ஊடாக, வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு, சமஷ்டி முறையிலான தீர்வொன்று கிடைக்கப்பெற வேண்டுமென வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சமஷ்டி முறை மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பான எவ்வித பேச்சுக்கும் தயாரில்லையென்றும், அதனால் வட மாகாண சபையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் கரிசனை கொள்ளத் தேவையில்லையென்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்ற (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்-
”வடக்கு கிழக்கு இணக்கப்பட வேண்டுமென்றும், சமஷ்டி முறைமையிலான தீர்வு வேண்டுமெனவும் வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
ஒன்பது மாகாண சபைகளிலும் பல்வேறு பிரேரணைகள் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் அவற்றிற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் கிடைப்பதற்கு ஆளுநரின் அனுமதி தேவையாகும். வடக்கில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக, வடமகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு வடமாகாண ஆளுநரின் அனுமதி கிடைக்கப்போவதில்லை.
அத்தோடு வடக்கு கிழக்கை மீண்டும் இணைத்தல் மற்றும் சமஷ்டி முறைமையிலான தீர்வு என்பதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடுமையாக எதிர்க்கின்றது. இது தொடர்பிலான எவ்வித பேச்சுவார்த்தைக்கும் தயாரில்லை.
அனைத்து தீர்வும் 13ஆவது திருத்தத்திற்குள்ளேயே முன்னெடுக்கப்படும். இதற்குள் அதிகாரப் பரவலாக்கலே தீர்வாகும். அத்தோடு சமஷ்டி முறைமை, வடக்கு கிழக்கு இணைப்பு என்பது இலங்கையின் அரசியலமைப்பிற்கு எதிரானதாகும். அதேவேளை, இந்திய – இலங்கை உடன்படிக்கை மூலம் வடக்கு கிழக்கு தற்காலிகமாக இணைக்கப்பட்டது. இவ் இணைப்பை தொடர வேண்டுமானால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும்.
ஆனால் எந்தவொரு அரசாங்கமும் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவில்லை. இவ்வாறானதொரு நிலையில் அரசியலமைப்பை மீறிய வடக்கு கிழக்கு இணைப்பானது 2007ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. எனவே வடக்கு கிழக்கு இணைப்பையும் சமஷ்டி முறைமையையும் எதிர்க்கின்றோம். இவ்வாறான செயற்பாடுகள் தெற்கில் இனவாதிகளுக்கும் அடிப்படைவாதிகளுக்கும் சாதகமாக அமைந்துவிடும்” என்றார்”
Related Post:
Add Comments