ஒரு துறவியின் துறவு என்றொரு சிறுகதை பல வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வெளி வந்திருந்தது. பெளத்த துறவியொருவர் தனது துறவை துறந்து போவதான கதையை அச்சிறுகதை கூறும்.
தன்னைப் பெற்றதாயைப் பராமரிப்பதற்கு யாரும் இல்லாத போதும் பெளத்த துறவியான மகன் துறவுக்குத் துறவு கொடுப்பதாக அந்தக் கதையின் உள்ளடக்கம் அமைகிறது.
இராசதுரை என்பவரால் எழுதப்பட்ட அந்த சிறுகதையின் வெளிப்பொருள் துறவு என்பது மேலான அறம். அதற்காக பெற்ற தாயை பராமரிக்காமல் துறவு வாழ்க்கையை பூணுவதென்பது எத்துணை கொடுமை.
ஆகையால் தன்னைப் பெற்ற தாய் தந்தையை பராமரிப்பதற்காக துறவைத் துறப்பதே மேலான தர்மம் என்பதை சுட்டிக்காட்டுவது அச்சிறுகதையின் நோக்கப்பொருளாகும்.
இது ஒரு புறம் இருக்க, இலங்கையில் பெளத்த துறவிகளில் ஒரு தரப்பினர் இந்த நாட்டில் இன அழிவுக்கு வித்திட்டு வருகின்றனர்.
சில பெளத்த துறவிகள் தங்களின் துறவின் மகிமையைக்கூட மறந்து சாதாரண மனிதர்கள் கூட கூச் சப்படும் வார்த்தைகளை பொது மக்கள் மத்தியில் கூறுகின்றனரெனில் இவர்கள் எத்தன்மையர் என்பதைத் தெரிந்துகொள்வதில் அதிக கடினம் இருக்க முடியாது.
பெளத்த பிக்குகள் எது செய்தாலும் எதைக் கதைத்தாலும் பொலிஸார் பார்த்திருப்பர் என்பது இந்தநாட்டின் எழுதா யாப்பு எனில் இந்த நாட்டில் எப்படித்தான் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.
இப்போது நல்லாட்சி நடக்கிறது என்று நாம் கூறிக் கொண்டாலும் நல்லாட்சிக்கு எதிரானவர்கள் அரசுக்கு எதிரான செயற்பாடுகளை தாங்கள் செய்யாமல் பெளத்த பிக்குகள் மூலம் செய்யத்தலைப்பட்டுள்ளனர்.
இதனால்தான் சில பெளத்த பிக்குகள் மிகவும் வேகம் கொண்டு இந்தப்பார், இனவாதத்தை காக்குகிறேன் என்று கங்கணங்கட்டி நிற்கின்றனர்.
இந் நிலைமை தொடர்வது - நீடிப்பது அவ்வளவு நல்லதல்ல. குறிப்பாக நல்லாட்சி இது தொடர்பில் பேசாமல் இருக்க விரும்புமாயின் முதல் ஆபத்து அவர்களுக்காகவே இருக்கும்.
எனவே, இனவாதம் பேசுகின்ற புத்த பிக்குகளை உடனடியாக கைது செய்து நாட்டில் இனவாதத்தை தூண்டினர் என்ற குற்றச்சாட்டில் வழக்குத்தாக்கல் செய்ய வேண்டும்.
இல்லையேல் தங்கள் பெயரை பதிவு செய்து தங்களுக்கும் ஒரு சிலை வைக்க வழிதேட புத்த பிக்குகள் நினைப்பர்.
இந்த நினைப்பு இனவாதத்தை தூண்டும் ஒரு பெரும் கள நிலையை புத்த பிக்குகள் பக்கத்தில் உரு வாக்கும். ஆகையால் பெளத்த பிக்குகளின் அதட்டல்களை நல்லாட்சிக் கட்டுப்படுத்தவேண்டும் என்பது டன் இனவாதம் பேசும் பெளத்த துறவிகள் மேலும் மேலும் உருவாகுவதையும் தடுக்க வேண்டும்.
தவிர பெளத்த பிக்குகள் அரசியல் பேசக்கூடாது; அரசியலில் ஈடுபடக்கூடாது; அவ்வாறு ஈடுபட்டால் அவர்கள் தங்கள் துறவை கைவிடாவிட்டாலும் கட்டிய துணியை கழற்றி துறவின் அடையாளத்தை துறக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டுவருவது கட்டாயமாகும்.
ஒரு துறவியின் துறவு என்ற சிறுகதை போல அரசியலில் ஈடுபட்டால், அரசியல் பேசினால் பெளத்த துறவிகள் தங்கள் துறவை துறப்பர் என்பது சட்டமாக வேண்டும். இதை செய்யாதவரை பெளத்த பிக்குகளின் அட்டகாசங்கள் ஒரு போதும் குறையப் போவதில்லை.
நாட்டில் எத்தனையே அபிவிருத்திப் பணிகள் பற்றி சிந்திக்க வேண்டிய நேரத்தில், பெளத்த துறவிகளின் எதிர்ப்பை; போராட்டத்தை பேரினவாத கொக்கரிப்பைக் கட்டுப்படுத்துவதிலும் அடக்குவதிலுமே காலம் செலவிடப்படுமாயின் என்று தான் இந்த நாடு உருப்படப்போகிறதோ என்ற ஐய வினா தொடரவே செய்யும்.
ஆகையால் அரசியல் பேசுவோரின் காவியை பறித்து துறவு என்ற கோலத்தைச் துறக்கச்செய்வதே ஒரே வழியாகும்.