பன்னாட்டு நீதி விசாரணை மூலமே தீர்வு கிட்ட வேண்டும்! ரி.வரதராஜா

Varatharajah
ஈழமுரசு பத்திரிகைக்கு மருத்துவர் ரி.வரதராஜா அவர்கள் வழங்கிய செவ்வியின் இரண்டாவது பாகம் இது. கடந்த இதழில் கிளிநொச்சி வதைமுகாமில் தான் எதிர்கொண்ட அனுபவங்களை விபரித்த மருத்துவர் வரதராஜா அவர்கள், இந்த இதழில் கொழும்பு நான்காம் மாடியில் தான் எதிர்கொண்ட அனுபங்களையும், தற்பொழுது புலம்பெயர் தேசங்களிலும் தான் மேற்கொண்டு வரும் பணிகளையும் விபரிக்கின்றார். தமிழீழ மக்களுக்கு இழைக்கப்பட்ட இனவழிப்பிற்குப் பன்னாட்டு நீதி விசாரணையின் மூலமே தீர்வு கிட்ட வேண்டும் என்பதை இவ் இதழில் அவர் வலியுறுத்துவதோடு, உள்நாட்டு விசாரணை எந்தப் பயனையும் தராது என்பதையும் ஆணித்தரமாக எடுத்துக் கூறுகின்றார். ஈழமுரசு பத்திரிகைக்காக அவரை செவ்வி கண்டவர் கலாநிதி ர.சிறீஸ்கந்தராஜா.
கேள்வி: நீங்கள் கிளிநொச்சி தடுப்பு முகாமில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பின்னர் என்ன நடந்தது? எங்கே கொண்டு செல்லப்பட்டீர்கள்?


பதில்: என்னை அங்கிருந்து திரும்பவும் கண்ணைக் கட்டி இராணுவத்தின் ஒரு வாகனத்தில் ஏற்றி வவுனியாவிற்கு கொண்டு சென்றார்கள். வவுனியாவில் இருந்த ஒரு பொலிஸ் நிலையத்தில் கொழும்பு நான்காம் மாடியினுடைய கிளை இருந்தது. அங்கு என்னைக் கையளித்திருந்தார்கள். அந்த இடத்தில் அவர்களிற்கிடையில் ஒரு சம்பாசணையில் – என்னைக் கொண்டு சென்ற இராணுவ உத்தியோகத்தர்களுக்கும், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் ஒரு சம்பாசணை நடைபெற்றது. ‘ஏன் இவரை வைத்திருந்தீர்கள்? ஏன் முதலில் தரவில்லை?’ என்று. இராணுவமும், பொலிசும் – இரண்டு பேரும் வேறு விதமான நிலைமைகளைக் கையாண்டு கொண்டிருந்தார்கள் என்று நினைக்கின்றேன். ஏனென்றால் மற்றைய வைத்தியர்கள் ஏற்கனவே சி.ஐ.டி பிரிவினரால் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்கள். அப்பொழுது என்னையும் ஏன் ஆரம்பத்தில் கையளிக்கவில்லை என்று அவர்கள் கேட்டார்கள். அந்த – ஒரு செய்தி – சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ளாமல்தான் என்னை வைத்திருந்தார்கள். சி.ஐ.டி பிரிவினர் மற்றும் பொலிஸ் ஆட்கள் எல்லாம் பல இடத்தில் என்னைத் தேடியிருந்தார்கள் – ஏற்கனவே கைது செய்வதற்கு. அது அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.
பின்பு நான் – எனக்கு அந்தக் காயம் கூட ஒரு பெரிய காயம் – மிகவும் ஒரு ஆபத்தான கட்டத்தில் இருந்தேன். அப்பொழுது வவுனியா வைத்தியசாலையில் என்னை சிகிச்சைக்காக அனுமதிக்கும்படி நான் கேட்டிருந்தேன். அவர்கள் அதற்கு மறுத்து விட்டார்கள். கொழும்புக்கு கொண்டு போவதாகக் கூறியிருந்தார்கள். அப்பொழுது நான் சொன்னேன் எனக்கு அந்தக் காயத்தின் தன்மை மிகவு வேதனையாகவும் – அந்தக் காயம் சீழ் பிடித்திருந்தது. அந்த சிகிச்சையைச் செய்யுமாறு கேட்டிருந்தேன். ஆனால் அதற்கு அவர்கள் மறுத்து விட்டார்கள். கொழும்பில் உள்ள தலைமையத்திற்கு அவசரமாகக் கொண்டு போக வேண்டும் என்று சனிக்கிழமை இரவு – அதாவது ஒன்பதாவது நாள் இரவு – அவர்களுடைய வாகனத்தில் என்னைக் கொண்டு போனார்கள். அவர்கள் ஆரம்பத்தில் அது தமது தலைமைச் செயலகம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்களே தவிர, நான்காம் மாடி என்று சொல்லவில்லை. எனக்கு அது ஒரு அச்சமாகவும், ஒரு பயம் கலந்த உணர்வாக இருந்தது. நான்காம் மாடியா? அல்லது வேறு இடமா? என்று அறிய முடியாமல் இருந்தது. அங்கு போய் இறங்கி அவர்களுடைய படி – லிப்டில் ஏறி – கதவைத் திறந்த பிறகுதான் புரிந்து கொண்டேன் அது நான்காம் மாடிதான் என்று.
கேள்வி: அங்கு எவ்வாறான ஒரு சூழல் இருந்தது? நீங்கள் எவ்வாறான சூழலில் இருந்தீர்கள்?
பதில்: என்னை அங்கு கொண்டு செல்லும் பொழுது நான் நினைக்கிறேன் கிட்டத்தட்ட ஒரு மணி அப்படியிருக்கும். அந்த இடத்திற்குப் போகும் பொழுதே பயங்கரமான ஒரு உணர்வு இருந்தது. இருட்டாகவும், ஒரு பாதாளக் குகை – அப்படி ஒரு இடத்திற்குப் போவது போன்று இருந்தது. ஒரு நிசப்தம் – அந்த அமைதி ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியது. நான்காம் மாடி என்ற சொல்லைப் பார்த்தவுடன் அநேகமான ஆட்களுக்குத் தெரியும் இலங்கையின் நான்காம் மாடி என்பது கொடுமைகளின் உச்சகட்டமாக நடக்கும் சித்திரவதைகள் – மிகவும் பாரதூரமான சித்திரவதைகள் நடக்கும் இடம். இலங்கையில் அதுதான் ஆகலும் கடுமையான சித்திரவதைகள் நடக்கின்ற இடம். அந்த இடத்திற்குப் போன உடனே எனக்கு ஒரு அச்ச உணர்வு இருந்தது. நான்காம் மாடிக்குப் போனாலே உயிர் இருக்கும் உடம்பில், வேறு ஒன்றுமே இல்லாமல் இருக்கும் ஒரு உணர்வுதான் தமிழ் ஆட்கள் மத்தியில் இருந்தது. அதைவிட எனக்கு ஏற்கனவே காயம் இருந்தது – நுரையீரலுக்குள் கிட்டத்தட்ட ஒரு லீற்றர் அளவில் இரத்தம் இருந்து என்னால் சுவாசிக்க முடியாமல் ஒரு கஸ்ரம் இருந்தது. கைக்கு உணர்ச்சி இல்லாமல் – காயப்பட்ட தாக்கம் கூட எனக்கு மிகவும் வலியையும், ஒரு சித்திரவதையையும் தந்து கொண்டிருந்தது. பிறகு அங்கு அவர்களுடைய – அங்கும் ஒரு கம்பிக் கூடுதான். ஜெயில். அதற்குள் கொண்டு போய் விட்டதும் பக்கத்தில் இருப்பவர்கள் யார், எவர் என்று பார்க்க முடியவில்லை. அடுத்த நாள் காலையில்தான் பார்த்தால் பக்கத்தில், முன்னால் எல்லாம் எங்களுடன் வேலை செய்த மற்றைய மருத்துவர்களும் இருந்தார்கள்.
கேள்வி: அங்கு உங்களுக்கு உடல் ரீதியான சித்திரவதைகள் ஏதாவது நடந்ததா? அல்லது முழு அளவிலான உளவியல் ரீதியிலான சித்திரவதைகளா நடந்தது?
பதில்: அன்று எனக்கு அங்கு ஒரு விசாரணை ஒன்றும் ஆரம்பிக்கவில்லை. உடல் ரீதியான சித்திரவதைகள் எனக்கும் மற்றைய வைத்தியர்களுக்கும் இருக்கவில்லை. அடுத்த நாள் என்னை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார்கள். அங்கு வைத்தியசாலையில் வைத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. விசாரணையில் அவர்களுடைய தொனி, கருத்து எல்லாமே நாங்கள் விடுதலைப் புலிகளின் வைத்தியராகவும், விடுதலைப் புலிகளினுடைய இராணுவப் பிரிவினருக்கும், தலைமைத்துவத்திற்கும் நாங்கள் சிகிச்சையளித்த வைத்தியராகக் கருதிக் கொண்டுதான் அவர்களிடம் நாங்கள் ஒப்படைக்கப்பட்டிருந்திருக்கிறோம். விசாரணைத் தொனி எல்லாம் அங்கிருந்துதான் ஆரம்பித்தார்கள். உதாரணமாக தலைவர் பிரபாகரனுக்கு வைத்தியம் செய்வதில் இருந்துதான் எங்களுடைய கேள்விகளே இருந்தது. பிறகு அவர்களுக்கு நாங்கள் அரசாங்க வைத்தியர், நாங்கள் அரசாங்கத்தினுடைய சட்டதிட்டங்களுக்கு அமைய அரச வைத்தியசாலையில்தான் நாங்கள் வேலை செய்தோம், அதற்குரிய முறையான அனுமதிகளும் சரி, முறையான ஆவணங்களும் – எல்லாம் எங்களுக்கு இருந்தது. உரிய முறைப்படிதான் நாங்கள் செய்தோம் என்பதை விளங்கப்படுத்துவதற்கு மிகவும் கஸ்ரமாக இருந்தது. பிறகு கிட்டத்தட்ட ஒரு கிழமை – இரண்டு கிழமை – அந்த விசாரணைக்குப் பின்புதான் அவர்கள் எங்களுடைய சேவையை முற்றுமுழுதாகப் புரிந்து கொண்டார்கள்.
கேள்வி: நீங்கள் அங்கு இருந்த பொழுது, நீங்கள் ஏதாவது – சக கைதிகள் வதைகளுக்கு உட்பட்ட காட்சிகள் – உடல் ரீதியாகவோ அல்லது உள ரீதியாகவே உட்பட்ட காட்சிகள் – ஏதாவது காணக் கூடியதாக இருந்ததா?
பதில்: உள ரீதியான தாக்குதல் எல்லாருக்குமே இருந்தது. எனக்குக் கூட – மற்றைய வைத்தியர்களுக்கும் எல்லாம். ஆரம்பத்தில் நாங்கள் சொல்வதை எல்லாம் அவர்கள் நம்ப மறுத்திருந்தார்கள். மறுத்திருந்த பொழுது அவர்களுடைய சித்திரவதை முறைகளைச் சொல்லுவார்கள். உண்மை சொல்லாட்டி இப்படியெல்லாம் நடக்கும் என்று.
கேள்வி: உதாரணமாக ஒன்றைக் கூறுங்கள் – அவர்கள் குறிப்பிட்டதை.
பதில்: எங்களை அந்த இடத்திற்குக் கூட்டிக் கொண்டு போவதாகக் கூறுவார்கள். இப்படி அந்த இடம் இருக்கின்றது. அதில் போனால்தான் உண்மை வரும் என்றால் நாங்கள் அந்த இடத்திற்கும் உன்னைக் கொண்டு போக வேண்டிய சந்தர்ப்பம் வரும் என்று.
கேள்வி: அங்கே என்ன நடக்கும் என்று கூறுவார்கள்?
பதில்: விளக்கமாகச் சொல்லவில்லை. ஆனால் மற்றைய சில ஆட்களுக்குக் கொண்டு போய் தண்டனை கொடுத்ததைப் பார்த்திருக்கின்றேன். அவர்களுடன் கதைத்ததன் படி, அனுபவத்தின்படி ஒரு பெரிய அறை. அதில் மேசைகள், கம்பிகள், ஆட்களை அடிப்பதற்கான உபகரணங்கள் – இரும்புத் துண்டுகள், எஸ்லோன் பைப், கட்டித் தூக்குவதற்கு மேலே எல்லாம் கயிறுகள் தொங்கிக் கொண்டிருக்கும். இப்படியான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். சிலரைக் கொண்டு போய் அடித்துப் போட்டுக் கொண்டு வந்து விடும் சந்தர்ப்பங்களைப் பார்த்திருக்கிறோம். எங்களுடைய விசாரணையின் பின்பு அவர்கள் – எங்களை முற்று முழுதாகப் புரிந்து கொள்வதற்கு நாள் எடுத்தது. ஆனால் நாங்கள் எல்லா வைத்தியர்களும் இந்த விசாரணையில் கிட்டத்தட்ட ஒரே சம்பவம், ஒரே கதை இருந்தது. அவர்களுக்கு ஆரம்பத்தில் சந்தேகங்கள் கடுமையாக இருந்தாலும் பின்பு நாங்கள் சொல்வதை உண்மை என்பதைப் புரிந்து கொண்டார்கள். பின்பு எமது சுகாதார திணைக்களத்திற்குப் போய் நாங்கள் சொன்ன ஆவணங்கள், எங்களுடைய கடிதங்கள் எல்லாம் இருக்கின்றதா, நாங்கள் சொன்னதெல்லாம் சரிதானா என்று ஒப்பிட்டுப் பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.
கேள்வி: இறுதியாக நீங்கள் எவ்வாறு வெளியில் வந்தீர்கள்? இந்த வதையில் இருந்து – வதைமுகாமில் இருந்து?
பதில்: முகாமில் இருந்து – உண்மையில் சாதாரண கைதிகள் போன்று எங்களுடைய கைதும், எங்களுடைய நிலைமையும் இருக்கவில்லை. உதாரணமாக சி.ஐ.டி – அவர்கள் எங்களைக் கைது செய்திருந்தால், அவர்களுடைய விசாரணையின் பின்பு எங்களுடைய குற்றங்கள் ஒன்றும் நிரூபிக்கப்படாவிட்டால் அவர்கள் விட்டிருப்பார்கள். ஆனால் எங்களை விசாரித்த சி.ஐ.டி அதிகாரியின் கூற்றுப்படி அவர் சொன்னார் எங்களுடைய விடுதலை தங்களுடைய கையில் இல்லை என்றும், ‘நீங்கள்; ஒரு அரசியல் கைதிகளாகக் கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள். உங்களுடைய விடுதலை மேலிடத்தில் இருந்துதான் வர வேண்டும் என்று.’ மேலிடம் என்று சொல்லுவது ஜனாதிபதி அல்லது பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச. அவர்களுடைய அனுமதிதான் வேண்டும் உங்களை விடுவதற்கு என்று. அதற்குரிய காலம் வரை நீங்கள் இருக்க வேண்டும் என்று. பின்பு சி.ஐ.டி ஆட்களுக்கு ஒரு நிலைப்பாடு இருந்தது. வைத்தியர்களை வைத்திருந்து அநியாயமாக எங்களுடைய வாழ்க்கையையும் அநியாயமாக்கும் அதேநேரம் நாங்கள் வெளியில் இருந்தால் பல மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்ற நிலைப்பாட்டை அவர்கள் விளங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் தங்களுடைய கையில் எங்களுடைய விடுதலை இல்லை என்பதைப் பல தடவைகள் சொல்லியிருந்தார்கள்.
பின்பு இராணுவத்தினுடைய ஒரு புலனாய்வு அதிகாரி – மிலிட்டரி இன்ரெலிஜென்ட்ஸ் (படையப் புலனாய்வு) – அவர் எங்களுடைய விடுதலையை கோ-ஓடினேற் (ஒருங்கிணைப்பு) பண்ணுவதற்காக நியமிக்கப்பட்டிருந்தார் – அல்லது அவர் வந்தாரா தெரியவில்லை. அவர் வந்து ஆரம்பத்தில் எங்களுடைய கைது, தங்களுடைய சி.ஐ.டி.யினுடைய சட்ட திட்டங்களைப் பற்றி விளங்கப்படுத்தினார். அதன் அடிப்படையில் அவருடைய கருத்து, கிட்டதட்ட எங்களை – கிரிமினல் இன்வெஸ்ரிகேசன் டிவிசன் – பயங்கரவாதச் சட்டம் மூலம் ஒரு வருடமும், அதற்குப் பின்பு நீதிமன்றத்தில் எங்களை நிறுத்தி, நீதிமன்ற சட்டங்கள் கூட எங்களை ஒரு மூன்று நான்கு வருடங்களுக்கு தண்டனை தர முடியும் – கிட்டத்தட்ட நான்கு ஐந்து வருடங்கள் எங்களைச் சிறையில் வைத்திருக்க முடியும் என்று சொல்லி விளங்கப்படுத்தினார். அதேநேரம் நாங்கள் அதிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்றால், ஜனாதிபதி அல்லது கோத்தபாய ராஜபக்சவின் அனுமதி வேண்டும். அவர்களிடம் தான் சென்று எங்களுடைய விடுதலை பற்றிக் கதைப்பதாக இருந்தால் – அதேநேரத்தில் உண்மையாக இந்த இலங்கை அரசாங்கம் வாகரையிலும் சரி, முள்ளிவாய்க்காலிலும் சரி, அந்த யுத்தத்தை ஒரு இருண்ட உலகத்திற்குள் செய்யத்தான் வெளிக்கிட்டிருந்தார்கள். சர்வதேச தொண்டு நிறுவனங்களையும் வெளியில் எடுத்து, பத்திரிகையாளர்களும் இல்லாமல் – அங்கே நடக்கின்ற இறப்புக்கள், அழிவுகள் ஒன்றையும் வெளியில் வரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். ஆனால் நாங்களும், என்னுடைய மற்றைய வைத்தியர்களும்தான் அந்த உண்மையை வெளியில் கொண்டு வந்தோம். அந்த அடிப்படையில் அவர்கள் எங்களுடன் கோபத்தில் இருந்ததாக அவர் எங்களுக்கு விளங்கப்படுத்தினார்.
உங்களால், நீங்கள் அப்படிச் செய்ததால், இந்த நேரத்தில் அவர் கோபமாக இருக்கிறார். தான் போய் எங்களுடைய விடுதலையைப் பற்றி இந்த நேரத்தில் கதைக்க முடியாது. நீங்கள் அவர்கள் சந்தோசப்படக்கூடிய மாதிரி ஏதாவது செய்தால்தான் நான் உங்கள் விடுதலையைப் பற்றிக் கதைக்க முடியும் என்று. அதற்காக அவர்கள் பிரத்தியேகமாக ஒரு மீடியா கொன்பிரன்ஸ் – பத்திரிகையாளர் மாநாடு – ஒன்றை ஒழுங்கு செய்வதாகவும், முன்பு சொன்ன செய்திகள் எல்லாம் புலிகளுடைய அழுத்தம் காரணமாகச் சொன்னதாக அதில் சொல்ல வேண்டும் என்றும், அவர் அதற்குரிய சில விளக்கங்களைக் கொண்டு வந்தார். சீரோ கசுவாலிற்றீஸ் (சைபர் இறப்புக்கள்), கொஸ்பிற்றல்லை (மருத்துவமனையில்) தாக்குதல் நடக்கவில்லை. இன்னென்ன மாதிரித்தான் அது நடந்திருக்கும் – தங்களுடைய கண்காணிப்புப் படி என்று ஒரு பொய்யை நேரே சொல்லுங்கள் என்று நேரே அழுத்தம் தராமல், ஒரு வித்தியாசமான விளக்கத்தைக் கொண்டு வந்து, நீங்கள் இதைச் சொன்னால் தான் வெளியில் போகலாம் என்ற ஒரு கட்டம். அல்லது நீங்கள் நான்கைந்து வருடங்கள் ஜெயிலில் இருக்க வேண்டும் என்ற ஒரு முடிவு சொல்லப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் அந்த பத்திரிகையாளர் மாநாட்டுக்குப் போனால் தான் நாங்கள் வெளியில் வரலாம் அல்லது உள்ளுக்குள் இருக்க வேண்டும் என்ற சமரியை (சுருக்கம்) எங்களுக்குச் சொல்லியிருந்தார். அதிலும், அந்தப் பத்திரிகையாளர் மாநாட்டிற்கு வருகின்ற பத்திரிகையாளர்கள், பெரும்பாலும் அரச ஊடகங்களில் இருந்துதான் வருவார்கள். குறிப்பிட்ட கேள்விகள் – அநேகமான ஆட்கள் என்ன கேட்பார்கள் என்ற கேள்வியும் – எங்களுக்கு ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அந்தப் பத்திரிகையாளர் மாநாடு நடந்து மூன்று நான்கு கிழமைக்குள் தான் எங்களை விடுதலை செய்வதாக அவர் உறுதியளித்திருந்தார்.
கேள்வி: இதில் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் – உங்களை அவர்கள் மிரட்டிய பொழுது ஒரு வருடம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், பின் நீதிமன்ற பிரிவின் கீழ் உங்களை அடைத்து வைக்கலாம் என்று கூறினார்கள் என்று. உண்மையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரிவுகள் ஏதாவது குறிப்பிட்டு – இந்தப் பிரிவின் கீழ் தான் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போகிறோம், அல்லது எடுக்கலாம், அல்லது வேறு ஏதாவது சட்டங்களை குறிப்பிடத்தக்கதாக – அதாவது அவசர காலச் சட்டம் – இப்படியாக ஏதாவதைக் குறிப்பட்டுத்தான் உங்களை அடைக்கலாம் என்று கூறினார்களா, அல்லது ஒரு சாதரணமாக – மேலெழுந்தவாரியான ஒரு மிரட்டலா?
பதில்: மேலெழுந்தவாரியாகத்தான் எங்களுக்குக் கூறியிருந்தார்கள். ஆரம்பத்தில் – அந்த ஒரு வருடம் வைத்திருக்கலாம் என்பது பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் இருக்கின்றது. விசாரணை இல்லாமல், நீதிமன்றத்திற்குக் கொண்டு போகாமல் ஒரு வருடத்திற்கு வைத்திருக்கலாம். அது அவர்களுடைய பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் இருக்கின்றது. அதற்குப் பிறகு எத்தனை வருடம் – எங்களுக்கு மூன்று நான்கு வருடங்கள் தண்டனை தரலாம் என்பதை எழுந்தமானதாகத்தான் அவர் சொன்னார்.
கேள்வி: இந்தக் காலப் பகுதியில் உங்களுடைய உறவினர்கள் எவராவது உங்களை வந்து பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டார்களா?
பதில்: ஆம். எங்களுக்கு மட்டுமல்ல எல்லாக் கைதிகளையும் ஒவ்வொரு சனிக்கிழமையும் அவர்களுடைய உறவினர்கள் இரண்டு பேர் வந்து பார்க்கலாம். அது எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தது. அப்படி என்னுடைய மனைவி, பெற்றோர், உறவினர்கள் வந்து பார்க்கக் கூடியதாக இருந்தது.
கேள்வி: நீங்கள் எவ்வளவு காலம் மொத்தமாக இருந்தீர்கள் – உள்ளே?
பதில்: மூன்றரை மாதங்களுக்கு கிட்ட இருக்கும்.
கேள்வி: நீங்கள் வெளியில் வந்ததும் என்ன செய்தீர்கள் – அங்கே?
பதில்: நாங்கள் வெளியில் வந்ததும் எங்களுக்கு – வந்தவுடன் கடமையை மேற்கொள்ள முடியாமல் இருந்தது. ஏனென்றால் அங்கிருந்து – பாதுகாப்பு அமைச்சு – இராணுவ அமைச்சிடம் இருந்து சுகாதார திணைக்களத்திற்கு ஒரு அனுமதி வர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது – எங்களை மீண்டும் கடமைக்கு சேர்க்கலாமா என்று. அந்த நடவடிக்கையை எடுப்பதற்கு கொஞ்சக் காலம் எடுத்தது. அதன் பின்புதான் நாங்கள் வைத்தியசாலையில் – சுகாதார திணைக்களத்தில் – கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டோம்.
கேள்வி: நீங்கள் அங்கு – அதாவது தமிழீழத்திலும் சரி, சிங்களப் படைகளின் தடுப்புக் காவலிலும் சரி, பின்னர் வெளியில் வந்த காலப்பகுதியிலும் சரி – உங்களால் மறக்க முடியாத ஒரு சம்பவம் என்ன?
பதில்: எனக்கு மறக்க முடியாத சம்பவங்கள் ஒரு ஆயிரத்திற்கு மேல் இருக்கின்றது. ஏனென்றால் நான் வாகரைக்குப் போனது, ஈச்சிலம்பற்றில் வேலை செய்தது, அதன் பின்னர் சண்டை நடந்த விதங்கள், சிறு பிள்ளைகள் கொல்லப்படுவது, வயோதிபர்கள் கொல்லப்படுவது, அவர்கள் இறந்து கிடக்கின்ற காட்சிகள். நான் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதுகூட ஆட்கள் இறந்த சந்தர்ப்பங்கள் எல்லாம் – அப்படி நிறையவே இருக்கின்றது. மக்களின் இடம்பெயர்வு, பட்டினிச் சம்பவங்கள், அசாதாரணச் சூழ்நிலையில் ஆட்கள்; சாவது எல்லாம் பல தடவைகள் பார்த்திருக்கிறேன். எமது வைத்தியசாலைகள் தாக்கப்படுவது, நோயாளர்கள் – ஏற்கனவே நோயாளர்களாகக் காயமடைந்திருந்தவர்கள் – இறந்தது. வைத்தியசாலைக் கட்டிடங்கள் எல்லாம் தாக்கப்படுவது. இடம்பெயர்வில் மக்கள் பட்ட கொடுமைகள் – ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயரும் பொழுது அவர்கள் ஓடிய விதங்கள். அந்த இடங்களில் விமானத் தாக்குதல்கள், செல் தாக்குதல்களால் இறக்கும் பொழுது மக்கள் அவலப்பட்டு பங்கருக்குள் போவது. கனக்க சொல்ல முடியாத – எதையுமே மறக்க ஏலாது. ஒவ்வொரு சந்தர்ப்பதிலும், எந்தவொரு சொல்லை எடுத்தாலும் அந்த சொல்லில் ஒரு மனதைப் பாதிக்கும் சம்பவம் நடந்திருக்கும். மருந்து என்றால், மருந்து சம்பந்தமான சம்பவங்கள் கனக்க நடந்திருக்கும். கொஸ்பிற்றல் தாக்குதல் என்றால், நான் நினைக்கின்றேன் நான் பத்து கொஸ்பிற்றல் – வைத்தியசாலைகளில் – வேலை செய்திருக்கின்றேன். எல்லா கொஸ்பிற்றல்களும் தாக்கப்பட்டிருந்தது. அப்படித் தாக்கப்படும் பொழுது ஊழியர்கள், காயமடைந்தவர்கள் இறப்பது, மக்கள் அல்லோல கல்லோலப்படுவது, எல்லா சம்பவங்களும் இருக்கின்றது. கொடுமையான விடயங்கள், அதியுச்சமான விடயங்கள் – கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் காயப்படும் பொழுது அவர்களுடைய வயிற்றிலுள்ள கரு கூட இறந்தது. நாங்கள் சத்திர சிகிச்சை செய்யும் பொழுது – அந்த பிள்ளையை வெளியே எடுக்கும் பொழுது – அந்தப் பிள்ளையுடைய தலைக்குள் ஒரு பக்கத்தால் பட்டு மற்றப் பக்கத்தால் வந்து இறந்தது. காயமடைந்த கர்ப்பிணிப் பெண்களுடைய வெளியில் வரும் செல் துண்டுடன், கருவில் இருந்த கை வெளியில் வந்தது. அப்படியான படங்கள் கூட என்னிடம் இருக்கின்றது. இப்படியான சம்பவங்கள் எல்லாம் நிறையவே நடந்திருக்கின்றது. மற்றையது சில குண்டுகள் – பெரிய ஆர்.பி.ஜி செல் – காலைத் துளைத்துக் கொண்டு போய் வெடிக்காமல் வைத்தியசாலைக்கு வந்தது. இரண்டு காலும் இல்லாமல் வந்தது. நிறைய சம்பவங்கள் இருக்கின்றன. மற்றையது சில காயங்கள் – தலைக் காயங்கள் எல்லாம் பட்டு, அவர்களுடைய மூளை இறந்து, அவர்கள் இறப்பதற்கு சில மணித்தியாலங்கள் எடுத்துக் கொண்டு, சிகிச்சையும் அளிக்க முடியாமல், அவர்களுடைய சாவுக்கு நேரத்தைக் குறித்து வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த சம்பவங்கள் கூட நிறையவே இருக்கின்றது.
கேள்வி: இன்று நீங்கள் புலம்பெயர்ந்து வந்திருக்கின்றீர்கள். புலம்பெயர் தேசத்திலே ஜெனீவா சென்று – ஐ.நா. வரை – பல இடங்களிலே ஒரு சாட்சியாக இருக்கின்றீர்கள். இது பற்றியும், நீங்கள் செய்யும் ஏனைய பணிகளைப் பற்றியும் விபரியுங்கள்.
பதில்: நான் ஆரம்பத்தில் சொன்னது போல் இலங்கையில் விடுதலை ஆகிய பின்பும் கூட இலங்கை அரசாங்கத்தினுடைய அழுத்தம் – அவர்களுடைய மிலிட்டரி இன்ரெலிஜெண்ட்ஸ், அந்த ஒட்டுக்குழுக்களுடைய அழுத்தங்கள் – இருந்தது. அவர்கள் தாங்கள் செய்த பிழைகளை மறைப்பதற்காக எங்களை ஒரு சாட்சிகளாக – தங்களுடைய திரிவுபடுத்தப்பட்ட சாட்சிகளாக எங்களை மாற்றியமைத்திருந்தார்கள். உதாரணமாக சனல்-4 ஒரு வீடியோ விட்டால், அது நடக்கவில்லை என்ற தொனியில் எங்களைப் பயன்படுத்தி அதற்கொரு எதிர் வீடியோ ஒன்று செய்வார்கள். தருஸ்மான் ரிப்போர்ட் வந்தால் அதில் குறிப்பிட்ட – இராணுவத்தினர் பிழை செய்த என்ற – சம்பவங்களை அவர்கள் செய்யவில்லை என்ற ரீதியில் எங்களிடம் மறுப்பு அறிக்கைகள் எடுத்து வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். அதன் பின்பு –அந்த நிலைமையை விட – எங்களைப் பின்தொடர்வதாகக் கூட எனக்குச் சில இடங்களில் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இலங்கையில் இருப்பது பொருத்தமில்லை என்ற ஒரு நிலைப்பாட்டின் மூலம் நான் அமெரிக்காவிற்கு வந்திருக்கிறேன். இங்கே வந்த பின்பும், அங்குள்ள எமது குடும்பத்தினருக்கும், மற்றைய உறவினர்களுக்கும் ஒரு சில சில நேரங்களில் அச்சுறுத்தல்கள் இருந்தது. ஆனாலும் எமது மக்கள் பட்ட வேதனைகளுக்கும், துன்பங்களுக்கும், மக்களுடைய பிரச்சினைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது என்பதை நான் உணர்ந்து வைத்திருக்கிறேன். அதன் அடிப்படையில் எல்லா நாடுகளிலும் நடக்கின்ற கியூமன் ரைற்ஸ் (மனித உரிமைகள்), ஜெனோசைட் (இனவழிப்பு) போன்ற மாநாடுகளுக்கு அழைக்கின்ற பொழுது எல்லாம் நான் போவேன். போய் அங்கே நடந்த உண்மையான விடயங்களை, சம்பவங்களை நான் அந்தந்த இடங்களிலே தெரியப்படுத்தியிருக்கிறேன். அதன் மூலம் எங்கள் மக்கள் – பாதிக்கப்பட்ட மக்களுக்கும் – எங்கள் மக்களுக்கு இருக்கின்ற அடிப்படைப் பிரச்சினை – இனப்பிரச்சினைக்காக ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பது ஒரு ஆவல். இதற்கு சில வேளை நீண்ட காலம் எடுக்குமோ, அல்லது விரைவாக நடக்குமோ என்று தெரியவில்லை. ஆனால் எங்களுக்கு இதைவிட வேறு வழியும் இல்லை. இப்பொழுது உலக நாடுகளை நம்புவதைத் தவிர எங்களுக்கு வேறு ஒரு வழியும் இருப்பதாகத் தெரியவில்லை. அதேநேரத்தில் அங்கு நடந்த கொடுமைகளுக்கும் – யுத்தக் குற்றம், இனவழிப்பிற்கு – சர்வதேச விசாரணை மூலம் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு. அதைத் தவிர்த்து உள்ளக விசாரணை, வேறெந்த விசாரணைப் பொறிமுறைகளும் எங்களுக்குப் பொருத்தமாக இருக்காது. அதேநேரம் அந்த உள்ளக விசாரணையில் கன சந்தேகங்கள் இருக்கின்றது. மக்கள் போய் சாட்சி சொல்ல முடியாது. இலங்கை அரசாங்கத்தினுடைய கட்டமைப்பு சாட்சி சொல்லுபவர்களை வெருட்டுவது, அவர்களை அழிப்பது, அல்லது சாட்சி சொல்ல – சாட்சிக்குப் போக – முடியாமல் தடைகளை ஏற்படுத்துகின்றது சந்தர்ப்பங்கள் கன இடத்தில் நடந்திருக்கின்றது. அதனால் இலங்கையில் அந்த உள்ளக விசாரணையை மேற்கொள்வதில் எந்தவிதமான பிரயோசனமும் இருக்காது. அதேநேரம் – நாங்கள் இங்கே இருக்கின்ற சாட்சிகள் – நானோ அல்லது மற்றைய இங்கே இருக்கின்றவர்கள் – இலங்கைக்குப் போய் சாட்சியம் சொல்ல முடியாது. அந்த தேவைகள் எல்லாம் புரிந்து கொண்டு சர்வதேச நிறுவனங்கள் சர்வதேச விசாரணையைத்தான் மேற்கொள்ள வேண்டும். அதுதான் எங்களுக்குப் ஒரு பொருத்தமான வழியாக இருக்கும் என்பதுதான் எனது நிலைப்பாடு.
கேள்வி: நீங்கள் குறிப்பிடும் இந்தப் பன்னாட்டு நீதிவிசாரணை மூலம் என்ன விளைவு ஏற்பட வேண்டும் – அதாவது இதன் விளைவாக என்ன நடக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்? அப்படியொன்று நடைபெற்றால்!
பதில்: இது நடைபெற வேண்டும் என்பதில் – கட்டாயம் நடைபெற வேண்டும். இதன் அடிப்படையில் ஆரம்பத்தில் இருக்கின்ற எங்களுடைய நாட்டுப் பிரச்சினை – தமிழருக்கான பிரச்சினை அண்மையில் வந்த பிரச்சினையல்ல. இது கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாக எழுந்த பிரச்சினை. இந்த விசாரணையின் மூலம், அல்லது அதன் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற பிரச்சினையை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் இருக்கின்ற தமிழர்கள் சுயமாக வாழ்வதற்கு, அல்லது ஒரு அரசியல் ரீதியான தீர்வு – அதற்குரிய ஒரு முடிவை – இந்த விசாரணையின் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது. அதேநேரம் தமிழ் மக்களைத் திட்டமிட்டு அழித்தவர்கள் – இந்த இனவழிப்பைச் செய்தவர்களுக்கு – ஒரு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். இந்தப் போர்க் குற்றங்கள் புரிந்தவர்கள் எல்லோருக்கும் – அதில் சம்பந்தப்பட்டவர்களும் – இந்த விசாரணை மூலம் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் நிலைப்பாடு.
கேள்வி: இங்கே புலம்பெயர்ந்து வாழ்பவர் என்ற வகையில் பல தமிழர்களை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நீங்கள் – இன்றைய சூழலில் – இன்று எதனை எதிர்பார்க்கின்றீர்கள்?
பதில்: புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோரும் கன இடத்தில் நல்ல விதமான பங்களிப்புக்களைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய பங்களிப்புத்தான் எமது இலங்கைத் தமிழ் மக்களுடைய பிரச்சினையை சர்வதேச ரீதியில் இப்பொழுது ஒரு பெரிய, நல்ல முன்னேற்றகரமான கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றது. ஆனால் ஒரு கவலையான விடயம் சில தமிழ் அமைப்புக்கள், புலம்பெயர்ந்த மக்கள், தங்களுக்குள் உள்ள சின்னச் சின்ன கருத்து முரண்பாடுகள் காரணமாக, அல்லது வேறு சில தேவைகள் காரணமாகக் கொள்கை ரீதியாகவோ, அல்லது சில சில தேவைகள் ரீதியாகவோ பிரிந்து இருப்பதை அவதானிக்க முடிகிறது. தங்களுடைய கட்சி சார்பாகவோ, அல்லது தங்களுடைய அமைப்பு சார்பான தனிப்பட்ட கொள்கைகளை விடுத்து, தமிழ் மக்களுக்குரிய – அதுவும் இலங்கையில் இருக்கின்ற தமிழ் மக்களுக்குரிய – விடிவை நோக்கி, அந்தத் தேவையை முன்னிறுத்தி எல்லோரும் ஒன்றுபட வேண்டும். அதன் அடிப்படையில் எல்லோரும் சேர்ந்து இயங்க வேண்டும் என்பது என்னுடைய ஆவலாக இருக்கின்றது. ஆனாலும் சந்தோசமான விடயம் நிறையவே இருக்கின்றது. எல்லோருமே நன்றாகப் பாடுபட்டு, தங்களுடைய சொந்த வேலைகளையும் விடுத்து மிகவும் அர்ப்பணிப்புடன் எல்லோரும் செய்து கொண்டிருக்கின்றார்கள். அந்த நிலைப்பாடுதான் இப்பொழுது இலங்கைப் பிரச்சினையை உலகம் ஏதோவொரு வழியில் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு – அது ஒரு யதார்த்தமான உண்மை.
கேள்வி: இறுதியாக, இன்று புலம்பெயர்ந்த சூழலிலே உங்களுடைய தனிப்பட்ட வாழ்வு எவ்வாறு இருக்கின்றது?
பதில்: அநேகமான நான் நினைக்கின்றேன், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் வன்னியில் இருந்து வந்த எல்லோருக்கும் இருக்கின்ற நிலைப்பாடாகத்தான் இது இருக்கின்றது. இங்கே வந்த எங்கள் ஒருத்தருக்கும் திருப்தி இல்லை. அங்கே இருக்கின்ற பொழுது நாங்கள் செய்த வேலைகள், எங்களுடைய செயற்பாடுகள் அனைத்தும் எங்களுக்கு ஒரு மன நிறைவையும், நிம்மதியையும், திருப்தியையும் தந்தது. அது ஒன்றுமே இல்லாத ஒரு உணர்வுதான் எங்களுக்கு இப்பொழுது இருக்கின்றது. திரும்பவும் நாம் அந்த இடத்திற்குப் போய் ஒரு சேவை செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் வந்தால், அது ஒரு திருப்தியான வாழ்க்கையாக அமையும் என்று நினைக்கின்றேன். அதேநேரம் நாங்கள் இப்பொழுது திடீரென வெளிநாட்டிற்கு வந்தது – வந்தவுடன் எங்களுக்கு இருக்கின்ற சூழல் பிரச்சினைகள், இந்த இடத்திற்கு நாங்கள் பழக்கப்படுத்திக் கொள்வதற்குக் கொஞ்சக் காலம் எடுக்கின்றது. காலப்போக்கில் இது பொருத்தமாக வரும் என்று நினைக்கின்றேன். ஆனாலும் எங்களுடைய ஊரில் இருக்கின்ற மன நிறைவு கிடைக்கின்றதில்லை.
கேள்வி: நீங்கள் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள், புலம்பெயர்ந்த தேசத்திலே?
பதில்: நான் எனது மருத்துவ வேலையைத் தொடர்வதற்காக அமெரிக்காவில் பரீட்சைகளை எடுக்க வேண்டும். மருத்துவ சான்றிதழ் எடுக்க வேண்டும். அதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கின்றேன். தற்காலிகமாக இன்னொரு வேலையும் செய்து கொண்டிருக்கின்றேன். குடும்பம், பிள்ளைகள் பாடசாலையில் சேர்ந்திருக்கின்றார்கள். மற்றையது அநேகமான சந்தர்ப்பங்களில் எமது மக்களுக்கான போர்க்குற்ற விசாரணை, மனித உரிமைகள் சாட்சியங்களுக்காகப் பல நாடுகளுக்குச் சென்று சாட்சியங்களையும் வழங்கிக் கொண்டிருக்கின்றேன்.
கேள்வி: நல்லது மருத்துவர் வரதராஜா அவர்களே, உங்களுடைய நேரத்தை ஒதுக்கி இந்தச் செவ்வியைத் தந்தமைக்காக.
பதில்: நன்றி. வணக்கம்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila