மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர்கள் யார் என்பதை இதுவரை தீர்மானிக்காத நிலையில் அதனைத் தீர்மானிக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள சுமந்திரனின் இல்லத்தில், சம கால அரசியல் நிலைமைகள் குறித்து இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களால் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டார்.
அவரிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பிலும், விக்கினேஸ்வரன் புதிய கூட்டணியை அமைத்து வெளியேறினால் அதனால் கூட்டமைப்புக்கு ஏற்படும் போட்டித் தன்மை குறித்தும் கேள்வியெழுப்பட்டது. இதற்கு அவர் மேலும்கூறுகையில்,
வடக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது, மாவை சேனாதிராசாவை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் எனக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தீர்மானித்திருந்தன.
இருந்த போதிலும் வடக்கிற்கு முதலாவதாக மாகாணசபைத் தேர்தல் இடம்பெறுவதால் அதனை வித்தியாசமான முறையில் நடத்த வேண்டும் என்பதற்காக விக்கினேஸ்வரனை நிறுத்தினோம். எமது சிந்தனையை ஏற்று மாவை சேனாதிராசா அன்று அதனை விட்டுக்கொடுத்தமையாலேயே இன்று விக்கினேஸ்வரன் முதலமைச்சராகவுள்ளார்.
குறிப்பாக அன்று முதலமைச்சராக விக்கினேஸ்வரன் பொறுப்பேற்கும் போது, தான் இரண்டு ஆண்டுகள் மாத்திரமே இருப்பேன் எனவும் அதன் பின்னர் மாவை சேனாதிராசாவே பொறுப்பேற்க வேண்டும் எனவும் விக்கினேஸ்வரன் கூறிய போதும் இன்று முழுக் காலமும் அவரே இருந்துவிட்டார்.
இந்நிலையில் வடக்கு மாகாணத்திற்கு மாத்திரமல்ல கிழக்கு மாகாணத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்த வேண்டும் என்பது தொடர்பாக சிந்திக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. கடந்த மாகாண சபைத் தேர்தலில் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிக ஆசனங்களை பெற்றிருந்த போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அதனை விட்டுக்கொடுத்திருந்தது.
ஆனால் இம் முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கிழக்கிலும் முதலமைச்சரை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் உள்ளது. ஆனால் வடக்கில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் விரும்பிக் கேட்டால் தாம் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க தயாராக இருப்பதாக மாவை சேனாதிராசா தெரிவித்துள்ள நிலையில் இன்னமும் நாம் யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக தீர்மானிக்கவில்லை. யாரை நிறுத்துவது என்பது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்கான நடவடிக்கைளை இனி வரும் காலங்களில் மேற்கொள்ளவுள்ளோம்
இதேவேளை, வடக்கு மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சரை மீளவும் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தும் சாத்திய கூறுகள் இல்லை. அவர் கட்சியோடு முரண்பட்டுக்கொண்டு, தாம் தனிக் கட்சி ஆரம்பிக்க போவதாகக் கூறி வருகின்ற நிலையில் அவரை வேட்பாளராக நிறுத்த எந்த மானம் மரியாதை உள்ள கட்சியும் சிந்திக்காது.
ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அவரை வலிந்து அரசியலுக்குள் கொண்டுவந்து முதலமைச்சராக்கியிருந்தது. எனவே அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டுப் பிரிந்து போவது குறித்து சிந்திக்க வேண்டும் என்றார்.