
முல்லைத்தீவுக்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள கொக்குளாய் விகாரைக்குச் செல்லாமலே யாழ்ப்பாணத்திற்கு திரும்பிச் சென்றுள்ளார்.
முல்லைத்தீவின் எல்லைக் கிராமமாகிய கொக்குளாய் பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ள பிக்கு ஒருவர் அங்கு பாரிய புத்த விகாரை ஒன்றினை அமைத்து வருகின்றார்.
இதற்கு பொது மக்கள் மிகுந்த எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்களும் விகாரை அமைப்பதற்கு பாரிய எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.
இந்நிலையில் அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயிடம் ஊடவியலாளர்கள் கொக்குளாய் விகாரை தொடர்பாக கேட்டிருந்தனர்.
அவ்வாறு ஒரு விகாரை அமைக்கப்படுவது தொடர்பாக எதுவும் தெரியாது என்று சொல்லியிருந்த ஆளுநர், அது தொடர்பாக முறைப்பாடு கிடைத்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார்.
இருந்த போதும் நேற்று முல்லைத்தீவிற்குச் சென்று பொது மக்களைச் சந்தித்த ஆளுநரிடம் இவ்விடையம் தெரிவிக்கப் பட்டிருந்த போதும் ஆளுநர் அந்த விகாரையை பார்வையிடவே செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.