
பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வதற்கு வீடு இன்றி அவலப்படடு அந்தரிக்கும் மக்களுக்கான வீட்டுத்திட்டத்தை வைத்து அரசாங்கம் இலாப நோக்கில் சிந்தித்து இழுத்தடித்து வருகின்றது?யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போதும் தற்காலிக உயரம் குறைந்த கொட்டகைகளில் அவலப்பட்டு அந்தரிக்கும் போது, பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாட்டு அரசாங்கங்கள் மனிதாபிமான அடிப்படையில் வழங்கிய வீட்டுத்திட்டத்தை,இலங்கை அரசாங்கத்தின் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் சுவாமிநாதன் தான் நினைத்தபடி தன்னால் வழங்கப்படும் மக்களுக்குப் பொருத்தமில்லாத பொருத்து வீடுகளைத்தான் வழங்குவேன் எனக்கூறி மக்களுக்கான வீட்டுத்திட்டத்தை வழங்காமல் விடாப்பிடியாக அடம்பிடித்து காலத்தைக் கடத்தி வருகின்றார்.கடந்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமது வீடுகளை இழந்த பெருமளவான மக்கள் கடந்த 6 வருட காலமாக மீள்குடியேற்ற ஆரம்ப காலத்தில் தற்காலிகமாக வெறும் 6 மாதங்களுக்குக் குடியிருக்கவென வழங்கப்பட்ட தகரம், தறப்பாள் கொண்டு அமைக்கப்பட்ட தற்காலிக கொட்டகைகளில் அவல வாழ்க்கை அனுபவித்து வருகின்றார்கள்.வெறும் ஆறு மாதங்களுக்குத் தற்காலிகமாக குடியிருக்கவென வழங்கப்பட்ட தற்காலிக தறப்பாள், தகரக் கொட்டகைகள் 6 வருடமாகியுள்ளமையால் பழுதடைந்து சிதைந்த நிலையில் மக்கள் வாழ்வதற்கு ஏற்றனவல்லாத நிலையில் மிகவும் மோசமாகக் காணப்படுகின்றன.தற்போது நிலவும் வெப்பமான கால நிலையால் உயரம் குறைந்த தந்காலிக தகரக்கொட்டகைகளுக்குள் வசிப்பவர்கள் பெரும் துன்பப்பட்டுத் துடிக்கிறார்கள்.இப்படியான உயரம் குறைந்த தற்காலிக தகரக்கொட்டகைகளில் வாழும் சிறுபிள்ளைகள் வெயில் வெக்கையால் வெதும்பித் தவிக்கிறார்கள். பல்வேறுபட்ட நோய்த்தாக்கங்களுக்கும் உள்ளாகியுள்ளார்கள்.இப்படியாக யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வதற்கு வீடுகள் இன்றி அவலப்பட்டு அந்தரிக்கும் நிலையில்,இந்த மக்களுக்காகவென வெளிநாட்டு அரசாங்கங்கள் இரக்கப்பட்டு வழங்கிய பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுத்திட்டத்தை வழங்க மறுத்து இழுத்தடித்து வரும் நல்லாட்சி அரசாங்கத்தின் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் சுவாமிநாதன்,தான் நினைத்தபடி மக்கள் விரும்பாத பொருத்து வீடுகளைத்தான் மக்களுக்கு வழங்குவேன் எனக்கூறி அடம்பிடித்து வருகின்றமை பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் கவலையையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.வடபகுதிக்குப் பொருத்தமில்லாத மக்கள் விரும்பாத பொருத்து வீடுகளைத்தான் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அடம்பிடித்து வரும் தற்போதைய மீள்குடியேற்றத்துறை அமைச்சர்,ஒரு தமிழனாக இருந்து கொண்டே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அவல நிலை பற்றி அறியாமல் செயற்படுவது தமிழ் மக்கள் மத்தியில் பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிக் கவலை தெரிவிக்கப்படுவதுடன்,கொழும்பில் குளிரூட்டப்பட்ட வீடுகளில் வாழ்ந்து குளிரூட்டப்பட்ட வாகனங்களில் சொகுசாகப் பயணம் செய்யும் இவருக்கு எங்கே தெரியப்போகின்றது பழுதடைந்த தறப்பாள் தகரக்கொட்டகைகளில் இந்த வெய்யில் வெக்கைக்குள் அவலப்படும் எமது துன்பநிலை என பாதிக்கப்பட்ட மக்களால் கூறி விசனம் தெரிவிக்கப்படுகின்றது.மீள்குடியேற்றத்துறை அமைச்சர் சுவாமிநாதன் தான் கூறியபடி 21 லட்சம் ரூபாவுக்கு பொருத்து வீடுகளைத்தான் வழங்குவேன் அதுதான் மக்களுக்குப் பொருத்தமானது,அவற்றில்தான் நீண்டகாலம் மக்கள் வாழலாம் எனக்கூறி வந்த நிலையில் வடபகுதி மக்கள் தமக்கு வழங்கும் வீடுகளை மக்களுக்கேயுரிய 21 லட்சம் ரூபாவுக்கும் தாம் தமது பாரம்பரிய முறைப்படி கல்வீடுகளை அமைத்து அதில் வாழ்வோம்,அந்த நிதியை எமக்குத் தாருங்கள் என பாதிக்கப்பட்ட மக்களும் வடக்கின் மக்கள் பிரதிநிதிகளும் கூறுவதை ஏற்றுக்கொள்ளாத மீள்குடியேற்றத்துறை அமைச்சர்,தான் இந்த மக்களுக்கு பொருத்து வீடுகளை வழங்குவதற்காகத்தான் பொருத்து வீடுகளை அமைக்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளேன்.அதைத்தான் இந்த மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை எதிர்ப்பவர்கள் மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை விரும்பாதவர்கள் எனக்கூறி,இதனை எதிர்த்த வடக்குமாகாண முதலமைச்சரும் மக்களுக்கான அபிவிருத்தியை விரும்பாதவர் போல செயற்படுவதாகவும் கருத்துக்களைக் கூறி வருகின்றார்.வடபகுதி மக்கள் விரும்பாத பொருத்து வீடுகளை மக்களிடம் திணிப்பதற்காக முயல்வதிலிருந்தே இதில் ஏதோ மோசடிகள் இடம்பெறவுள்ளமை வெளிப்படுகின்றது.கடந்த கால அரசாங்கத்தின் மீது மோசடிக்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நல்லாட்சிக்கான இந்த அரசாங்கம் எதற்காக மக்கள் விரும்பாத மக்களுக்குப் பொருத்தமில்லாத பொருத்து வீடுகளை மக்களிடம் திணிப்பதற்கு கடுமையாக முயலவேண்டும்?பாதிக்கப்பட்ட மக்களுக்காகவென வெளிநாட்டுஅரசாங்கங்கள் கருணை அடிப்படையில் வழங்கிய வீட்டுத்திட்டத்தை பாதிக்கப்பட்ட மக்களிடம் விரைவாக வழங்காமல்,பொருத்து வீடுதான் வழங்குவோம் என்ற சர்ச்சையைக் கிளப்பி பாதிக்கப்பட்ட மக்கள் தறப்பாள், தகரக் கொட்டகைகளுள் வெயில் வெக்கையில் வெதும்பித்துடிக்க மனிதாபிமானமற்ற வகையில் நடந்துகொள்வது நல்லாட்சி அரசாங்கத்திற்கு முறையாகுமா?சிவேந்தன்