வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் குறித்த கோரிக்கையை முன்வைத்து உரையாற்றுகையில்.வடமராட்சி கிழக்கிலுள்ள சவுக்கங்காடுகளை விசமிகள் எரியூட்டி வருகின்றனர். விறகுக்காகவும் திட்டமிட்ட சில நடவடிக்கைகளுக்காகவும் இத்தகைய எரியூட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.குறித்த விடையங்கள் தொடர்பில் பல தடவைகள் மாகாண சபையிலும் கூறியுள்ளேன்.
எனினும் எவரும் இது தொடர்பில் கவனிப்பதில்லை. மாகாணத்திணைக்களங்களாக இருந்தால் என்ன மத்திய அரசில் உள்ள திணைக்களங்களாக இருந்தாலும் எவையும் நடவடிக்கை எடுக்கவில்லை.
சவுக்கங்காடு தீப்பற்றி எரிந்தால் மட்டும் அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் அல்லது இராணுவம் மற்றும் அப்பகுதி பொது மக்கள் தீயை அணைப்பதற்கு முயற்சிகள் எடுக்கிறார்களே தவிர அதனைப் பாதுகாப்பதற்கு எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசனின் காலத்தில் தனியார் நிறுவனம் ஒன்றின் நிதியுதவியுடன் சில வேலைத் திட்டங்கள் இடம்பெற்றது ஆனால் இன்று அவை வெறும் பெயர்ப் பலகையுடன் மட்டும் தான் இன்று காணப்படுகின்றது.
தற்போதைய சூழலில் வடக்கு மாகாணத்தில் மரங்களை நாட்டப்போகிறோம்.பசுமைச்சூழலை உருவாக்கப்போகிறோம் என்று கருத்துக்களையும் செயற்பாடுகளையும் முன்வைக்கிறார்களே தவிர இருக்கின்ற இயற்கைச்சூழலை பாதுகாப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
எனவே வடக்கு மாகாண சபை இருக்கின்ற காலத்திலாவது இந்த சவுக்கங்காடுகளைப் பாதுகாப்பதற்கு முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்காக வடக்கு மாகாணத்திலுள்ள இயற்கையாகவுள்ள மரங்களை குறிப்பாக வடமராட்சி கிழக்கிலுள்ள சவுக்கங்காடுகளை பாதுகாப்பதற்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன் வைக்கவேண்டும்.
மேலும் சவுக்காடுகளைப் பாதுாகப்பதற்கு பொலிஸாரை அமர்த்துவதா அல்லது உள்ளூராட்சி மன்றத்திற்கு பாரப்படுத்துவதா என்ற விடையத்தில் அவதானம் செலுத்தவேண்டும் மேலும் அப்பகுதியிலுள்ள இயற்கை மணல் சட்டவிரோதமாகவும் சட்டத்திற்கு அமைவாகவும் அகழப்பட்டு வருகின்றது.
இதற்கும் முறையான நவடிக்கைகளை எடுக்கவேண்டும்.எனவே வடமாகாண விவசாய அமைச்சு இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் இயற்கை வளத்தைப் பாதுகாப்பதற்கு வடக்குமாகாண சபை ஜனாதிபதியிடம் கோரிக்கையை வைக்கவேண்டும் என்றார். இக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக முடிவெடுக்கப்பட்டது.