காலநிலை மாற்றத்தினால் நாட்டில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதுடன், அதனால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்தத்தினால் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து பேர் காணாமல் போயுள்ளதுடன், 1 லட்சத்து 34 ஆயிரம் பேர் வரை இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாத்தளை, பதுளை, மொனராகலை, கண்டி. நுவரெலியா, இரத்தினபுரி கேகாலை, களுத்துறை மற்றும் குருணாகலை மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிக மழைவீழ்ச்சியாக 267.8 மில்லிமீற்றர் மஹா இலுப்பல்லம பிரதேசத்தில் பதிவாகியுள்ளதுடன், அனுராதபுரத்தில் 192.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நேற்றிரவு ராஜாங்கணை, கலாவாவி, நாச்சதுவ, நுவரவாவி, ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தப்போவ நீர்த்தேக்கத்தின் 15 வாண் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக புத்தளம் – தம்பபன்னி பிரதேசத்தில் பாதிக்கப்பட்டிருந்த 30 குடும்பங்களைச் சேர்ந்த 212 பேரை மீட்கும் பணிகளும் நடைபெறுகின்றன.
சீரற்ற காலநிலை : 9 பேர் உயிரிழப்பு – 97 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மழையினால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்தும் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.
இதனைவிட 27,993 குடும்பங்களைச் சேர்ந்த 97,141 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 7 வீடுகள் வரையில் முற்றாகவும், 111 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டோரில் 1868 குடும்பங்களைச் சேர்ந்த 6198 பேரை 32 முகாம்களில் தங்கவைத்துள்ளதாக அந்த நிலையம் அறிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பலத்த காற்று, மன்சரிவு, வெள்ளம், மரங்கள் முறிந்து விழுந்தமை, மின்சார வயர்கள் அறுந்தமை, இடி, மின்னல் தாக்கம், கடல் கொந்தளிப்பு போன்றவை காரணமாகவே இந்த உயிரிழப்புக்களும் பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளன.
களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை, அனுராதபுரம், புத்தளம் மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களே சீரற்ற காலநிலை மாற்றத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் பொது மக்களின் அன்றாட செயற்பாடுகள் நேற்றைய தினம் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டன. அத்துடன் வெளிமாவட்டங்களிலிருந்து கொழும்புக்கு பணிகளின் நிமித்தம் வருகை தந்த மக்களும் நேற்றைய தினம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
மழை மற்றம் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுகள், மற்றும் ஏனைய உதவிகளைச் செய்வதற்கு அரசாங்கம் தயார்படுத்தப்பட்டுள்ள நிலையில், முப்படையினர் மற்றும் பொலிஸார் அனர்த்தத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.