பாதுகாப்பு அமைச்சினால் நேற்று (திங்கட்கிழமை) தகவல் திணைக்களத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பட்டார். இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
‘யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நாளை யுத்த வெற்றி நாளாக கொண்டாட வேண்டும் என ஒருசிலர் கூறுகின்றனர். ஆனால் அவ்வாறு கொண்டாட நாம் தயாராக இல்லை. இரு நாடுகளுக்கு இடையிலான யுத்தமாக இருந்தால் நாம் வெற்றி பெற்றதை கொண்டாட முடியும். ஆனால் இது ஒரு நாட்டினுள் சகோதர இனங்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்.
இதில் எமது சகோதர உறவுகள்தான் கொல்லப்பட்டனர். விடுதலைப்புலிகள் ஆயுத இயக்கமாக இருந்தாலும் கூட அவர்களும் இலங்கையர்கள். அவர்களும் ஏதோ ஒரு உரிமைக்கான போராட்டமாக இதை முன்னெடுத்தனர். மக்கள் விடுதலை முன்னணியினால் 1979ஆம் ஆண்டு வன்முறை போராட்டம் எடுக்கப்பட்டபோதிலும் இன்று அவர்கள் ஏனைய கட்சிகளை விடவும் வித்தியாசமான ஜனநாயக வாதிகளாக தம்மை அடையாளப்படுத்தியுள்ளனர்.
அவர்களின் அரசியல் பிரவேசம் பாரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோலவே விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளும் காணப்படுகின்றன. எனினும் இன்று விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எமது சகோதரர்களை கொன்றுவிட்டு நாம் வெற்றிவிழா கொண்டாட தயாராக இல்லை. இலங்கையர் என்ற வகையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். இன்று வடக்கில் மக்கள் மத்தியில் நல்ல ஜனநாயக மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் மீண்டும் தமிழர்களை பிரிவினைவாதிகளாக்கி அவர்களை ஓரம்கட்டும் செயற்பாடுகளை கைவிட வேண்டும்’ என்றும் கூறினார்.