யுத்தத்துக்குப் பின்பான வடபுலத்தின் நிலைமைகள் குறித்து விசேடமாக ஆராய வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உண்டு.வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த யுத்தம் பேரழிவுகளைத் தந்தது என்ற உண்மையை எவரும் நிராகரித்து விட முடியாது.
எனவே யுத்த அழிவுகளில் இருந்து பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீட்டெடுப்பதென்பது அரசின் தலையாய கடமையாகும்.
இருந்தும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் இன்னமும் மீளக்கட்டி எழுப்பப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்களின் வாழ்வியல் என்பது மிகவும் கடினமானதாகவே இருந்து வருகிறது.
பொதுவில் யுத்தத்தால் பாதிப்பை சந்தித்த மக்களும் அவர்கள் சார்ந்த பிரதேசங்களும் உரிய முறையில் கவனிப்புக்கு உட்படுத்தபட வேண்டும். இல்லையேல் அந்த மக்களின் வாழ்வியல் மிகவு ம் பாதிப்புடையதாக இருக்கும்.
இது தவிர யுத்தத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம், தொழில் முயற்சிகள், பிரதேச அபிவிருத்தி, அடிப்படை வசதிகள், உட்கட்டமைப்புக்கள் என்பன தொடர்பில் கவனம் அற்ற நிலைமை இருக்குமாயின் வறுமையின் தாக்கம் சமூகச் சீரழிவுகளை ஏற்படுத்துவதுடன் வறுமையைச் சாதகமாக்க வல்லமை உள்ளவர்கள் துணிந்து கொள்வர்.
குறிப்பாக நடந்து முடிந்த போர் என்பது தமிழ் மக்களுக்கு எதிராக அரசு நடத்தியது என்பதால் வடபுலத்தில் இருக்கக் கூடிய படையினர் போரில் பாதிக்கப்பட்டவர்களை தவறாக வழிப்படுத்த முற்படலாம்.
இதற்காகப் படையினர் தமக்கு இருக்கக் கூடிய பதவிப் பலத்தை பிரயோகிக்கக் கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு.
இது தவிர புனர்வாழ்வுப் பணிகளில் ஈடுபடுகின்றவர்களும் போரில் பாதிக்கப்பட்ட பெண்களை தவறான வழிப்படுத்தலுக்கு உட்படுத்த முனையலாம்.வீடமைப்புத் திட்டத்தின் போது பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதற்கான முறைப்பாடுகள் இதற்கு தக்க சான்றாகின்றன.
எனவேதான் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசின் உதவித் திட்டமும் அபிவிருத்தி நோக்கிய திட்டமுன்னெடுப்புக்களும் தேவைப்படுகின்றன.
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அநீதி நடக்கு மாயின்- அவர்களை தவறான பாதைக்கு வழிப்படுத்த யாரேனும் முற்படுவார்களாயின் அது தொடர்பில் உடனடியாக முறையீடு செய்து அதில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு உரிய ஏற்பாடுகளை அரசு செய்து கொடுப்பது கட்டாயமானது.
அதே நேரம் போர் நடந்த பிரதேசத்தில் பொருளாதார அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்பவற்றை ஏற்படுத்துவதும் கட்டாயமானதாகும்.
போருக்குப் பின்பான வேலையின்மை என்பதன் விளைவு சாதாரணமானதல்ல. அது இளைஞர்களை சமூக சீரழிவுக்கு இட்டுச் செல்லும் என்பதுடன் கொள்ளை, களவு, வாள்வெட்டு போன்ற நாசகாரங்களையும் அந்த பிரதேசத்தில் வழமைப்படுத்தி விடும். ஆகையால் போரினால் பாதிக்கப்பட்ட வட புலத்தின் பொருளாதார அபிவிருத்தி- தொழிற்சாலைகளின் உருவாக்கம் - வேலை வாய்ப்பு என்பன தொடர்பில் பலரும் கருத்துக் கொள் வது கட்டாயம்.
இதில் வடபுலத்து அரச நிர்வாகம் வடக்கு மாகாண அரசு என்பவற்றின் வகிபங்கு காத்திரமாக இருப்பது அவசியமானதாகும்.