சொந்த மூளையில் இயங்காது முதலமைச்சருடன் முட்டுவது அழகல்ல (மோதலை தவிர்க்குமாறு பிரதி அவைத் தலைவர் பேச்சு)


வடக்கு மாகாண சபையின் தீர்வு திட்டத்தினை சபாநாயகரிடம் முதலில் சமர்ப்பித்ததை யாராலும் பிழையென கூற முடியாது என தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் வடக்கு மாகாண சபையினை மதிப்பதில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
வடக்கு மாகாண சபையின் ஐம்பத்து இரண்டாவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்; வடக்கு மாகாண சபையினால் ஒரு தீர்வு திட்டம் தயாரிக்கப்பட்டு அதனை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், சபாநாயகர், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் கையளிப்பது என தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜனாதிபதியை சந்திப்பதற்காக கொழும்பு சென்றிருந்த முதலமைச்சர் சபாநாயகரிடம் அந்த தீர்வு திட்டத்தினை சமர்ப்பித்திருந்தார்.
இந்த நிகழ்வு தற்செயலாக இடம்பெற்றதாகும். இங்கே கூறுவது போன்று யாரும் திட்டமிட்டு செய்யவில்லை. ஆகவே இதனை பெரிது படுத்த வேண்டிய அவசியம் இல்லை. எதிர்க்கட்சி தலைவரிடம் கையளிப்பது என தீர்மானிக்கப்பட்டது உண்மை. ஆனால் அவரிடம் தான் முதலில் கையளிப்பது என எந்த தீர்மானமும் இல்லை. ஆகவே முதலமைச்சரோடு முட்டி மோதுவது எந்த வகையிலும் அழகல்ல.
தமித்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தான் தமிழினத்தின் தலைவர் அதனை நாங்கள் அனைவரும் ஏற்கின்றோம். நாங்கள் அவரை விமர்சிப்பதால் அவருக்கு எதிரானவர்களாக கருதி விட கூடாது. தற்போது இங்கு பேசிக்கொண்டு சபையை குழப்பிக்கொண்டு இருக்கும் சிலர் சொந்த மூளையில் இயங்குவதாக தெரியவில்லை.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் மாகாண சபையை மதிப்பதாக தெரியவில்லை. வடக்கு மாகாண சபையின் தீர்வு திட்டத்தை அவர்கள் கவனத்திலெடுப்பதாக தெரியவில்லை. இவ்வாறு தல பல தடவைகள் நடைபெற்றுள்ளன. ஆகவே நாங்கள் எதிர்க்கட்சி தலைவரிடம் முதலில் சமர்ப்பித்து விடவில்லை என்பதற்காக, தீர்வு திட்டத்தையே தவறு என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
தென்னிலங்கையில் எமது தீர்வு திட்டத்திற்கு எதிராக பேரினவாதிகள் குரல் கொடுத்து வரும் நிலையில் நாங்களும் அதற்கு ஆதரவாக இங்கு அந்த தீர்வு திட்டம் மீள பெறப்பட வேண்டும். என கூச்சலிடுகின்றோம். ஆகவே இதெல்லாம் ஒரு சாதாரணமான விடயமாக கருதி நாங்கள் இருந்து விட முடியாது.
இன்னொருநாள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா சம்பந்தனிடம் கையளிக்கலாம், சில வேளைகள் தவறுகள் நடைபெற்றிருக்கலாம். ஆனால் அவற்றை தூக்கி பிடித்து கொண்டு நிற்பதால் எந்த பயனும் இல்லை.
அவைத்தலைவர் தனது நிலையிலிருந்து கீழே இறங்கி வருகின்றார் இல்லை. எல்லோரும் இவ்வாறு தான் நிற்கின்றார்கள். ஆகவே இதெல்லாம் சரியான நடைமுறையாக இருக்க முடியாது. நாங்கள் ஒருவருக்கொருவர் பிரிந்து அடிபடுவதனால் ஒன்றும் நடக்க போவதில்லை என பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் தெரிவித்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila