வெறுந்தேசியம் விலையாகுமா? – அரிச்சந்திரன்

வடமாகாணசபை நினைவுநிகழ்வில் விபூசிகாவின் தாயார்

ஈழத்தமிழர்கள் வாழ்வில் கொடிய அவலங்களை சுமந்த கனத்த நாட்களின் எண்ணங்களை அனைவரும் மீளநினைவு கொள்ளும் நாள் மே 18. இவ்வாண்டு தாயகத்திலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளிலும் நினைவு நாட்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளன.
தாயகத்தில் வழமையை விட நெருக்குவாரங்கள் குறைந்தபோதும் கனதியான நிகழ்வுகளாக அந்நாள் நினைவுகூரப்படவில்லை. இம்முறை பொறுப்போடு நினைவுகூரப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் முள்ளிவாய்க்காலில் கூட வடமாகாணசபை என்று தனித்தும் தமிழத்தேசிய மக்கள் முன்னனி என்று பிரித்தும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
வழமையாக பெருமளவில் மக்கள் திரண்டுகொள்ளும் தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளும் இம்முறை அந்த கனதியை இழந்துவிட்டன. ஈழத்தமிழர் அரசியலுக்காக குரல்கொடுத்தவர்களே பிரிபட்டு “உண்மையானவர்கள்” யார் என்ற போட்டியில் ஒருவருமே “இல்லாதவர்களானார்கள்”.
தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களிலும் நடைபெற்ற நினைவுநாள் நிகழ்வுகளில் முன்னரை விட மக்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
யாழ் பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவுநிகழ்வு
யாழ் பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவுநிகழ்வு
குறிப்பாக பிரித்தானிய பெருந்தேசத்தில் இரண்டு இடத்தில், இரண்டு பிரிவுகளாக, முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. ஒரு இடத்திற்கு செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் மற்றைய இடத்திற்கு செல்லுமாறு பழ. நெடுமாறனும் குரல்கொடுத்திருந்தனர்.
இரண்டு இடங்களில் அல்ல இருபது இடங்களிலும் நினைவுநிகழ்வுகளை செய்வது வரவேற்கதக்கது.
ஆனால் அந்நினைவுகூரல் நிகழ்வுகள் உரியமுறையில் செய்யப்படவேண்டும்.
நடைபெற்றது இனப்படுகொலை அல்ல சில கவலையான சம்பவங்களே எனச்சொல்லியும் தலைவர் பிரபாகரன் வந்து சொல்லும்போது தமிழரின் தேசியக்கொடியை ஏற்றுவோம் அதுவரை அதனை மடித்து வையுங்கள் என்றும் பிரித்தானிய தமிழர் பேரவை சொல்லுகின்றது.
பிரித்தானிய தமிழர் பேரவை என்பது முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு பின்னர் அதன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்ற கட்டமைப்பை விட்டு வெளியேறி தனியே செயற்படுகின்ற ஒரு அரசியல் வேலைத்திட்டங்களை செய்கின்ற அமைப்பு.
தேசிய அடையாளங்களை ஒளித்துவைத்து அரசியல் செய்யவேண்டாம் என்றும் அதனை முன்னே வைத்து தமிழர் போராட்டத்தின் நியாயங்களை வெளிச்சொல்லுங்கள். நாங்கள் உங்கள் பின்னால் இருந்து உங்களுக்காய் வேலை செய்கின்றோம் என்று சொல்கின்றார்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர்.
மக்கள் உணர்வுகளை மதிப்பதா மக்களின் தியாகங்களை மதிப்பதா என்பது தொடர்பில் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒரு முடிவிற்கு வந்தாகவேண்டும். யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கூட தமிழீழ படம் தாங்கிய பின்னனியில் நிகழ்வுகள் நடைபெறும்போது பிரித்தானிய தேசத்தில் ஏன் இப்படி பதுங்கவேண்டும் என்பது அவர்களின் கேள்வி.
முள்ளிவாய்க்கால் நினைவுநாளென்பது தனியே ஒரு துக்கநாளல்ல. ஒருதேசத்தின் அழிவில் நனைந்து வீழ்ந்து அழுது போவதற்கான நாள் மட்டுமல்ல. இழந்தவர்களுக்கான நீதிபெறப்பட வேண்டிய தேவையை நினைவூட்டும் நாளாகவும் இருப்பவர்களின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கான நாளாகவும் அதனை நினைவுகொள்ளவேண்டும் என்பதே பொதுவான கருத்தாகும்.
மக்கள் முன்னனியின் நினைவு நிகழ்வில்
மக்கள் முன்னனியின் நினைவு நிகழ்வில்
இதனையே முள்ளிவாய்க்கால் நிகழ்வை தலைமையேற்று நடத்திய வடமாகாணசபை முதல்வர் விக்கினேஸ்வரன் பதிவுசெய்துள்ளார். “தமிழர்களுக்கு நல்ல தீர்வை பெற்றுத்தருகின்றோம் நடந்தவைகளை மறந்துவிடுங்கள். போர்க்குற்றங்களை பற்றி கதைக்கவேண்டாம் என்றும் நடைபெற்றது இனவழிப்பு என சொல்லவேண்டாம் எனவும் மறைமுகமான அழுத்தங்கள் உள்ளேயும் வெளியிலிருந்தும் கிடைப்பதாகவும அதனை ஏற்கமுடியாது” எனவும் விக்கினேஸ்வரன் சொல்லுகின்றார்.
தமிழர்களுக்கு நடைபெற்ற அநீதிகளை மறைப்பதன் மூலம் தமிழருக்கான தீர்வை பெற்றுவிடலாம் என சிலர் பகற்கனவு காண்கின்றனர்.
ஆனால் இங்கு முக்கியமான கேள்வி என்னவெனில் தமிழர்களின் முக்கியமான ஒரு நினைவுநாளில் கூட – அனைவரும் ஒருமித்து பயணிக்கமுடியாமல் போவது ஏன் என்பதே.
பல்வேறு பிளவுகளும் பிரிவுகளும் தமிழகத்திலும் தமிழர் புலம்பெயர் தேசங்களிலும் இருக்கின்றபோதும் முள்ளிவாய்க்கால் நினைவுநிகழ்வு தொடர்பாக தாயகநிலைமைகளை பற்றி கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியமானது.
காத்திரமான எந்தவித ஒழுங்குபடுத்தலுமின்றி தாங்களும் கலந்துகொண்டோம் என்ற பெயரில் வடமாகாணசபை உறுப்பினர்களும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிகழ்வில் கலந்துகொண்டமை மக்களின் பெருத்த விசனத்திற்குள்ளாகியுள்ளது. ஆனால் அடிப்படையான ஒருங்கிணைப்பில் நிகழ்ந்த தவறுகளே அதற்கு காரணம் எனவும் சொல்லப்படுகின்றது.
அதிலும் தேசியமுக்கியத்துவம் வாய்ந்த நாளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தன் சுமந்திரன் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் சிறிலங்கா தேசிய அரசியலில் கலந்துகொள்வதற்காக முள்ளிவாய்க்கால் நினைவுநிகழ்வில் கலந்துகொள்ளாமல் நிகழ்வை புறக்கணித்தனர்.
அவர்களை விட்டுவிடுவோம். ஆனால் நிகழ்வை நடத்தவேண்டும் என முன்னின்றவர்களோ இரண்டு பிரிவாக இரண்டு இடத்தில் ஆனால் முள்ளிவாய்க்காலில் நிகழ்வை நடத்தினர்.
குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் கூட – முள்ளிவாய்க்கால் என்ற முக்கியத்துவமான இடத்தில் நடைபெற்ற நினைவுநிகழ்வை கூட – ஒருங்கிணைந்து செய்யமுடியாமல் போனமை தமிழர் வரலாற்றின் சாபக்கேடா?
முள்ளிவாய்க்கால் நிகழ்வை வடமாகாண சபை பொறுப்பெடுத்து செய்தது தவறு என்றும் தாம் ஏற்றுக்கொள்ளாத 13வது சட்டத்திற்கு கீழ் அமைக்கப்பட்ட – தங்களால் நிராகரிக்கப்பட்ட கட்டமைப்பான – வடமாகாணசபையால் நடாத்தப்படும் நினைவுநிகழ்வில் பங்குகொள்வது தமது அரசியல்பாதைக்கு தவறானது என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி சொல்கின்றது.
வடமாகாணசபை நினைவுநிகழ்வில் விபூசிகாவின் தாயார்
வடமாகாணசபை நினைவுநிகழ்வில் விபூசிகாவின் தாயார்
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவுநிகழ்வு என்பது தனியே வடமாகாணசபையால் நடாத்தப்பட்ட நிகழ்வு என சொல்லமுடியாது. அது வடமாகாணசபை முதல்வர் விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. அவர் இப்போது வடமாகாண சபையின் முதல்வர். அத்தோடு தமிழ்மக்கள் பேரவையின் இணைத்தலைவர். அங்கு பேரவையின் உறுப்பினர்களும் பங்குபற்றியிருந்தனர்.
எனவே இந்த நினைவுகூரல் விடயத்திலாவது ஒன்றுபட்டு நின்று – மக்கள் கொத்துகொத்தாக அழிக்கப்பட்ட இடத்திலாவது ஒன்றுபட்டு நிற்பதன் மூலம் – நாங்கள் எங்கே வேறுபடுகின்றோம் என்பதை வெளிக்காட்டியிருக்கலாம்.
தற்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் விக்கினேஸ்வரன் மீது கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்படுவது வெளித்தெரியா விடயமல்ல. அவரை எப்படியாவது வீட்டுக்கு அனுப்பிவைக்கவேண்டும் என்பது சிங்கள பேரினவாதத்தின் நோக்கம் மட்டுமல்ல. கூட்டமைப்பில் உள்ள அரசியல் வியாபாரிகளின் நோக்கமும் அதுவாகத்தான் இருக்கின்றது.
அரசியல் ரீதியாக எடுத்துக்கொண்டால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியானது விக்கினேஸ்வரனை மறைமுகமாக பலப்படுத்தியிருக்கவேண்டும்.
ஆனால் வெறுமனே தேசியம் பேசுகின்றோம் பேர்வழியாக இவர்களும் போய்விடுவார்களோ என்ற ஐயத்தை விதைப்பதுபோல அவர்களின் செயற்பாடு அமைந்துவிட்டமை தவறான உதாரணமாக வரலாற்றில் பதியப்படப்போகின்றதா?
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பலவீனங்களுக்கு மாற்றான சக்தியாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி தன்னை வளர்த்துக்கொள்ள போகின்றதா? அல்லது “கூட்டமைப்பிற்கு எதிரான எதிர்ப்பரசியல்” என்ற வட்டத்திற்குள் சுற்றப்போகின்றதா?
வடமாகாணசபை என்பது தனியே அதிகாரங்கள் அற்ற ஒரு கட்டமைப்பு என்று ஓரேயடியாக புறக்கணித்துவிடமுடியாது. தமிழர்களை பொறுத்தவரை இருக்கின்ற கட்டமைக்கப்பட்ட – அதிகாரத்தில் உள்ள – ஒரே அரசியல் நிறுவனமாக வடமாகாணசபையே உள்ளது.
கொழும்புக்கு செல்லும் முக்கியமான தூதுவர்கள் வடக்கிற்கும் வருவதன் மூலம் அங்கும் ஒரு விசேட தனித்துவமான அரச நிறுவனம் உண்டு என்பதை மறைமுகமாக ஏற்றுக் கொள்ளுகின்றார்கள்.
13 இற்கு கீழ் அமைக்கப்பட்ட மாகாணசபை மூலம் தான் சமஸ்டி ரீதியான அரசில் தீர்வே தேவை என்கின்ற யோசனை முன்வைக்கப்பட்டது. அதிகாரங்கள் அற்ற நிராகரிக்கப்பட்ட வடமாகாணசபையால் தான் – தமிழர்கள் மீது நடத்தப்பட்டது இனப்படுகொலைதான் என தீர்மானம் நிறைவேற்றமுடிந்தது.
எனவே வெறுந்தேசியம் பேசிக்கொண்டு முன்னே செல்வதால் மட்டும் அதனை சரியான அரசியல் நகர்வாக கொள்ளமுடியாது. அப்படியான செல்முறை தோல்வி காணும்போது அதற்கான பழி அப்பாவிகள் மீதே சுமத்தப்படுகின்றது. அது விடுதலைப் போராட்டத்தின் தோல்வியாக பார்க்கப்படும்.
இன்று வடமாகாணசபை உறுப்பினர்களில் சிலர் மோசமான காட்டுமிராண்டித்தனமான காடையர் கூட்டத்தை தமது தொண்டர்களாக வைத்துள்ளார்கள். அது இப்போது சாதாரண நாட்டாண்மை அரசியல் தரத்திற்கு சென்றுவிட்டது. சிலவேளைகளில் அப்படியானவர்களால் கொலைகளும் நடக்கின்றன. கடத்தல்களும் நடக்கின்றன. ஏன் கற்பழிப்புகளும் நடக்கின்ற நிலைக்கு சென்றுவிட்டன.
இப்படி எம்மவர்களால் எம்மவர்கள்தான் என்று எண்ணி வாக்களிக்கப்பட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர், எம்மவர்களாக இல்லாமிலிருக்க காரணம் என்ன? நல்லவர்கள் பலர் வெறுந்தேசியம் பேசிக்கொண்டு வடமாகாண சபை தேர்தலை புறக்கணிக்க, பிழையானவர்கள் வந்துவிட்டார்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம் தானே?
ஆகக்குறைந்தது இப்படியான தனித்தனியான – முற்போக்கற்ற செயற்பாடுகளால் விரக்தியடைந்து பலர் அரசியல் வேலைத்திட்டங்களிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம் தானே?
எந்த இடத்தில் பிரிந்து நிற்கவேண்டும் எந்த இடத்தில் சேர்ந்து நிற்கவேண்டும் என்ற அடிப்படை அரசியல் அறம் ஏன் பின்பற்றப்படவில்லை?
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை மீது விமர்சனங்கள் இருக்கின்றன என்பதற்காக அதில் உள்ள அனைவரையும் அதன் ஆதரவாளர்கள் அனைவரையும் விமர்சிக்கமுடியுமா? மக்களுக்கான களங்களை உருவாக்காமல், வெளியே நின்றுகொண்டு வாருங்கள் வாருங்கள் என்றால் யார்தான் வருவார்கள்? மக்கள் பங்குபற்றி மக்கள் எழுந்து நின்று மக்கள் குரல்கொடுக்ககூடிய களங்களை திறக்கவேண்டியவர்கள் யார்?
விடுதலைப்புலிகள் விட்டுச்சென்ற வெற்றிடத்தில், நல்லவர்களை தேர்ந்தெடுப்பதிலும் வல்லவர்களை வைத்து அதனை நெறிப்படுத்துவதிலும் நாம் தோற்றுவிட்டோமா?
முள்ளிவாய்க்காலில் முடிந்த விடுதலைப்போராட்டத்தின் ஒரு கட்டத்தை அதன் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதில் நாங்கள் எல்லோரும் தவறிவிட்டோம் என்ற நிதர்சனமான உண்மையை விளங்கிக்கொள்ளாதவரை ஒவ்வொருவரும் பத்து நூறாக பிரிந்து நின்று எதனை சாதிக்கப்போகின்றோம்?
சிந்திக்கவேண்டியவர்கள் சிந்திப்பார்களா? பார்ப்போம்.
– அரிச்சந்திரன் –
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila