தமிழர் பகுதிகளில் நடக்கின்ற நிர்வாக முறைமைகளை நினைத்தால் தலை வெடித்துச் சுக்குநூறாகும்.
அந்தளவிற்கு நிர்வாகக் குழப்பங்கள் எல்லைமீறித் தாண்டவமாடுகின்றன.
அமைச்சுக்கள் சிலவற்றின் செயலாளர்களின் தன்னிச்சையான செயற்பாடுகள், பிரதேச செயலர்கள் சிலரின் கடுமையான போக்குகள், புதிய கட்டிடங்களுக்கான அனுமதிகளை வழங்குகின்ற உத்தியோகத் தர்கள் சிலரின் வீம்புத்தனங்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சிலரின் தாமதப்படுத்தல்கள் இப்படியாக எல்லாத் தளங்களிலும் நடக்கின்ற அநியாயங்களிற்கு அளவே இல்லை என்றாயிற்று.
அதேவேளை கண்ணியமான செயலாளர்கள், மக்கள் நலனில் அதீத கருசனை கொண்ட பிரதேச செயலர்கள், கடமையை நேர்மையாகவும் மனச்சாட்சிக்கு கணக்குக் கொடுக்க வேண்டும் என்ற தர்மத்தின் படியும் நடக்கின்ற சகலதுறை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் நம்மத்தியில் இருக்கின்றனர் என்பதையும் நாம் சொல்லாவிட்டால் அது பெரும் பாவமாகி விடும்.
எனினும் ஒரு சிலரின் அலட்சியப் போக்குகளும் அதிகாரத் தடிப்புகளும் சாதாரண பொது மக்களை அலைத்து களைத்து சோரவைக்கின்றன.
இது தொடர்பில் பொறுப்பான பதவிகளில் இருக்கின்றவர்கள் கவனம் எடுத்தாக வேண்டும்.
இது ஒருபுறமிருக்க, இப்போது வட புலத்தில் கட்டிடத்திற்குத் தேவையான மணலைப் பெற்றுக் கொள்வதென்பது முடியாத காரியமாக உள்ளது.
மணல் இல்லாமல் வீடுகட்ட முடியாதென்பதை தெரியாத அதிகாரிகள் இருக்கமுடியாது. அப்படியிருந்தும் மணலிற்கான தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. இதனால் வடபுலத்தில் வீடமைப்புக்கள் உட்பட ஏனைய கட்டுமானப் பணிகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
மணல் தட்டுப்பாடு காரணமாக அதிகூடிய விலையில், மணலை சட்டவிரோதமாகக் கொள்வனவு செய்கின்ற பரிதாபத்தையும் காணமுடிகின்றது.
ஆக, அதிகூடிய விலை செலுத்தினால் களவாக மண் தரப்படும் என்றால், அதன் பொருள் என்ன? என்று ஆராய வேண்டும்.
அப்படி ஆராய்ந்தால் மணல் தட்டுப்பாட்டை வேண்டுமென்றே ஏற்படுத்தி சட்டவிரோதமாக - அதிகூடிய விலையில் மணலை விற்று கொள்ளை இலாபம் ஈட்டுகின்ற செயலில் ஒரு தரப்பு ஈடுபடுகின்றது என்பது தெரியவரும்.
இவ்வாறு கூறுவதில் நியாயம் உண்டென்பதும் மறுப்பதற்குரியதல்ல.
எது எவ்வாறாயினும் பொருத்துவீடுகளை கட்டுவதே பொருத்தம் என்று அமைச்சர் சுவாமிநாதன் கூறியிருந்தார்.
அவ்வாறு கூறியதற்கு; மணல் தட்டுப்பாடும் கட்டிடத் தொழிலாளர்களின் பற்றாக்குறையும் காரணங்களாக முன்வைக்கப்பட்டன.
அவர் கூறியதை இப்போது பார்க்கையில் அது நியாயம் என்று தானே எண்ணத் தோன்றும்.
சொந்த முயற்சியில் ஒரு வீட்டைக்கட்டலாம் என்றால் அதற்குக்கூட மணல் கிடையாதாம்.
அப்படியானால் பொருத்து வீட்டுக்குப்பதிலாக கல்வீடு கட்டுவதாக இருந்தால், அதற்கு எங்கிருந்து மணலைப்பெறுவது,
ஆக, பொருத்து வீடு வேண்டாம் என்று சொல்வதற்கு முன்னதாக மணல் தட்டுப்பாட்டை நீக்கவேண்டும். மணலின் கிடைப்பனவை தாராளம் ஆக்கினால், மக்கள் என்ன கட்டிய வீட்டுக்குள் மணலைப் பதுக்கியா வைப்பர்.
தேவையறிந்து செயற்படுவது அதிகாரிகளின் கடமை. மணல் விநியோகத்தை மட்டுப்படுத்துவது உள்நோக்கம்; இலாப நோக்கம் கொண்டதேயன்றி வேறில்லை என்பதே நிதர்சனம்.