மைத்திரியை கொலைசெய்ய சென்னையிலிருந்து கொலைகாரர்கள்! : மஹிந்தவின் திட்டம் அம்பலம்
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சென்னையிலிருந்து கொலைகாரர்களை அழைத்துவந்து, ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர்களை கொலைசெய்வதற்கு திட்டம் தீட்டப்பட்டமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். குறித்த கொலைகாரர்களை கடல் வழியாக அழைத்துவந்து கொலைகளை செய்துவிட்டு, மீண்டும் கடல் வழியாக அவர்கள் தப்பிச்செல்வதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக, மஹிந்தவின் சாரதி ஒருவரூடாக அம்பலமாகியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை சந்தித்திருந்தால், ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் உயிருடனேயே இருந்திருக்க மாட்டார்கள் என்றும், மஹிந்த தரப்பினரின் சுபாவத்தை அறிந்துவைத்திருந்தமையால் தாம் விழிப்புடன் செயற்பட்டதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். மஹிந்தவுடன் இருந்தவர்களே, தற்போது, கடந்த ஆட்சியில் இடம்பெற்ற பல மோசடிகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் நிலையில், அவ்விடயங்கள் குறித்து உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் ராஜித மேலும் தெரிவித்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, அப்போது பொது வேட்பாளராகவிருந்த ஜனாதிபதி மைத்திரியை கொலைசெய்ய திட்டம் தீட்டியதாக அப்போதே பல செய்திகள் வெளியாகின. இதன் காரணமாகவே, ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்த கடந்த வருடம் ஜனவரி மாதம் 8ஆம் திகதி இரவு, மைத்திரி தமது வீட்டை விட்டு வெளியேறி பிறிதொரு இடத்தில் தங்கியிருந்தாரென அவரே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add Comments