காணாமல் போனோர் தொடர்பான பணியகத்தை நியமிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களிடம் கலந்துரையாடவில்லை என தெரிவித்த மனித உரிமை கண்காணிப்பகம், இதன்மூலம் சர்வ தேசத்திடம் வழங்கிய உறுதிமொழியை இலங்கை அரசு மீறி இருக்கிறது என குற்றம் சாட்டியுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்ஆசிய பிராந்திய பணிப்பாளர் ப்ரட் அடம்ஸ் வெளியிட்டுள்ள மேற்படி அறிக்கையில்,
கடந்த வருடம் ஜெனிவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் மாநாட்டில், காணாமல்போனோர் தொடர்பான பணியகம்; உள்ளிட்ட நீதி வழங்கும் பொறிமுறைகள் தொடர்பில், தேசிய மட்டத்திலான கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என இலங்கை உறுதி மொழி வழங்கி இருந்தது.
எனினும் அவ்வாறான கலந்துரையாடல்கள் எவையும் நடத்தப்படாமலேயே கடந்த 24ஆம் திகதி காணாமல் போனோர் குறித்த பணியகத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி இருக்கிறது. இதனை மனித உரிமை கண்காணிப்பகம் ஏற்றுக் கொள்ளாது.
பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் மற் றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புக்களுடன் கலந்தாலோசித்தே, காணாமல் போனவர்கள் தொடர்பிலான பணியகம் அமைக்கப்பட வேண்டும்
காணாமல் போனவர்கள் தொடர்பிலான பணியகம் மிகவும் அவசியமானது என்ற போதிலும், ஆலோசனை நடத்தியதன் பின்னரே இந்த ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பலவந்த கடத்தல்கள் தொடர் பிலான சர்வதேச பிரகடனத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ள போதிலும் அதன் உள்ளடக்கத்திற்கு அமைய அது செயற்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியு ள்ளார்.