முல்லைத்தீவு-கொக்கிளாய் பகுதியில் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் விகாரை மீது சிவில் வழக்கு தொடுக்க வேண்டும் அல்லது நீதிமன்றத்தின் அனுமதியைப்பெற்று விகாரையை இடிக்கவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாணசபையின் 52ஆவது அமர்வு கைதடியில் உள்ள வடக்கு மாகாணசபைக் கட்டடத்தில் நடைபெற்றது.
இதன்போது முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் ரவிகரன், முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய்ப் பகுதியில் தமிழ் மக்களின் காணியில் பிக்கு ஒருவர் அடாத்தாக விகாரை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தடுத்து நிறுத்தவேண்டுமெனவும், முதலமைச்சரை அந்த விகாரையை வந்து பார்வையிடவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளித்த வடக்கு மகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், முல்லைத்தீவு பிரதான காவல்துறை அதிகாரியிடமிருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறித்த காணி 27.07.2014 ஆம் திகதி விகாரையாக புத்தசான அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த காணி தொடர்பாக 04.07.2013 ஆம் ஆண்டு முறைப்பாட்டாளர் தி.மணிவண்ணதாஸினால் சிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் 07.04.2014 ஆம் ஆண்டு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பிரதேச செயலாளர், காணி அமைச்சு அல்லது சிவில் வழக்கு ஒன்றினூடாக இந்தப் பிணக்கைத் தீர்த்துக்கொள்ளுமாறு காணி உரிமையாளருக்கு கூறியுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தக் காணிப் பிணக்கு தொடர்பாக கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதுடன், அது தொடர்பாக ஆராய்வதற்கு ஓய்வு பெற்ற அரச அதிகாரிகள் ஐவர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.
அவர்களுடைய அறிக்கை கிடைத்தபின்னர் தான் நேரில் சென்று விகாரை அமைக்கும் பணியை பார்வையிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த மக்களின் காணிகளின் பொமிற்கள் தொலைந்துவிட்டன எனவும் அவர்கள் தமது காணிகளின் பொமிற்களை மீளப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.