
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகி, பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தமையினால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழக்கும் நிலைக்குள்ளாகியுள்ளனர்.
சுதந்திர கட்சியில் இருந்து விலகியவர்கள் பொதுஜன பெரமுனவில் உறுப்பினர்களாக இணைந்து கொண்டவர்கள் தற்போது பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களாகும்.
நேற்று உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவையடுத்து, அண்மையில் ஜனாதிபதியினால் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடவுள்ளது.
அதற்கமைய இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது. இந்நிலையில் மஹிந்த ராஜபக்ச உட்பட 50 க்கும் அதிகமான உறுப்பினர்களின் உறுப்பினர் பதவி நீக்கப்பட வேண்டும் என சட்டவல்லுனர்கள் சுட்டிக்காட்டியாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச உட்பட குழுவினர் உத்தியோகபூர்வமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தமையே அதற்கு காரணமாகும் என சட்ட வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களாக தொடர்ந்து செயற்பட முடியாது.
மஹிந்த உட்பட குழுவினர் அங்கத்துவம் வகிக்கும் பொதுஜன பெரமுன நாடாளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சியல்ல. அதற்கமைய அந்த கட்சியிடம் எவ்வித நாடாளுமன்ற ஆசனங்களும் இல்லாத நிலையில் மஹிந்த ராஜபக்ச உட்பட குழுவினரை நாடாளுன்ற உறுப்பினர்களாக ஏற்று கொள்ள முடியாது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து அவர்கள் விலகியுள்ளமையினால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது.
இதன் காரணமாக மஹிந்த ராஜபக்ச உட்பட குழுவினர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக கருத முடியாதென்பதனால் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் ஆசனம் பெறுவதற்கு அவர்களுக்கு வாய்ப்புகள் இல்லை என சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.