நாட்டில் சீரற்ற காலநிலை தொடர்ந்து வந்தநிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) சற்று சீரான வானிலை தென்பட்டது. ஆனால் இன்று மீண்டும் கொழும்பு உட்பட பல்வேறு பகுதிகளிலும் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்து வருகின்றது.
வங்காள விரிகுடாவில் நிலவும் ரோனு சூறாவளி தற்போது காங்கேசன்துறையிலிருந்து ஆயிரத்து 100 கிலோமீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ள நிலையில், அது தொடர்ந்து நாட்டைவிட்டு நகர்ந்த வண்ணமுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். அந்தவகையில் நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் தினங்களில் குறைவடையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்று இடியுடன் கூடிய மழை முகில்களுடனான காலநிலை காணப்படுகின்ற நிலையில், மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.
கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் கொழும்பு நகர் இம்முறை பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளது. களனி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்து பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதியை அண்மித்த மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.