வலம்புரி செய்தியால் அதிர்ந்தது மாகாண சபை நேற்றைய அமர்வில் அனல் பறந்த விவாதம்


வலம்புரிப் பத்திரிகை வெளியிட்ட செய்தி தொடர்பில் நேற்று வடக்கு மாகாண சபையில் என்று மில்லாத கடுமையான வாக்குவாதம்-கூச்சல் குழப்பம் இடம்பெற்றது. இதனால் சபை அமர்வில் சுமார் மூன்று மணி நேரம் வலம்புரி பத்திரிகை தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

கடந்த 24.05.2016 அன்று வலம்புரியின் தலைமைச் செய்தியாக “அதிகார வரம்பை மீறி ஆளுநர் செயற்படுகிறார்!, அவர் தலைமையிலான கூட்டங்களை வடக்கு உறுப்பினர்கள் புறக்கணிக்க முடிவு” என்ற செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இச் செய்தி வெளிவந்த வலம்புரி நாளிதழை சபைக்கு கொண்டு வந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட் வலம்புரிப் பத்திரிகையினைக் காட்டியவாறு இந்தச் செய்தி பொய்யானது, புனைப்பானது எனவே வலம்புரி ஒரு மஞ்சள் பத்திரிகை எனக் கூறினார். 

சபை உறுப்பினர் ஆனோல்ட்  வலம்புரியை மஞ்சள் பத்திரிகை எனக் கூறியதும் சபையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றதுடன் கடுமையான எதிர்ப்பும் எழுந்தது. இதனால் மஞ்சள் பத்திரிகை என்பதை ஹன்சார்டில் இருந்து நீக்குவதாக அவைத் தலைவர், சீ.வீ.கே.சிவஞானம் அறிவித்தார். வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில் நடந்தவை இங்கு தரப்படுகின்றது.

சபை ஆரம்பம்
 வலம்புரி நாளிதழ் கடந்த 24,25ஆம் திகதிகளில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்குமிடையில் முரண்பாடு ஒன்றினை ஏற்படுத்த முயற்சித்துள்ளது. ஆகவே சிறப்புரிமை சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாகாணசபை உறுப்பினர் ஆனோல்டின் கோரிக்கையை அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் சபையில் வாசித்தார்.

இதன்போது எழுந்த உறுப்பினர் ஆனோல்ட், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திலிருந்து மே மாதம் பதினெட்டாம் திகதி நகர அபிவிருத்தி சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கு மாகாண சபை உறுப்பினர்கள், பாராளு மன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் அன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற காரணத்தால் அந்த நிகழ்வு 24ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது.
 இது 24ஆம் திகதிக்கு உடனடியாக கூட்டப்பட்ட கூட்டமும் அல்ல, மாகாண சபை உறுப்பினர்கள் குறித்த கூட்டத்தை புறக்கணி க்கும் முடிவு எதனையும் எடுக்கவில்லை. முன்னதாகவே குறித்த கூட்டம் ஒழுங்கு செய் தமையால் இதனை புறக்கணிப்பதா? இல்லையா? என்பதனை மிகத்தெளிவாக முன்னரே தெரியப்படுத்தியிருக்கலாம்.

 முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு
 சுகாதார அமைச்சரிடம் இருந்த பொறுப் புக்களை முதலமைச்சர் மீள பெற்றுக்கொ ண்டு ஆளுநர் முன்பாக சத்தியப்பிரமாணம் செய்யும் போதும் இந்த கூட்டம் தேவையற்றது என்பதனை ஆளுநருக்கு நேரடியாகவே முதலமைச்சர் கூறியிருக்க முடியும். அன்றைய தினம் வடக்கு மாகாண முதலமைச்சர் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதி ஒன்றினை எமக்கு அனுப்பியிருந்தார்.

அதில் குறித்த கூட்டத்திற்கு போக வேண்டாம் என எதுவும் அறிவுறுத்தப்படவில்லை. ஆகவே நாங்கள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தோம். யாழ்.மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர்கள் ஏழுபேரில் நான்கு பேர் கலந்து கொண்டிருந்தார்கள். யாழ்.மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர்களில் எட்டுப்பேர் கலந்து கொண்டிருந்தார்கள்.

 ஆளுநருக்கும் தமக்கும் விரிசலை ஏற்படுத்துகின்றது
 நிலைமை இவ்வாறு இருக்கையில் யாழில் வெளிவரும் பத்திரிகை ஒன்று வட க்கு மாகாண சபைக்கும் ஆளுநருக்குமிடை யில் முரண்பாடுகளை ஏற்படுத்த முயல்கின்றது. மாகாண சபை உறுப்பினர்கள் அனை வரினையும் பிரதிநிதித்துவப்படுத்தும் எவரேனும் அறிவிப்பை கொடுத்திருந்தார்களா? அல்லது ஆளுநர் அலுவலகம் அவ்வாறனதொரு தகவலை வெளியிட்டிருந்ததா?

 ஆளுநர் எந்த விடயத்தில் அதிகார வரம்பை மீறி செயற்படுகின்றார்? அவர் அவ்வாறு செய்யவில்லை. ஆகவே குறித்த பத்திரிகை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த கூட்டங்களில் எத்தனையோ முக்கியமான விடயங்கள் பேசப்படும் போது, இங்கு நடைபெறும் தேவையற்ற விடயங்களை காட்டூனாக வெளியிடுவது தேவையா? மேலும் சில இணையத்தளங்கள் முறையற்ற வித த்தில் செயற்பட்டும் வருகின்றன. ஆகவே இவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலம்புரி பத்திரிகையை உயர்த்தி காட்டியவாறு கூறினார் உறுப்பினர் ஆனோல்ட்.

 ஆளுநரினை விமர்சிக்கும் அதிகாரம் இல்லை
 ஒரு உறுப்பினர் தனது சிறப்புரிமை தொடர்பில் கேள்வி எழுப்பலாம். எழுத்து மூலம் அவைத்தலைவரிடம் முன்னனுமதி பெற்று அந்த சிறப்புரிமையை எழுப்பலாம் என ஆனோல்ட் கூற இடையில் நுழைந்த உறுப்பினர் பரஞ்சோதி இது உறுப்பினரது மட்டுமல்ல ஒட்டுமொத்த மாகாண சபையினதும் சிறப்புரிமை மீறல் என கூறினார். இதன் போது தான் இதனை சிறப்புரிமை மீறலாகவே கொண்டு வந்துள்ளதாக ஆனோல்ட் கூறினார்.

இதன்போது எழுந்த உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், ஆளுநர் பற்றி கதைக்க நேரம் தர வேண்டும் என அவைத்தலைவரிடம் அனுமதி கோர, அருகிலிருந்த உறுப்பினர் பரஞ்சோதி திடுதிடுப்பென எழுந்து, ஆளுந ரினை விமர்சிக்கும் அதிகாரம் இந்த சபைக்கு இல்லை என ஆளுநர் பக்கம் நின்றார். இதன்போது ஆளுநரினை விமர்சிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை எனவும், அதேபோல் சிறப்புரிமை மீறல் தொடர்பில் சில தெளிவுகளை அவைத்தலைவர் முன்வைத்தார்.

இதன்போது ஆளுநர் நல்லவரா? கெட்டவரா? என்பது பற்றி அவரது தனிப்பட்ட செயல்பாடுகள் பற்றி நாங்கள் இங்கே கதைக்க வரவில்லை. எமது மாகாணம் சார்ந்த ஆளுநரின் செயற்பாடுகள் குறித்துப் பேச எமக்கு உரிமை உண்டு. ஆளுநரினை பற்றி ஒன்றுமே கதைக்க முடியாது என்றால் நாம் என்னத்தை கதைப்பது? என்றார் உறுப்பினர் விந்தன்.

 ஆளுநர் அதிகாரத்தை பறிக்கின்றார்
 ஆளுநர் வடக்கு மாகாண சபையை பற்றி தான் ஒன்றும் கூறவில்லை என இறுவெட்டு ஒன்றினை எம்மிடம் தந்தால் உடனடியாக அதனை நம்பி விடுவதா? இப்போது நவீன காலம் எல்லாவற்றையும் நமக்கு ஏற்றால் போல் மாற்றிவிட முடியும். ஆளுநர் தனது கடமையை மட்டும் பார்க்க வேண்டும். தேவையில்லாமல் முதலமைச்சரினையோ, உறுப்பினர்களையோ பற்றி கதைக்க வேண்டிய தேவை இல்லை.

ஆளுநர் அரசியல் பேசினால் அதற்கு நாங்கள் பதிலளிக்கும் உரிமை எமக்கு உண்டு. எங்கள் அதிகாரத்தை ஆளுநர் பிடுங்கி எடுப்பதனால்தான் நான் கூட்டத்திற்கு போகவில்லை. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு எங்கள் அதிகாரத்தை நாங்கள் விட்டுக்கொடுக்க முடியாது என தெளிவான விளக்கம் ஒன்றினை கொடுத்தார் உறுப்பினர் சிவாஜிலிங்கம்.

 உரிமையை விற்று அபிவிருத்தியா?
 இதன்போது எழுந்த உறுப்பினர் சிவநேசன், பதின்மூன்றாவது திருத்த சட்டத்தில் ஆளுநர் மற்றும் மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் தெளிவாக கூறப்பட்டுள்ளன. இப்படி இருக்கும் போது ஆளுநர் எவ்வாறு எமது அபிவிருத்தியில் தலையிட முடியும்? எமக்கு இருக்கின்ற அதிகாரங்களை நாங்கள் விட் டுக்கொடுக்க போகின்றோமா? உரிமையை விற்று அபிவிருத்தி தேவையா?

இந்த செய்திக்காக வலம்புரி பத்திரிகையை குற்றம் சாட்ட முடியாது. ஆளுநர் நடத்திய கூட்டத்தினை சிலர் தனிப்பட்ட ரீதியில் புறக்கணித்துள்ளனர். அதனை வெளிப்படையாகவும் கூறியுமுள்ளனர். ஆகவே பத்திரிகை செய்திக்காக அந்த பத்திரிகையை தேவையற்ற வார்த்தைகளால் விமர்சிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என சிவநேசன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் கலந்து கொள்ளாத அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள நாங்கள் விரும்பவில்லை. ஏற்கெனவே நடைபெற்ற கூட்டம் ஏன் மீண்டும் நடத்தப்பட வேண்டும்? மேலும் இங்கு மஞ்சள் பத்திரிகை என ஒரு பத்திரிகை விமர்சிக்கப்பட்டுள்ளது. அது சபைக்குறிப்பேட்டிலிருந்து நீக்கப்பட வேண்டும் என அமைச்சர் ஐங்கரநேசன் வலியுறுத்தினார்.

 மக்கள் பட்டினியால் சாக உள்ளனர், இங்கு தேவையற்ற விடயம்
 முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பட்டினியால் சாகும் அளவிற்கு வறுமைக்குள் தள்ளப் பட்டுள்ளனர். இதனை நான் பிரேரணை யாக கொண்டுவர நான்கு சபை அமர்வுகளின் போது கோரியிருந்தேன். சந்தர்ப்பம் அளி க்கப்படவில்லை. ஆனால் தற்போது ஒன்பது மணியிலிருந்து பன்னிரண்டு மணிவரை தேவையற்ற விடயம் கதைக்கின்றனர் என சாடினார் உறுப்பினர் ரவிகரன்.

மேலும் வடக்கு மாகாண சபைக்கு அதிகாரம் தேவை என்று தான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு சில இடங்களில் உரிய கௌரவம் வழங்கப்பட வில்லை. முதலமைச்சருக்கு வழங்கப்பட வேண்டிய உரிய கௌரவம் வழங்கப்படல் 
வேண்டும் என ரவிகரன் கூற, இதுவும் தேவையான விடயம் தான் என அவைத்தலைவர் கூறினார்.

நாம் தான் குரல்கொடுத்தோம்
அமைச்சர் டெனிஸ்வரன் மாகாண சபை உறுப்பினர்களை இழிவு படுத்தி அரசியல் ரீதியாக செயற் படுகின்றார்கள் எனக் கூறியுள்ளார் இது தொடர்பில் சிறப்புரிமை பிரச்சினை எழுப்ப எமக்குச் சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை எனவும் சிவாஜி லிங்கம் சாடினார். 

இதன் பின்னர் கருத்து தெரிவித்த விந்தன், வடக்கு மாகாண ஆளுநர் கொழும்பில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பொன்றினை நடத்தி வடக்கு மாகாண முதலமைச்சரினை விமர்சித்திருந்தார்.
இது தொடர்பில் வடக்கு மாகாண சபை எதுவும் பேசாதிருந்த நிலை யில், எமது கட்சியின் செயலாளர் நாயகமும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான என்.சிறிகாந்தா தலைமையில் நாம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்தி ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண் டும் என்று கூறியிருந்தோம். 
நகர அபிவிருத்திக் கூட்டம் கூட்டும்  அதிகாரம் முதலமைச்சர் வசம் இருக்கின்ற போதிலும், அதிகாரங் கள் நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தினால் முதலமைச்சரினால் அந்த கூட்டத்தை நடத்த முடிய வில்லை என்ற ஆதங்கத்தில் அந்த கூட்டத்தினை புறக்கணித்திருந்தோம். 

நாம் புறக்கணித்தது உண்மைதான் 
இவ்வாறானதொரு நிலையில் வடக்கு மாகாண சபையின் உள்@ராட்சி அமைச்சராக முதலமைச்சர் இருக்கும் போது, நகர அபிவிருத்தியும் முதலமைச்சர் கீழே தான் வருகின்றது. 
யாழ்.மாநகர அபிவிருத்தி தொடர்பில் உலக வங்கியினால் 55 மில்லியன் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், மீளாய்வாக புதியதொரு கூட்டத்தினை நேற்று முன்தினம் ஆளுநர் நடத்தியுள்ளார்.
முதலமைச்சர் நடத்த வேண்டிய இந்த கூட்டத்தினை ஆளுநர் நடத்தியதால் நாங்கள் அந்த கூட்டத்திற்குப் போகவில்லை. இது தொடர்பில் பத்திரிகைகள் சில உறுப்பினர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டது உண்மை. ஜனநாயக ரீதியில் சம்பந்தப்பட்ட பத்திரிகை செய்தியை வெளியிட்டுள்ளது. 
வடக்கு மாகாண சபையின் விடயத்தில் நாங்கள் தலையிட மாடடோம் என ஆளுநர் கூறி கூட்டத்தினை விட்டு வெளியேறி சென்றுள்ளார். இந்த நிலையில் தான் எமது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைமையேற்று குறித்த கூட்டத்தினை நடத்தியுள்ளார் என விந்தன் கூற, இதனை நீங்கள் வந்து பார்த்தனீர்களா? என  மாகாண சபை உறுப்பினர்களான ஆனோல்ட், பரஞ்சோதி ஆகியோர் கேட்டனர். 

ஆனோல்ட்டுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
நான் தனிப்பட்ட ஒருவனுக் காக பேசவில்லை முப்பத்தி யெட்டு உறுப்பினர்களுக்காக தான் பேசு கின்றேன் என ஆனோல்ட் கூற, இடையில் எழுந்த உறுப்பினர்  சர்வேஸ்வரன் முப்பத்தியெட்டு உறுப் பினர்களுக்காகவும் பேசும் அதி காரத்தை உங்களுக்கு யார் கொடுத் தது என ஒரு கேள்வியை தொடுத்தார். உங்களுக்கு சூடு சுரணை இல்லை என ஆனோல்ட் கடிந்து கொண்டார். 

அநாகரிமான வார்த்தையை நீக்க வேண்டும் என சர்வேஸ்வரன் அவைத் தலைவரிடம் கோர அதனை நான் பார்த்துக்கொள்வேன் என அவைத் தலைவர் கூற, நீங்கள் சர்வாதிகாரமாக செயற்படுகின்றீர்கள் அவர்கள், கீழ்த்தரமான வார்த்தைகளைப் பேச அனுமதிப்பீர்கள் நாங்கள் பேசினால் தான் கட்டுப்படுத்துவீர்கள் என கூறினார் சர்வேஸ்வரன்.

வடக்கு மாகாண சபை சார்ந்த யாரையும் அழைத்து கூட்டம் நடத்துவதற்கு ஆளுநருக்கு உரிமை உண்டு மற்றையது நான் யாழ். நகரை சேர்ந்தவன் என்ற காரணத்தினால் நான் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். பத்திரிகை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகள் சரியானவை. வடக்கு மாகாண ஆளுநர் வடக்கு மாகாண சபை தொடர்பில் தான் எதுவும் கூறவில்லை என ஒரு இறுவெட்டினை எம்மிடம் கையளித்துள்ளார். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதில் உள்ள உண்மைத் தன்மை தொடர்பில் ஆராய வேண்டும். இதற்கிடையில் அவசரப்பட்டு ஒரு ஊடகவியலாளர் மாநாட்டினை கூட்டி கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 
மேலும் சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்குமாறு நான் பலதடவை கூறிய போதிலும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை என்றார் உறுப்பினர் பரஞ்சோதி.

இது தான் நடந்தது!
இதன் போது பதிலளித்த முதலமைச்சர், இங்கு நடைபெற்று வரும் குற்றச்செயல்கள் தொடர்பில் வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதி பருடனும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் ஆகியோருடனான சந்திப்பு கடந்த பதினெட்டாம் திகதி மாலை நான்கு மணிக்கு திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும் பிரதி பொலிஸ்மா அதிபர் அன்றையதினம் கொழும்பு செல்ல வேண்டியதாக இருந்தபடியால் அன்றைய தினம் கூட்டம் நடை பெறவில்லை.

இதேபோல் கடந்த 23 ஆம் திகதியன்று ஆளுநர் செயலாளரால், நகர அபிவிருத்தி தொடர்பில் ஒரு கூட்டம் நடைபெறவுள்ளதாக எமக்கு கடிதம் ஒன்று அனுப்பப் பட்டது. நான் அன்று மதியமே இந்த கூட்டம் தேவையற்றது, அதில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என ஒரு கடிதம் ஒன்றினை செயலருக்கு அனுப்பி அதன் பிரதிகளையும் உறுப்பினர்களுக்கு அனுப்பியிருந்தேன் என முதலமைச்சர் நடந்ததை தெளிவுபடுத்தினார்.

மஞ்சள் பத்திரிகை என்று ஒரு பத்திரிகையை விமர்சிக்க கூடாது. கூட்டம் முடிந்த பிற்பாடு ஊடகவி யலாளர்கள் அனைவரும் அவைத் தலைவரிடம் தான் வருகின்றனர். ஆகவே அவைத் தலைவர் தான் அவர்களை வழிப்படுத்த வேண் டும் என்றார் பிரதி அவைத்தலை வர் அன்ரனி ஜெகநாதன்.
இதன் போது கருத்துரைத்த முதலமைச்சர், குறித்த திட்டம் தொடர்பில் ஏற்கனவே திட்டமிடப் பட்டு விட்டது எனவும், ஆகையால் இந்த கூட்டம் தேவையற்றது எனவும் நான் ஆளுநருக்கு அறிவித்து விட்டேன். எனினும் சிலர் இந்த கூட்டத்திற்கு வருவதானால் அதனை இடைநிறுத்த முடியாத நிலையில் நடத்தியிருக்கலாம் என முதலமைச்சர் கூறினார்.

செய்தியாக வந்ததில் என்ன தவறு?
யாழ்நகர் அபிவிருத்தி தொடர்பில் கூட்டபட்ட கூட்டத்திற்கு உறுப்பினர்களில் பலரோ சிலரோ செல்ல வில்லை. அது செய்தியாக வந்ததில் என்ன தவறு உள்ளது? பத்திரிகை செய்தியில் தரவுகள் பிழையாக இருந் தாலும், மாகாண சபை உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறும் செய்தியாக இது இல்லை. இதனை விட மோசமான செய்திகள் எல்லாம் வேறு ஊடகங்களில் வந்துள்ளன.

இந்த செய்தியில் என்ன சிறப்புரிமை மீறல் இடம்பெற்றுள்ளது என்பது தொடர்பில் எனக்கு தெரிய வில்லை. செய்தி பிழையாக இருந்தால் அதற்கு மறுப்பு கோரலாம் அல்லது விளக்கம் கோரலாம். ஜனாதிபதியை பற்றியும் தான் செய்தி போடுகின்றனர். தேவை யற்ற விவாதம் நடைபெற்று வருகின்றது. இது எல்லோருக்கும் அப்பட்டமாக தெரியும் பதவி மோகங்களும், உட்கட்சி பூசல்களும் தான் காரணம் என எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் தன் கருத்தை முன் வைத்தார்.

இதன் பின்னர் எழுந்த உறுப் பினர் அஸ்மின்  மாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட் கொண்டு வந்த சிறப்புரிமை பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் எனவும் இதன் மூலம் அபிவிருத்தி உறுதிப்படுத்த முடியும் என்ற கருத்துப்பட தனது கருத் தினை முன்வைத்தார்.
கடிதத்தினால் தான் பிரச்சினை! பத்திரிகை பிரச்சினை அல்ல.
இதன் பின்னர் எழுந்த உறுப் பினர் சயந்தன் குறித்த கூட்டம் தொடர்பில் முதலமைச்சர் எமக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில், எமது தற்துணிவின் அடிப் படையிலேயே கலந்து கொள்வதா இல்லையா என்ற முடிவு எடுக்கப் பட வேண்டியிருந்தது. முதலமைச் சர் எமக்கு எந்தவித தெளிவான பதிலையும் வழங்கவில்லை.

ஆகையினால் பத்திரிகையை இப்போது நாங்கள் குறை சொல்லி எந்த பயனுமில்லை. ஆளுநருக்கு எழுதப்பட்ட கடிதத்தை வைத்து கொண்டு ஆளுநரின் கூட்டத்தை பகிஷ்கரிப்பதாக பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. உண்மையில் அந்த செய்தியை அங்கு கிடைக்க வைத்தது யார்? என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வடக்கு மாகாண சபை மூலமாக அந்த பத்திரிகைக்கு எதி ராக வழக்கொன்றினை தாக்கல் செய்ய முடியாதா? என்பது தொடர் பில் ஆராயப்படல் வேண்டும் என் றார் உறுப்பினர் கேசவன் சயந்தன்.

சபைக்குறிப்பேட்டிலிருந்து நீக்கம் 
உறுப்பினர் ஆனோல்ட், வலம்புரியை மஞ்சள் பத்திரிகை எனக் கூறியது  தவறு என சுட்டிக்காட்டிய அவைத்தலைவர் அதனை சபைக் குறிப்பு ஏட்டிலிருந்தும் நீக்குவதாக அறிவித்தார். 
இதேவேளை வலம்புரியை மஞ்சள் பத்திரிகை என்று குறிப்பிட்டதற்கும் இன்னொரு ஊடகத்தின் செய்தியாளரை விமர்சித்தமைக்கும் ஊடகவியலாளர்கள் தமது கடும் கண்டனத்தை அவைத் தலை வருக்கு தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila