மேற்கு வங்க மாநில முதலமைச்சராக மம்தா பானர்ஜி இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்க உள்ளார்.
மேற்கு வங்கத்திலுள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் 6 கட்டங்களாக இடம்பெற்றதோடு, அதில், ஆளும் திரிணாமுல் கட்சி 294 தொகுதிகளில் 211 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் மேற்கு வங்க மாநில முதலமைச்சராக மம்தா பானர்ஜி இன்று பதவியேற்கவுள்ளதோடு, அவருடன் 41 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொல்கத்தாவில் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில், மேற்கு வங்க ஆளுநர் கே.என்.திரிபாடி இவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
மேலும் குறித்த பதவியேற்பு விழாவில், மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, பாபுல் சுப்ரியோ, வங்கதேச தொழில்துறை அமைச்சர், பூடான் பிரதமர், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, டெல்லி முதல்வர் கேஜரிவால், உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.