ஆபத்தான வாள், கத்திகளை ஒப்படைக்க யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவு


சட்டத்துக்கு முரணான வாள்கள், ஆபத்தான கத்திகள் என்பவற்றை கம்மாலைகள் உற்பத்தி செய்வதற்குத் தடையுத்தரவை பிறப்பித்துள்ள யாழ்.மேல் நீதிமன்றம், அவற்றை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உடனடியாகக் கையளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. அத்துடன் ஆபத்தான கத்திகளைக் காட்டி அச்சுறுத்தி கொள்ளைகள் இடம்பெறுவதை யடுத்தே இந்த உத்தரவை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பிறப்பித்துள்ளார். 
அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சட்டத்திற்கு முரணான வகையில் வாள்கள் வைத்திருப்பதும், ஆபத்தான கத்திகளை வைத்திருப்பதும் சட்டப்படி குற்றமாகும். இவற்றை உடைமையில் வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். 

பொலிஸார்; நடத்தும் தேடுதல் நடவடிக்கைகளின்போது, இந்த ஆயுதங்களை உடைமையில் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட் டால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 
எனவே, இத்தகைய ஆபத்தான ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் உடனடியாக குடாநாட்டில் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். அவற்றை அந்தந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.

சட்டத்திற்கு முரணான முறையில் வாள்கள், ஆபத்தான கத்திகள் என்பன குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதனால், யாழ்.குடாநாட்டில் உள்ள கம்மாலைகளில் இவற்றை உற்பத்தி செய்வதை இந்த நீதிமன்றம் தடை செய்கின்றது.

நீதிமன்ற உத்தரவை மீறி இவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்தால் அல்லது யாருக்கும் வழங்கினால் அத்தகைய கம்மா லைகளின் உரிமம் உடனடியாக ரத்துச் செய்யப்படும். அத்தகைய ஆயுதங்களை உற்பத்தி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்.

யாழ்.குடாநாட்டில் பல கம்மாலைகள் சட்டத்துக்கு முரணான வாள்கள் ஆபத்தான கத்திகள் என்பவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்வதையே முக்கிய தொழிலாகக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. 

குற்றச் செயல்களில் சம்பந்தப்படுகின்ற வாள்கள், ஆபத்தான கத்திகள் கைப்பற்றப்ப டும்போது, அவற்றை உற்பத்தி செய்யச் சொன்னது யார், யார் அவற்றை உற்பத்தி செய்தது, எந்தக் கம்மாலைகளில் அவைகள் உற்பத்தி செய்யப்பட்டன என்பது போன்ற தகவல்களை பொலிஸாரின் விசாரணையின் போது சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்படும். 

இந்தத் தகவல்களின் அடிப்படையில் வாள்கள் கத்திகளை உற்பத்தி செய்த கம்மாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் அவற்றில் பணியாற்றும் ஊழியர்களும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். அந்தக் கம்மாலைகளின் உரிமமும் ரத்துச் செய்யப்படும். இவ்வாறு நீதிபதி இளஞ்செழியன் தமது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila