வடக்கின் ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயின் பதவி நிலை என்பது மிகவும் பொறுப்பானது.
மாகாண சபையின் அமைப்பில் ஆளுநருக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களைக் கொண்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட புலத்தைச் கட்டியயழுப்புகின்ற தார்மீகக் கடமை ஆளுநருக்கு உண்டு.
இலங்கையின் ஏனைய மாகாணங்களை விட, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருக்கக் கூடிய ஆளுநர்களின் பணியும் பொறுப்பும் அதிகமானது என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்த வகையில் வட மாநிலத்தின் ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிடமிருந்து வடபுலம் நிறையவே எதிர்பார்க்கின்றது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சேவையாற்றுகின்ற ஒரு சந்தர்ப்பம் ஆளுநர் ரெஜினோல்ட் கூரேக்கு கிடைத்துள்ளது.
அந்தக் கிடைப்பனவை தமிழ் மக்களின் முன்னேற்றத்துக்காக அவர் பயன்படுத்துவார் என்பது தமிழ் மக்களின் அசையாத நம்பிக்கை.
இருந்தும் வடக்கின் ஆளுநர் அவர்கள் சில சந்தர்ப்பங்களில் தான் ஆளுநர் என்பதை மறந்து ஓர் அரசியல்வாதி போல நடந்து கொள்வதை காணமுடிகின்றது.
படைத்தரப்பும் அரசும் சரியான முறையில் நடந்து கொள்ளாதவிடத்து இன்னொரு பிரபாகரன் தோன்றினால் அதைக் குறைசொல்ல முடியாது என்ற சாரப்பட வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இஃது மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு முதலமைச்சர், அரசின் அசமந்தப் போக்குத் தொடர்பில் கூறவேண்டியதொரு கருத்து. இக்கருத்தில் நிறைந்த உண்மைகளும் உண்டு.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆயுதம் ஏந்துவதற்கு முன்னதாகவே இலங்கைப் பாராளுமன்றத்தில் தந்தை செல்வநாயகம் அவர்கள் ஒரு கருத்தைக் கூறியிருந்தார்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இலங்கை அரசாங்கம் தீர்வுகாணத் தவறுமாயின் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவார்கள் என்பதே அவர் கூறிய கருத்தாகும்.
எனினும், அன்றைய சிங்கள அரசியல்வாதிகள் செல்வநாயகத்தின் கருத்தைக் கேலி செய்தனர். இது நடக்கின்ற காரியமா? என்று எள்ளிநகையாடினர்.ஆனால் தந்தை செல்வநாயகம் கூறியது தீர்க்க தரிசனமானது என்பதை இந்த நாடும் உலகமும் பின்னாளில் உணர்ந்து கொண்டது.
ஆனால் ஒருவர் கூறுகின்ற கருத்து எத்தன்மையது? எச்சந்தர்ப்பத்தில் கூறப்படுகின்றது? கருத்தைக் கூறியவரின் நடுநிலைத் தன்மை போன்ற வற்றைப்பற்றி சிந்தித்துக் கருத்து தெரிவிப்பதே பொருத்துடையது.
எனினும், வடக்கின் முதலமைச்சர் கூறிய கருத்துக்கு ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அவசரப்பட்டு மறுத்தான் விட்டமை நாகரிகமாகத் தெரியவில்லை.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணத் தவறினால் இந்த நாட்டில் மீண்டும் ஆயுதப் போர் வெடிக்கலாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட நிதானமான அரசியல் தலைவர்களே கூறியுள்ளனர்.
நிலைமை இதுவாக இருக்கையில், வடக்கின் முதல்வர் கூறிய கருத்தை மறுதலித்து, பிரபாகரன் இனித் தோன்றவே முடியாது என கருத்துரைத்தமையானது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த மீதான விசுவாசமோ? ஆளுநர் இவ்வாறு கருத்துரைக்கக் காரணம் என்று எண்ணத் தோன்றும்.
எனவே இது போன்ற விடயங்களில் கெளரவ ஆளுநர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது தமிழ் மக்களின் பெரு விருப்பமாகும்.