
வடக்கு மாகாண ஆளுநராகப் பொறுப்பேற்ற நாளிலிருந்து இனக்கலப்பு விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார் ரெஜினோல்ட் குரே.வடக்கு மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்ட போது, அரசியல் மட்டத்தில் அவர் பற்றிய பெரியளவிலான எதிர்பார்ப்புகள் காணப்பட்டன. ஆனாலும், அவர் பதவியேற்பு நிகழ்வில் வெளியிட்ட கருத்துக்கள் தமிழ் மக்களை முகம்சுழிக்க வைத்திருந்தன.
சாதி, சமயம், இனம் என்ற தனித்துவம் பாராமல், கலப்பு திருமணங்களை மேற்கொள்வதன் மூலமாக நாட்டில் உண்மையான சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என்று அவர் அப்போது கூறியிருந்தார். அவரது அந்தக் கருத்து, தமிழ் மக்கள் மத்தியில், புதிய அச்சத்தைத் தோற்றுவித்ததும் உண்மை.
இதுவரை காலமும் தமிழ் மக்கள் இனப்படுகொலை, இன அழிப்புகளைத்தான் எதிர்கொண்டு வந்தனர். ஆனால், இனக்கலப்பின் ஊடாக, இனச்சுத்திகரிப்பு அபாயம் ஒன்றுக்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்பட்டு விடுமோ என்ற பரவலான அச்சம், ஆளுநரின் கருத்தினால் தமிழ் மக்களிடம் ஏற்பட்டிருந்தது. இனக்கலப்பு திருமணங்கள் பற்றிய வட மாகாண ஆளுநரின் கருத்துக்கள், அவர் பற்றிய எதிர்பார்ப்புகளை ஆரம்பத்திலேயே நொறுக்கி விட்டிருந்தன.
இப்போது அவர், வடக்கில் எல்லா இன மாணவர்களும் கற்கும் பாடசாலைகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். வன்னியில், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
வடக்கில் எல்லா இன மாணவர்களும் கற்கும் பாடசாலைகளை உருவாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள பிரச்சினைகளை அறியாமல் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டிருப்பார் என்று கருதுவதற்கில்லை.
நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்று வடக்கு மாகாணம் ஒன்றும், மூவின மக்களும் பரவலாகச் செறிந்து வாழும் பகுதி அல்ல. வடக்கின் பெரும்பாலான பகுதியில் தமிழ் மக்கள் தான் வசிக்கின்றனர்.
தமிழ், முஸ்லிம் மாணவர்கள் இங்கு ஒன்றாகவே கல்வி கற்கின்ற நிலை சில இடங்களில் காணப்பட்டாலும், சிங்கள மாணவர்கள் இணைந்து கற்கும் நிலை இல்லை. குறைந்தளவு சிங்கள மாணவர்களே வடக்கில் இருப்பதாலும் மொழிப்பிரச்சினை காரணமாகவும், அவ்வாறான சூழலுக்கு வாய்ப்பிருக்கவில்லை.
இந்த நிலையில், வடக்கில் மூவின மாணவர்களும் கல்வி கற்கும் பாடசாலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற ஆளுநரின் நிலைப்பாடு, வடக்கில் சிங்களக் குடியேற்றங்களை ஊக்குவிக்கும் ஒரு விடயமாகவே தென்படுகிறது.
ஏற்கனவே இனக்கலப்புத் திருமணங்கள் பற்றிய கருத்தை வெளியிட்டவர் என்ற வகையிலும், கொழும்பில் தமிழர்கள் வீடுகளை வாங்கி குடியேறுவது போன்று, வடக்கிலும் சிங்களவர்கள் குடியேறுவதில் தவறில்லை என்று கூறியவர் என்ற வகையிலும், இந்த விடயத்திலும் ஆளுநரின் கருத்துக்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
வடக்கில், மூவின மாணவர்களும் கற்கும் பாடசாலைகளை உருவாக்க வேண்டுமானால், மூவின மக்களும் ஒரே பகுதியில் செறிந்து வாழும் நிலையை உருவாக்க வேண்டும். இதன் அர்த்தம் வடக்கின் தமிழர்களின் செறிவைக் குறைப்பதேயாகும்.
வடக்கில் மூவினங்களும் செறிந்து வாழும் நிலையை ஏற்படுத்துவதன் மூலம், தமிழரின் தனித்துவமான பிரதேசம், தாயகப் பிரதேசம் என்ற கோட்பாட்டை சிதைக்க அரசாங்கம் முனைகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வடக்கும் கிழக்கும் தமிழர்களின் தாயகப் பகுதிகளாக இருந்தன. ஆனால் இன்று சிங்களக் குடியேற்றங்களின் மூலம் கிழக்கில் தமிழர்களின் தனித்துவம் பறிக்கப்பட்டு, அவர்கள் சிறுபான்மையினராக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி, தமிழர்கள் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலையில், தமிழர்கள் தமக்குச் சொந்தமான வயல்களில் விவசாயம் செய்வதற்கு பொலிஸ் பாதுகாப்பைப் பெற வேண்டிய அளவுக்கு சிங்களக் குடியேற்றங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. மூவின மக்களும் செறிந்து வாழுகின்ற போதிலும், கிழக்கில் தமிழர்களின் நிலங்களும், உரிமைகளும் தான் பறிக்கப்பட்டு நசுக்கப்படுகின்றன.
அதுபோன்றதொரு நிலையை வடக்கிலும் உருவாக்குவதற்காகவே, தமிழரின் தனித்துவத்தைச் சிதைப்பதற்காகவே சிங்களக் குடியேற்றங்கள், இனக்கலப்புத் திருமணங்கள் என்ற புதிய வடிவங்களில் ஆக்கிரமிப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன. இனப்பிரச்சினைக்கு தமிழர்கள் எதிர்பார்க்கின்ற தீர்வை வழங்குவதற்குப் பதிலாக, வேறொரு வடிவத்தில் தீர்வைத் திணிக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது.
அரசாங்கத்தின் பிரதிநிதியான ஆளுநர் அந்த நிகழ்ச்சி நிரலின் கீழ் தான் செயற்படுவார் என்பதில் சந்தேகமில்லை.தமது பாரம்பரிய தாயகப் பிரதேசமான வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட்ட, தம்மைத் தாமே ஆளுகின்ற உரிமையைக் கொண்டதான ஒரு தீர்வையே தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.இது தமிழர்களின் தனித்துவத்தை தொடர்ந்து நிலைத்திருக்க வைக்கும் என்பதும், அவர்களின் அடையாளத்தை அழியாமல் பாதுகாக்கும் என்பதையும் அரசாங்கமும், சிங்கள அரசியல் தலைமைகளும் நன்றாகவே அறியும்.
எனவே தான், தமிழர்களின் தனித்துவத்தை ஏற்றுக் கொள்ளாத வகையில், அதற்கு அங்கீகாரத்தை அளிக்காத வகையில், தீர்வு ஒன்றைத் திணிக்க முனைகிறது அரசாங்கம்.நல்லிணக்க செயற்றிட்டம் என்ற போர்வையில், இனங்களுக்கிடையிலான உறவுகளைப் பலப்படுத்தும் திட்டம் என்ற போர்வையில், தமிழர்களுக்கான தனித்துவமான தீர்வு ஒன்றை வழங்குவதைத் தட்டிக்கழிப்பதே அரசாங்கத்தின் திட்டம்.
தமிழர்களின் அபிலாஷைகளை ஏற்காமல், தனித்துவத்தை அங்கீகரிக்காமல் பிரச்சினையைத் தீர்ப்பதே அரசாங்கத்தின் கொள்கையாகத் தெரிகிறது. அதற்கேற்றவாறு தான், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே செயற்பட்டு வருகிறார். இனக்கலப்பு, கலப்புப் பாடசாலைகள், போன்ற அவரது திட்டங்களின் ஊடாக தமிழர்களின் தனித்துவத்தை கெடுப்பதற்கே முயற்சிக்கப்படுகிறது.
ஒரு இனத்தின் தூய்மையைக் கெடுப்பதை இனச்சுத்திகரிப்பு என்கிறது ஐ.நாவின் பிரகடனம். ஒவ்வொரு இனத்துக்கும், மொழிக்கும் தனித்துவம் இருக்கிறது. அதனை உலகம் அங்கீகரித்திருக்கிறது.அழியும் நிலையிலுள்ள இனங்களையும், மொழிகளையும் காப்பாற்ற உலகளாவிய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.ஆனால், வடக்கில்தான், ஒரு இனத்தின் தனித்துவத்தையும், மொழியின் தனித்துவத்தையும் அழிப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
தற்போதைய ஆட்சியிலும் தொடர்ந்து கொண்டிருக்கும், சிங்களக் குடியேற்றங்கள், இராணுவக் குடியிருப்புகள் இந்த தனித்துவத்தை அழிக்கும் இலக்கை முன்வைத்தே செயற்படுத்தப்படுகின்றன.வடக்கில் தமிழரின் தனித்துவத்தை அழிப்பதன் மூலம், இனக்கலப்பை உருவாக்குவதன் மூலம் நல்லிணக்கத்தை, அமைதியை ஏற்படுத்தி விடலாம் என்று அரசாங்கம் செயற்படுமேயானால், அது ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தும்.
தமிழ் மாணவர்கள் தமது தனித்துவமான கல்வியும், மொழியும் நசுக்கப்பட்ட போது தான், ஆயுதமேந்தத் தலைப்பட்டார்கள் என்ற வரலாற்றை அவர்கள் அவ்வளவு இலகுவாக மறந்துவிடக்கூடாது.