யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு WIFI இணைப்பை விட வசிப்பதற்கு வீட்டினைக் கட்டிக்கொடுக்க வேண்டியதே பிரதானமானது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்த அரசாங்கம் 10 லட்சம் செலவில் வீட்டினைக் கட்டிமுடிக்க முடியுமான போதிலும், 21 இலட்சம் செலவில் வீட்டினைக் கட்டிகொடுக்க முனைவதாகவும் குற்றம் சுமத்தினார்.
இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு யாழ்ப்பாண வீட்டுத்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது, அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
‘தலா பத்து லட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கக் கூடிய 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தினை 21 இலட்சம் (2.1 மிலிலியன்) ரூபாயில் கட்டிக் கொடுக்க இந்த அரசாங்கம் தீவிரம் காட்டி வருகின்றது. இதன்மூலம் மேலதிகமான 11 இலட்சம் ரூபா ஊழல் செய்யப்படவுள்ளது.
இந்த அரசாங்கம் இலங்கையின் காலநிலையறிந்து இந்த வீட்டுத்திட்டத்தினை தயார் செய்யவில்லை. இந்த பொருத்து வீட்டுத் திட்டமானது ஐரோப்பிய நாடுகளுக்கு பொருந்தும். எனினும் கடும் வெயில் நிலவும் வெப்பமான காலநிலையினைக் கொண்ட யாழ்ப்பாணத்திற்கு இந்த வீட்டுத்திட்டம் உகந்தது அல்ல.
அதுமாத்திரமில்லாமல் இந்த அரசாங்கம் கட்டிக் கொடுக்கவுள்ள வீட்டுத்திட்டத்தில், WIFI இணைப்பு, தொலைக்காட்சி என்பவற்றை வழங்குகின்றது. பாதிக்கப்பட்ட மக்கள் WIFIயோ, தொலைக்காட்சியோ கோரவில்லை. அவர்கள் வாழ்வதற்கு உகந்த வீடு ஒன்றையே கோருகின்றனர்.
வடமாகாண முதலமைச்சர் 10 இலட்சம் செலவில் வீட்டினை கட்டிக்கொடுக்க முடியும் என்று குறிப்பிடுகின்றார். ஆனால் அரசாங்கம் 2.1 மில்லியன் செலவில் வீட்டினைக் கட்டிக்கொடுக்க முனைகின்றது. இதன்மூலம் மேலதிகமாக 11 இலட்சம் ரூபா வீண் செலவு செய்யப்படுகின்றது.
10 லட்சம் செலவில் 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தினை அமைப்பதென்றால் 65 ஆயிரம் மில்லியன் செலவில் அமைக்க முடியும், ஆனால் 2.1 மில்லியன் செலவில் அமைப்பதென்றால், 136500 மில்லியன் செலவில் அமைக்கப்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.’ என்றும் கூறினார்.