
தமிழர்களுக்கு நிர்வாகம் செய்யத் தெரியாது என்று வெளிநாட்டுப் பிரதிநிதி ஒருவர் கூறியபோது, நெஞ்சு வெடிக்கும் போல் இருந்தது.
இலங்கை முழுமைக்கும் நிர்வாகத்தை செய்து காட்டிய தமிழினத்துக்கா இப்படி ஒரு அவப்பெயர் என்று நினைக்கும் போது ஏங்காத தமிழ் நெஞ்சம் இருந்தால் அது கல்லை ஒத்த மனம் என்றே சொல்ல வேண்டும்.
சேர் பொன்.இராமநாதன் போன்ற மேதைகள் தமிழர்களின் உரிமை தொடர்பில் எதுவும் அலட்டிக் கொள்ளாததற்கு காரணம் சிங்களவர்களை வழிநடத்துவர்கள் தமிழர்கள் தானே!
எந்தக் காலத்திலும் தமிழர்களை எந்த விதத்திலும் சிங்களவர்களால் தோற்கடிக்க முடியாது என்ற நினைப்பே தமிழர் உரிமை தொடர்பிலான அக்கறையின்மைக்குக் காரணமாக இருந்தது. ஆனால் சேர் பொன்.இராமநாதன் போன்றவர்களின் நினைப்பை முறியடித்து சிங்கள மக்கள் அறிவியலிலும் அரசியலிலும் இராஜதந்திரத்திலும் பன்மடங்கு முன்னேற்றம் கண்டனர்.
ஒரு இனத்தின் அறிவியல்சார் முன்னேற்றம் தடுக்கப்பட முடியாது என்பது உண்மையாயினும் அந்த உண்மை தமிழர் விடயத்தில் மட்டுமே ஏனோ பிழைத்துவிட்டது. நிர்வாகத் திறனும் புத்திசாதுரியமும் மிகுந்து இருந்த தமிழினத்தின் சமகால நிலைமை எதிர்மறையாக இருப்பதுதான் வேதனைக்குரியது.
நம் அரசியல்வாதிகளிடம் இராஜதந்திரம் இல்லை; சமூக நோக்கு இல்லை; ஒற்றுமை இல்லை. இதன் காரணமாக எங்கள் உரிமை என்ற விடயத்தில் நாம் முன்னெடுக்கும் அத்தனை விடயங்களும் தோற்றுப் போகின்றன. இதற்குக் காரணம் எங்களின் நடவடிக்கைகள், தீர்மானங்கள் அறிவியல் சார்ந்தவை இல்லை என்பதே நிஜம்.
இதற்கு நல்ல உதாரணம் கலைஞர் கருணாநிதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தியாகும். நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வி கண்டது.
செல்வி ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக மீண்டும் செல்வி ஜெயலலிதா தெரிவானார். இந்நிலையில் தமிழக சட்ட சபையில் எதிர்க் கட்சிப் பதவியை பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதிக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைத்த தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், முதலமைச்சராக தெரிவான செல்வி ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெரிவிக்காமல் விட்டுவிட்டார்.
அதாவது தோற்றவரை வாழ்த்தி வென்றவரை வாழ்த்தாமல் விட்ட எங்களின் இராஜதந்திரம் எத்தகையது என்பதை இப்போதாவது நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தேவையாயின் கலைஞர் கருணாநிதிக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் சம நேரத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தால் கூட அது தகும் எனலாம்.
இதைவிடுத்து கருணாநிதியை வாழ்த்திவிட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவை வாழ்த்தாமல் விட்டால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்து மல்லவா? ஏதோ நல்ல காலத்துக்கு வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவை வாழ்த்தியமையால் எங்கள் அரசியல் இராஜதந்திரம் காப்பாற்றப்பட்டது என்று ஆறுதல் அடைய முடிகிறது அவ்வளவுதான்.
- வலம்புரி