மஹிந்த ஆட்சியில் சோதனைச் சாவடிகள் இல்லை: கோட்டாபய


மஹிந்த நாட்டின் ஆட்சி பொறுப்பை தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திடம் கையளித்த போது நாட்டில் ஒரு சோதனைச் சாவடியும் காணப்படவில்லை எனவும், நாட்டில் மிகவும் பாதுகாப்பான சூழல் காணப்பட்டதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கடந்த 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தேசிய நல்லிணக்கத்திற்காக நாம் முன்னெடுத்த பணிகளில் தற்போதைய அரசாங்கம் ஓரு சத வீதத்தை கூட செய்யவில்லை. போர் முடிந்து இரண்டரை வருடத்திற்குள் மிதி வெடிகளை அகற்றி மக்களை மீள் குடியமர்த்தினோம். வீடுகள் அமைத்து கொடுத்தோம்.
முக்கிய இராணுவ முகாம்களை தவிர ஏனைய அனைத்து முகாம்களையும் அகற்றி மக்களின் காணிகளை மீள வழங்கினோம். நாம் ஆட்சியை விட்டு ஒதுங்கும் போது நாட்டில் ஒரு சோதனை சாவடி கூட இல்லை. மிகவும் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தினோம். ஈ.பி.டீ.பி போன்றவர்களுக்கு பாதுகாப்பிற்காக வழங்கிய ஆயுதங்களை மீள பெற்றுக்கொண்டோம். 13 ஆயிரம் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்தோம். இதில் ஒரு சதவீதத்தை கூட தற்போதைய அரசாங்கம் செய்ய வில்லை.
ஆனால் நல்லிணக்கம் என கூறிக்கொண்டு இராணுவத்திற்கு எதிராக அரசாங்கம் செயற்படுகின்றது. இதனால் 79 சதவீதமான சிங்கள மக்கள் மத்தியில் குரோத நிலையே உருவாகும். இவ்வாறு ஒரு போதும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. இரு இனங்களுக்கு இடையில் மோதல்களை உருவாக்கி குறுகிய அரசியல் நலன்களை பெற்றக் கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது.
ஆட்சி மாற்றத்திற்கு உதவியதற்காக சர்வதேச நாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முயற்சிக்க கூடாது. இதனையே நாங்கள் கண்டிக்கின்றோம்.
மேலும், தற்போதைய அரசாங்கத்தின் அடிமைத்தன போக்கை அனுமதிக்க முடியாது. உயிருடன் இருக்கின்றனரா, இல்லையா என்று கூட தெரியாது பிரகீத் எக்னெலிகொட காணாமற்போன சம்பவம் தொடர்பில் இராணுவ புலனாய்வு அதிகாரி சிறை வைக்கப்பட்டுள்ளார். இதனை மாற்ற வேண்டும்.
பொதுபல சேனா எனது அமைப்பு என கூறி பிரசாரம் செய்யப்பட்டமையினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு முஸ்லிம் மக்களின் வாக்குகள் குறைந்தன.
ஆனால் அவர்களும் இன்று உண்மையை உணர்ந்துக் கொண்டுள்ளனர். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் கட்டியெழுப்பி விடலாம். ஆனால் சமஷ்டி என கூறி நாட்டை துண்டாடி விட்டால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே மக்கள் ஒன்றிணைய வேண்டும்.
நான் முதல்வனா, இரண்டாமவனா என்பது தற்போதைய பிரச்சினையல்ல. தேவைப்பட்டால் முதல்வனாகவும் சிறைக்கு செல்லவும் தயார்’ எனவும் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila