இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, சர்வதேச யுத்த விதிமுறைகளை மீறும் வகையில், மக்களுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
வன்னியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்த அமைப்பான ‘த ஹலோ ட்ரஸ்ட்’ வெளியிட்டுள்ள புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு, சர்வதேச ஊடகமொன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 2009ஆம் ஆண்டு சுண்டிக்குளம் பகுதியில் கொத்துக்குண்டின் பாகமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, சாலை பிரதேசத்தில் வெடிக்காத நிலையில் ஒரு கொத்துக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2011ஆம் மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் ஆணையிறவு, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேசங்களுக்கு அருகில் 42 கொத்துக்குண்டுகளின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக ஹலோ ட்ரஸ்ட் கண்டிவெடி அகற்றும் அமைப்பின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹலோ டரஸ்ட் நிறுவனத்தால் பதிவுசெய்யப்பட்ட குறித்த கொத்துக்குண்டுகளின் புகைப்படங்கள், பாதுகாப்பு கருதி வெளியிடப்படாத நிலையில், தற்போதே சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கப்பட்டுள்ளன. குறித்த குண்டுகளை இணங்கண்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆய்வாளர் ஒருவர் அவை ரஷ்ய நாட்டு தயாரிப்பென உறுதிப்படுத்தியுள்ளார்.
இறுதி யுத்தத்தின்போது தாக்குதல் நடத்தப்பட்ட புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அருகாமையில், கொத்துக்குண்டுக்கு பயன்படுத்தப்படும் வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக, ஐ.நாவின் நிபுணர் ஒருவர் தெரிவித்திருந்தமை தொடர்பான மின்னஞ்சல் ஒன்று, கடந்த 2012ஆம் ஆண்டு கசிந்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இறுதி யுத்தத்தின்போது, சர்வதேச யுத்த விதிமுறைகளை மீறி இலங்கை படையினர் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும் ஆயதங்களை பயன்படுத்தியதாக ஏற்கனவே பல சர்வதேச அமைப்புகள் குற்றஞ்சாட்டியிருந்தன. இறுதி யுத்தத்தில் சுமார் 40 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டமைக்கு குறித்த குண்டுகளே காரணமாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்போதைய மஹிந்த அரசாங்கம் அதனை முற்றாக மறுத்திருந்தது. தற்போதைய அரசாங்கம்கூட, 40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை என்றே தொடர்ந்தும் கூறி வருகிறது.
இலங்கையில் பாரிய யுத்த மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், கலப்பு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டுமென வேண்டுமென குறிப்பிட்டு, கடந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து தற்போது நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை பேரவையில் அதன் ஆணையாளரால் வாய்மூல அறிக்கையொன்றும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் வெளியாகியுள்ள குறித்த புகைப்படங்கள், இலங்கைக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்துமென தெரிவிக்கப்படுறது.
குறிப்பாக கொத்துக்குண்டுகளின் பாகங்கள், தாக்குதல் நடத்தப்படவில்லையென தெரிவிக்கப்பட்ட அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையானது, இலங்கைக்கு பல நெருக்குதல்களை ஏற்படுத்தும் என்றும் இதற்கு பதில்கூற வேண்டிய கட்டாயத்திற்கு கடந்த மஹிந்த அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்படும் எனவும் பல தரப்புகள் குறிப்பிடுகின்றன.