கிழக்கில் சுமணரத்ன தேரர்; தெற்கில் ஞானசார தேரர். இவர்களின் நடவடிக்கைகளால் கவலையுற்ற மனக்களைப்பில் உறக்கம் அணைத்துக் கொண்டது.
அந்நேரத்தில் கெளதம புத்தபிரான் என் முன் தோன்றி மகனே! ஏன் கவலைப்படுகிறாய்? என்று கேட்டார்.
சுவாமி! இந்த மண்ணில் வாழ எனக்கு பிடிக்கவில்லை என்றேன். என் பதிலோடு சம்பாசணை தொடர்ந்தது.
புத்தர்: மகனே! இந்த மண்ணில் உனக்கென்ன வெறுப்பு. மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்று சம்பந்தர் பாடியுள்ளார் அன்றோ!
நான்: சுவாமி, அவர் பாடிய மண் தமிழகம். நானோ இருப்பது இலங்கை. அதிலும் தமிழன் ஆதலால்தான் எனக்கு இந்த மண்ணில் வாழப்பிடிக்கவில்லை.
புத்தர்: இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நடப்பது உண்மைதான். எனினும் இப்போது நிலைமை சற்றுத்தணிவுற்றுள்ளது. ஆகையால் இந்த மண்ணில் வாழ்வதற்கு ஏன் விருப்புக் கொள்ளவில்லை.
நான்: சுவாமி, இது உங்களின் நாடு என்கிறார்கள்.
புத்தர்: சிரித்தபடி மகனே! என்னைப் பற்றி அறியாதவர்கள்தான் இதை என் நாடு என்பார்கள். எதுவும் வேண்டாம் என்று துறவு பூண்டவன் நான். எல்லாவற்றையும் துறந்த எனக்கு நாடா...?
நான்: சுவாமி! உங்களின் போதனைகளை முன்னெடுப்பதாகக்கூறி காவி தரித்து புத்த பிக்குகள் என்ற பேரில் சிலர் இனவாதம் பேசி வருகின்றனர்.
புத்தர்: மகனே! இது அறியாமை. என் போதனைகளை பின்பற்றும் எவரும் இனவாதம் பேசமாட்டார்.
நான்: இல்லை சுவாமி. தேரர்கள் இனவாதம் பேசுகின்றனர்.
புத்தர்: உதாரணத்துக்கு யாரையும் சொல்ல முடியுமா?
நான்: ஆம் சுவாமி! கிழக்கு மாகாணத்தில் சுமணரத்ன தேரர். தெற்கில் ஞானசார தேரர். இவர்கள் காவி தரித்தபடி தமிழ் மக்களை கண்டபாட்டில் திட்டித் தீர்க்கின்றனர்.
(புத்தர் தன்தோளில் கிடந்த உத்தரியத்தை எடுத்து தன் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்)
புத்தர்:மகனே! அவர்கள் புத்த பிக்குகளே அல்ல. என் போதனையைப் பின்பற்றும் ஒரு பெளத்த துறவி மண்ணுயிர் எதற்கும் தீங்கு செய்யார்.
ஆனால் இவர்கள் அப்பேற்பட்டவர்கள் அல்ல. சுமணரத்ன தேரர் தமிழ் மக்களை திட்டித் தீர்ப்பது கண்டு நான் கவலையுற்றேன்.
ஞானசார தேரர் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் என்ற பதவியை வைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராகக் கடுமையாக செயற்படுகிறார். இவையயல்லாம் என் போதனைக்கு எதிரானவை.
என்ன செய்வது! என் போதனையைப் பின்பற்றுவதாகக் கூறி இவர்கள் அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர்.
புத்த பிக்கு ஒருவர் பொது பல சேனா என்ற அமைப்புக்கு பொதுச் செயலாளராக இருப்பதே என் தத்துவத்துக்கு எதிரானது. இத்தகையவர்களை புத்த பிக்குகள் என்று யாரும் பார்த்துவிடக்கூடாது. பெளத்த துறவு என்பது தனித்து காவியும் கையில் விசிறியும் அல்ல.
அது புனிதமானது. அன்பு மயமானது. அகத்தும் புறத்தும் பற்றுக்களைத் துறந்து உலக ஜீவராசிகள் மீது தெய்வீக அன்பு கொண்டு சேவை செய்வது. ஆகையால் வெளித் தோற்றத்தை வைத்துக் கொண்டு இவர்பெளத்த துறவி என முடிவு செய்து விடாதீர்கள்.
நான்: சுவாமி நீங்கள் கூறுவது சரியாயினும் இந்த நாட்டில் காவிக்குக் கடும் மதிப்பு இருக்கிறதே!
புத்தர்: என்ன செய்வது! தெரியாத்தனமாய் இலங்கையில் கால் பதித்ததால் வந்த வினை. இலங்கைக்கு வந்து போன எனக்கே துன்பம் என்றால் அங்கு வாழும் உனக்கு கடும் துன்பம்தான். சரி எதற்கும் அந்த இரண்டு தேரர்களையும் கடுமையாக எதிர்க்கப்பாருங்கள். நீங்கள் எதிர்த்தால் அவர்கள் அடங்குவர்.
இவ்வாறு கூறிய புத்த பிரான் திடீரென வானெ ழுந்தபோது, சுவாமி என்று கத்தி விழித்தேன். கண்டது கனவு என்றுணர்ந்தேன்.