இராணுவ முகாம்களுக்கு மத்தியிலையே யாழ்.நடேஸ்வரா கல்லூரி மற்றும் யாழ்.நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயம் இன்றைய தினம் சொந்த இடங்களில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன.
கடந்த 26 வருடகாலமாக உயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் இருந்த குறித்த பாடசாலைகள் இரண்டும் கடந்த மார்ச் மாதம் 12ம் திகதி ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா பாடசாலை மீளவும் சொந்த இடத்தில் இயங்குவதற்கு அனுமதித்தார். இருந்த போதிலும் இன்றைய தினமே பாடசாலை சொந்த இடத்தில் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.
இன்றைய தினம் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் , இராணுவ உயர் பாதுகாப்பு வலய வேலிகள் எவையும் அகற்றப்படவில்லை. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் காங்கேசதுறை வீதியில் உள்ள உயர் பாதுகாப்பு வலய எல்லை அகற்றப்படாது உள்ளது.
அங்கு கடமையில் உள்ள இராணுவ பொலிஸ் மற்றும் பொலிசார் ஆகியோர் பாடசாலைக்கு செல்வோரை மறித்து 'எங்கு செல்கின்றீர்கள் ' என சிங்களத்தில் கேட்ட பின்னர் 'பாடசாலைக்கு செல்கின்றோம் ' என கூறிய பின்னரே செல்ல அனுமதித்தனர்.
அத்துடன் பாடசாலை வளாகத்தினுள் பொலிசார் மற்றும் பெருமளவான புலனாய்வாளர்களின் நடமாட்டங்கள் அதிகளவில் காணப்பட்டன.
புலனாய்வாளர்கள் பாடசாலை ஆரம்ப நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகள் , மாணவர்கள் , ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என அனைவரையும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.
அதேவேளை பாடசாலையை சூழ முட்கம்பி வேலிகள் அடிக்கப்பட்டு உள்ளன. அத்துடன் பாடசாலையை சூழவுள்ள பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை.
இந்நிலையில் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் ஆசிரியர்கள் தினமும் உயர் பாதுகாப்பு வலய எல்லையில் உள்ள இராணுவ பொலிசாரிடம் கூறிவிட்டே பாடசாலைக்கு வர வேண்டிய நிலை காணப்படவுள்ளது.
மாணவர்கள் சுதந்திரமான கல்வியினை கற்பதற்கு உயர் பாதுகாப்பு வலய வேலிகள் அகற்றப்பட வேண்டும் அத்துடன் பாடசாலையினை சூழவுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.