
கொஸ்கம, சாலாவ பகுதியில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்துக்கு சொந்தமான தோட்டாக்கள் களஞ்சியப்படுத்தப்படும் பிரதான அல்லது மத்திய ஆயுதக்கிடங்கு திடீர் வெடிப்புக்கு முகம் கொடுத்தது.
இதனால் இந்த இராணுவ ஆயுதக் கிடங்கின் அமைவிடத்திலிருந்து சுமார் 5 கிலோ மீற்றர்கள் சுற்றளவுக்கு உட்பட்ட சாலாவ, களு அக்கல, சுதுவெல்ல, மாவில்கம, கடுகொட வடக்கு, அக்கரவிட்ட, பெண்டி கம்பொல, கொஸ்கம மேற்கு, கொஸ்கம கிழக்கு, முருககம ஆகிய 10 கிராம சேவகர் பிரிவுகள் பாதிப்பை எதிர்கொண்டன.
இதனால் 18628 பேர் இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டதுடன் குறிப்பிட்ட பிரதேசத்தின் அனைத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்தன. இந்த திடீர் வெடிப்பின் சொத்து சேதம் எப்படியும் 1200 கோடி ரூபாவைத் தாண்டும் என அனுமானிக்கப்பட்டுள்ள போதும் இக்கட்டுரை எழுதப்படும் வரை (நேற்று அதிகாலை) உத்தியோகபூர்வ மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு பெற்றிருக்கவில்லை. இந்த வெடிப்பினால் ஒருவர் உயிரிழந்ததாகவும் 10 இராணுவத்தினர் உட்பட 48பேர் காயமடைந்ததாகவும் இராணுவ தரப்பு தகவல்கள் தெரிவித்த நிலையில், இந்த வெடிப்புச் சம்பவத்தின் தாக்கம், சேதம் தொடர்பில் ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல.
மாற்றமாக இராணுவத்தின் பிரதான ஆயுதக் கிடங்கில் இப்படி திடீரென ஏற்பட்ட விபத்தின் பின்னால் உள்ள நியாயமான காரணிகளுடன் கூடிய சந்தேகங்களுக்கு விடை தேடுவதே இதன் நோக்கமாகும்.
இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த இறுதிக் காலப்பகுதியில் கொஸ்கம, சாலாவ ஆயுதக் கிடங்கின் பயன்பாடு மிக உச்சம் எனலாம். கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டுவரப்படும் ரீ– -56 ரக தோட்டாக்கள் முதல் ஆர்.பி.ஜீ, ஷெல், மோட்டார் குண்டுகள், ஆட்டி லறிகள் என முக்கிய ஆயுதத் தொகை இந்த கிடங்கிலேயே களஞ்சியப்படுத்தப்பட்டன. அதன் பின்னரேயே வடக்கு, கிழக்கு முகாம்களுக்கு யுத்த தேவையின் நிமித்தம் பகிர்ந்தளிக்கப்பட்டன.
உண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலப்பகுதியிலேயே இந்த கொஸ்கம, சாலாவ ஆயுதக் கிடங்கு நிர்மாணிக்கப்பட்டது. அதுவரை பனாகொட இராணுவ முகாமில் உள்ள கிடங்கில் களஞ்சியப்படுத்தப்பட்ட இந்த ஆயுதங்கள், யுத்த அவசியம், இலகு கருதி கொஸ்கம, சாலாவ பகுதிக்கு மாற்றப்பட்டிருந்தன. சாலாவ ஆயுதக்கிடங்கில் சுமார் 2500 தொன் ஆயுதங்கள் எப்போதும் இருப்பில் இருக்கும் நிலையில் கடந்த 4 ஆண்டுகளை நோக்கும் போது இந்த ஆயுதக்கிடங்கு குறித்த இராணுவத்தின் நிலைப்பாட்டில் தடுமாற்றத்தை அவதானிக்க முடிகிறது.
ஏனெனில் கடந்த நான்கு ஆண்டுகளுக்குள், சாலாவ ஆயுத களஞ்சியத்தை அங்கிருந்து அகற்ற தொடர்ச்சியான முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வந்தன.
குறிப்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவின் காலத்தில் இங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பல கனரக ஆயுதங்கள் தியத்தலாவ மற்றும் மாதுருஓயா ஆகிய இராணுவ முகாம்களில் உள்ள ஆயுத கிடங்குகளுக்கு மாற்றப்பட்டன. முன்னாள் இராணுவ தளபதிகளான ஜெனரல் ஜகத் ஜயசூரிய, ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோரின் விசேட ஆலோசனை மற்றும் கண்காணிப்பின் கீழேயே இந்நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதன்படி ஜெனரல் தயாரத்நாயக்கவின் காலப்பகுதியில் சாலாவ இராணுவ ஆயுதக்கிடங்கை அனுராதபுரம் மாவட்டத்தின் ஜனசூன்ய பிரதேசங்கள் இரண்டில் அமைக்க ஆலோசிக்கப்பட்டு ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஒயாமடுவ மற்றும் ரம்பேவ பகுதிகளிலேயே இந்த ஆரம்பகட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இவை பெரும்பாலும் 2014 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியிலேயே இடம்பெற்றன.
குறிப்பாக இராணுவத்தின் மத்தேகொட வெடி பொருள் களஞ்சியத்தில் 2014 ஒக்டோபரில் ஏற்பட்ட தீ பரவலைத் தொடர்ந்து சாலாவ ஆயுதக் கிடங்கை இடமாற்றும் நடவடிக்கையில் வேகம் அதிகரித்தது என்றால் மிகையாகாது.
இந்நிலையிலேயே 2015 ஜனவரியில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றதுடன் அந்த ஆண்டின் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டீ சில்வா இராணுவத்தின் தளபதி பதவியை பொறுப்பேற்றார். அதன்பின்னர் சாலாவ ஆயுதக் கிடங்கு தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதற்குரிய சரியான விளக்கம் இல்லை. எனினும் தற்போதைய மேல் மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவின் தகவல்களின் பிரகாரம், சாலாவ ஆயுதக் கிடங்கை இடமாற்றும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் கடந்த 5 ஆம் திகதி ஞாயிறன்று வெடிப்பு இடம்பெறும் போது சுமார் 10 வீதமான ஆயுதங்களே அதில் இருந்ததாக அறிய முடிகிறது. அப்படியானால் சுமார் 250 தொன் ஆயுதங்கள் வரை அங்கு இருந்துள்ளன.
இந்த பின்னணியில் தான் திடீரென சாலாவ ஆயுதக்கிடங்கு வெடிப்பு, தீ அனர்த்தத்துக்கு முகம் கொடுத்துள்ளது. இந்த திடீர் அனர்த்தம், அதாவது ஒரு நாட்டு இராணுவத்தின் பிரதான தோட்டாக்கள் களஞ்சியத்தில் திடீரென இத்தகைய பாரிய அனர்த்தம் ஏற்பட்டமை பல்வேறு சந்தேகங்களை தற்போது கிளற ஆரம்பித்துள்ளது.
பொதுவாக ஆயுதக் கிடங்குகள் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அமைக்கப்படுவதில்லை. மக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியே ஆயுத களஞ்சியங்கள் அமைக்கப்படும் இடம் தீர்மானிக்கப்படும். இவற்றையெல்லாம் தாண்டி அமைக்கப்படும் ஆயுதக் களஞ்சியங்களுக்கு அதி உச்ச பாதுகாப்பும் அதிக கவனமும் எடுக்கப்படும். மிகப்பாதுகாப்பான வழிமுறைகளைப் பின்பற்றியே இந்நடவடிக்கைகள் இடம்பெறும்.
பாதுகாப்பு காரணங்களைக் கருத்திற் கொண்டு ஒரு ஆயுதக் கிடங்கில் உள்ள ஆயுதத் தொகை, விபரங்களை இராணுவம் வெளியிடாத போதும் அங்குள்ள ஆயுதங்கள் தொடர்பில் இராணுவம் கழுகுக் கண் கொண்டு தனது அவதானத்தை திருப்பியிருக்கும்.
இத்தகைய பின்னணியில் கொஸ்கம, சாலாவ இராணுவ ஆயுதக்கிடங்கின் திடீர் அழிவானது மிகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாசகார செயலாக இருக்கலாம் என்ற ஐயம் ஆயுத களஞ்சியப்படுத்தல் மற்றும் தோட்டாக்களை கையாளல் தொடர்பிலான சிறப்பு நிபுணர்களால் முன்வைக்கப்படுகின்றன.
தற்போதைக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைவாக, இந்த வெடிப்புச் சம்பவமானது ஒரு கிரமமான முறையில் இடம்பெற்றுள்ளமையானது அத்தகைய சந்தேகத்தை மேலெழுப்புகிறது.
அதாவது கிரமமான முறை என இங்கு அடையாளம் செய்யப்படுவதானது, ரீ-–56 போன்ற இலகு ரக தோட்டாக்கள் களஞ்சியப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வெடிப்பு ஆரம்பித்து கனரக தோட்டாக்களுக்கு பரவியமையே கனரக தோட்டாக்கள் (மோட்டார், ஆர்.பி.ஜி. போன்றன) நிலக்கீழ் அறையிலேயே பொதுவாக பாதுகாக்கப்படும் நிலையில் அந்த பகுதியை நோக்கி வெடிப்பு நகர்வதென்பது கிடங்கின் இறுதிப் பாதுகாப்பு கட்டமைப்பும் செயலிழந்ததன் பின்னரே சாத்தியமாகும்.
பொதுவாக இறுதி பாதுகாப்பு கட்டமைப்பென்பது, ஆயுதக்கிடங்கை அழிக்கவல்ல முறையொன்றினை செயற்படுத்துவதாகும். இம்முறைமை எல்லா ஆயுத கிடங்குகளிலும் பொதுவாக இருக்கும். கிடங்கானது எதிரியின் கையில் சிக்கும் போது ஆயுதங்கள் அவர்கள் கைகளில் சிக்குவதை தடுக்க இத்தகைய வழிமுறை பின்பற்றப்படும்.
இந்நிலையில் பொதுவாக யுத்த களத்திலேயே பயன்படுத்தப்படும் இந்த பாதுகாப்பு வழிமுறை, சாலாவ ஆயுதக்கிடங்கு விவகாரத்தில் பயன்படுத்தப்பட்டதா என்ற சந்தேகமும் இல்லாமலில்லை.
அவ்வாறில்லையெனில் மின்கசிவால் ஏற்படும் தீ, வெப்பம் உள்ளிட்ட காரணிகளாலும் இவ்வாறு வெடிப்பு இடம்பெறலாம். எனினும் பிரதான ஆயுதக் களஞ்சியத்தில் மின் கசிவு ஏற்படும் அளவுக்கு அஜாக்கிரதையான பராமரிப்பு இருந்திருக்கும் என எண்ணுவது கடினமாகும். அத்துடன் சம்பவம் இடம்பெற்ற ஞாயிறு மாலை கொழும்பின் வெப்பநிலையானது 30.6 பாகை செல்சியஸ். இந்த வெப்ப நிலையானது ஆயுதக் கிடங்கொன்று தீ பிடித்து வெடித்துச் சிதறும் நிலைமை அல்ல. இந்நிலையில் தான் சதி நடவடிக்கை காரணமாக இந்த அனர்த்தம் ஏன் சம்பவித்திருக்கக்கூடாது என்ற சந்தேகம் பிறக்கிறது.
உண்மையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழான சிறப்பு பொலிஸ் குழுவும், முப்படைகளின் சிறப்பு விசாரணைக் குழுவினது விசாரணைகளும் நீதிவான் நீதிமன்றத்தினது விசாரணைகளும் வெவ்வேறாக இடம்பெறுகின்றன. எனினும் இத்தகைய பாரிய அனர்த்தம் ஒன்றின் போது வழமையாக பிரத்தியேக விசாரணைகளை நடத்தும் இராணுவ உளவுப் பிரிவு இந்த சம்பவம் குறித்த விசாரணைகளில் இருந்து தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது சில பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
அதாவது இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட பல ஆயுதங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றில் பல மாயமாகியுள்ளமை தொடர்பில் பிரத்தியேக விசாரணை ஒன்று இராணுவ புலனாய்வாளர்களுக்கு எதிராக இடம்பெற்று வருவதாக அறியமுடிகிறது. இந்நிலையில் அவ்வாறு கைப்பற்றப்பட்ட சில ஆயுதங்கள் சாலாவ முகாமில் வைக்கப்பட்டிந்ததாகவும் அவற்றில் சில மாயமானதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அக்கிடங்கு சோதனை செய்யப்பட இருந்த நிலையில் இத்தகைய அனர்த்தம் திடீரென ஏற்பட்டதாகவும் ஒரு கதையுண்டு. அதனாலேயே இராணுவ உளவுப் பிரிவு இது குறித்த விசாரணைகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதாக உள்வீட்டு தகவலொன்று கூறுகிறது.
இதனைவிட பாதுகாப்பு செயலர் கருணாசேன ஹெட்டியாரச்சி, ஊடகவியலாளர் சந்திப்பில் வழங்கிய தகவலும் இந்த அனர்த்தம் சதி நடவடிக்கையொன்றின் பிரதிபலனே என்பதற்கான பிரதான சந்தேகத்திற்கான காரணியாகும்.
அதாவது சாலாவ இராணுவ முகாமில் இவ்வனர்த்தம் பதிவாகும் போது ஆயுதக்கிடங்கு அருகே, வீரர்கள் தீயணைப்பு பயிற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்தமை தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு செயலர் கூறியிருந்தார். அப்படியானால் அத்தகைய சந்தர்ப்பத்தில் தீயானது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டை மீறி ஆயுதக்கிடங்கை ஆக்கிரமித்ததா? என்ற சந்தேகமும் உள்ளது.
இவற்றைவிட சாலாவ இராணுவ முகாமில் இவ்வனர்த்தம் ஆரம்பிக்கும் போது சுமார் 450 வீர வீராங்கனைகள் இருந்ததாக மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக கூறுகிறார். அத்துடன் ஆயுத களஞ்சியத்துக்கு கிட்டிய தூரத்தில் பெண் இராணு சிப்பாய்களின் தங்குமிடம் இருந்துள்ளதுடன் அதில் 19 பேர் குறித்த நேரத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இத்தகைய நிலைமைதான் அம்முகாமுக்குள்ளேயே மேற்கொள்ளப்பட்ட சதியின் செயலா இந்த அனர்த்தம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
அத்துடன் இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த ஒரே வீரரான புத்தலயைச் சேர்ந்த கோப்ரல் ஜானக சமிந்த சாலாவ முகாமை சேர்ந்தவர் அல்ல. அவர் அன்றைய தினமே தான் சேவையாற்றும் கிளிநொச்சி முகாமில் இருந்து உயர் அதிகாரி ஒருவரை அழைத்துக் கொண்டு சாலாவ முகாமுக்கு வந்துள்ளார். அப்படியானால் சாலாவ முகாமில் இருந்த 450 பேரில் எவருக்கும் ஏற்படாத விபரீதத்தில் வெளியில் இருந்து வந்த வீரர் மட்டும் சிக்கிக் கொண்டமை எப்படி?
இத்தகைய சந்தேகங்களுடன் இராணுவத்தின் உள்வீட்டு பிரச்சினையொன்றும் இந்த அனர்த்தத்துக்கு அடிப்படையாக அமைந்ததா? என சந்தேகிக்க வேண்டியுள்ளது. அதாவது தற்போதைய இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த சில்வா ஓய்வுபெறும் வயதை தாண்டியும் பதவி நீடிப்புடன் பதவியை தொடர்கிறார். இது இராணுவத்துக்குள் சில அதிருப்திகளை உருவாக்கியுள்ளது. அதன் பிரதிபலனாக அவரை வீட்டுக்கனுப்ப இத்தகைய திட்டம் தீட்டப்பட்டதா என்பது ஆராயப்படவேண்டியதே.
அத்துடன் இன்னுமொரு விடயமும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியது. அதாவது வடக்கில் முகாம்களை அகற்ற வேண்டும் என்ற கோஷம் சர்வதேச அளவில் எழுந்துவிட்டது. திடீரென வடக்கில் முகாம்களை அகற்ற முற்பட்டால் அது இராணுவத்துக்குள்ளும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என அரசாங்கம் எண்ணி இத்தகைய சம்பவம் ஒன்றை திட்டம் தீட்டி நடத்தி அதனூடாக வடக்கு முகாம்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்க யோசனை செய்ததா? என்பதும் பலமான சந்தேகமே.
இவ்வாறு பல சந்தேகங்கள் மேலெழும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பிலிருந்து இராணுவத்தினர் முழுமையாக நீக்கப்பட்ட சில மணிநேரத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்துக்கும் அந்நீக்கல் நடவடிக்கைக்கும் இடையில் தொடர்புள்ளதா எனவும் ஆராயப்பட வேண்டியதே.
சாலாவ ஆயுதக்கிடங்கைப் பொறுத்தவரை அப்பகுதியில் அதை தொடர்ந்து களஞ்சியப்படுத்தி வைத்திருக்க பொருத்தமற்ற ஒரு திட்டமே என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இது குறித்து பல வருடங்களுக்கு முன்னரேயே சாலாவ ஆயுதக்கிடங்கை அகற்ற கொஸ்கம முகாமின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்ந்த அப்போதைய இராணுவத்தின் மேற்பார்வை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சிசிர விஜே சூரிய சிபாரிசு செய்துள்ளார். எனினும் இந்த சிபாரிசு இது நாள்வரை கண்டுகொள்ளப்படாது இருந்துள்ளது.
உலகளவில் 1998 முதல் 2011 வரையான காலப்பகுதிகள் மட்டும் ஆயுதக் கிடங்குகளை அண்மித்த 275 வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த மே மாதம் 31 ஆம் திகதி கூட இந்தியா, மகாராஷ்ட்டிராவின் சொந்த மாவட்டத்தின் இராணுவ ஆயுதக் கிடங்கொன்றில் வெடிப்பு இடம்பெற்றது. அது ஆசியாவின் 2 ஆவது பெரிய களஞ்சியம். இதன் அடிப்படையில் பார்க்கும் போது ஆயுதக் கிடங்கின் வெடிப்பொன்றும் உலகிலேயே நடைபெறாத சம்பவமல்ல. இலங்கையை பொறுத்தவரையில் கூட கடந்த 2011 செப்டெம்பர் அளவில் வீரவில, பண்ணேகமுவ இராணுவ முகாமிலும், 2014 ஒக்டோபரில் மத்தேகொட முகாம் களஞ்சியத்திலும் வெடிப்புக்கள் பதிவாகின.
அவை குறித்து இராணுவ நீதிமன்ற விசாரணை இடம்பெறுவதாக கூறினாலும் அவற்றுக்கான காரணம் இன்றுவரை மர்மமே.
அத்தகைய விசாரணை பின்னணியொன்று நிலவும் எமது நாட்டில் சாலாவ சம்பவத்தில் உண்மையை இராணுவம் வெளிப்படுத்தும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.
சாலாவ ஆயுதக் கிடங்கு இறுதிக் காலப்பகுதியில் சீரான பராமரிப்புக்கு உட்படவில்லையென இராணுவ உள்ளக தகவல்கள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், நாம் எழுப்பியுள்ள சந்தேகங்களுக்கு இராணுவம் பதில்தரும் என எண்ண முடியாது.
எனினும் குற்றப் புலனாய்வுப் பிரிவு இம்முறை இவ்விவகாரத்தை விசாரணை செய்யும் நிலையில், நாம் எழுப்பிய சந்தேகங்களை அவர்கள் ஆராயலாம். எல்லாவற்றுக்கும் முன்பாக அரச இரசாயன பரிசோதனையும், புலனாய்வுப் பிரிவின் ஆரம்பகட்ட விசாரணையும் நேற்றுவரை நிறைவுறாத நிலையில், விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டு மூடி மறைக்கப்படுமா? என்ற சந்தேகமும் இல்லாமலில்லை.