யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் அரசியல் யுத்தங்களுக்கும் சூழ்ச்சிகளுக்கும், மற்றும் சதித்திட்டங்களுக்கு மட்டும் நாட்டில் எவ்வித குறைகளும் இல்லாமல் நாட்டை பதற்றத்துடன் வைத்திருக்க அரசியல் வாதிகள் நினைப்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.
தற்போது யாழில் புதிதாக துளிர்க்கும் செயற்பாடுகள், தமிழ் சிங்கள மாணவர்களுக்கிடையே மோதல்கள் இதுவும் அரசியல் இலாபத்திற்காக நடத்தப்படுகின்றதா? இதற்கு விடை கூடிய விரைவில் எவறாவது ஓர் அரசியல்வாதி கொடுப்பார் என்பது நிச்சயம்.
யுத்த நிறைவுக்கு பின்னரும் இலங்கையில் அமைதி என்பது கானல் நீராகவே காணப்பட்டு வருகின்றது. இலங்கைவாழ் மூவின மக்களும் துயர் நிலைகளை அடிக்கடி சந்தித்து வருவது அவதானிக்க முடியுமானதாகவே இருக்கின்றது.
ஆனாலும் இவற்றிக்கான காரணம் மட்டும் ஏனோ மக்கள் அறியாத வண்ணம் பிரம்ம இரகசியமாக பேணப்படுகின்றது. இவற்றினைப் பார்க்கும் போது யுத்தமே மேல் எனும் கருத்துகளும் மக்கள் மத்தியில் எழாவிடினும் சந்தேகம் தான்.
அரசின் ஒவ்வோர் செயற்பாடுகளும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு அவற்றைப்பற்றி கருத்து வேறுபாடுகளும், போராட்டங்களும் அரசியல் ரீதியாகவும் பொது மக்கள் ரீதியாகவும் இடம் பெற்று வருகின்றமை இலங்கைக்கு புதிய விடயம் அல்ல.
இவ்வகையான பதற்றமான சூழ்நிலைகள், ஆட்சியைக் கலைக்கும் நோக்கத்துடன் மஹிந்த தரப்பில் சதித்திட்டங்கள் வகுக்கப்படுவதால் ஏற்படுகின்றன என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்ற போதிலும் உண்மை நிலைமைகள் மட்டும் இரகசியம் காக்கப்படுகின்றமை ஏன்? என்பது மட்டும் புதிராகவே உள்ளது.
திடீர் என ஏதாவது ஓர் நிகழ்வு பதற்றத்தை ஏற்படுத்துவது இலங்கையில் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அண்மையில் கொஸ்கம சாலாவ ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து இலங்கையில் பாரியதொரு பதற்ற நிலையினை உருவாக்கியிருந்தது என்பது அறிந்த விடயமானதே.
இச் சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது? உண்மையாகவே விபத்துதானா அல்லது தனிப்பட்டவர்களின் அரசியல் இலாபத்திற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட சூழ்ச்சித்திட்டமா என்பது நாட்கள் கடந்துள்ள நிலையிலும் இன்றுவரையிலும் கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.
இதில் ஏற்பட்ட இழப்புகள், இறப்புக்கள் தொடர்ச்சியாக பேசப்பட்டு வந்தது ஆனாலும் எரிந்த நெருப்பு முற்றாக அணைக்கப்பட்டது போல் காரணங்கள், சந்தேகங்கள் பற்றி எவருமே கருத்துகளை தற்போது வெளியிடாதது வேதனையளிக்கின்றது. இச்சம்பவமானது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு சதியாகவே அனைவராலும் நம்பப்படுகின்றது ஆனாலும் தீர்ப்புகள் மட்டும் கிடைக்கப்பெறவில்லை.
அடுத்ததாக, முன்னாள் ஜனாதிபதியின் சுதந்திர கட்சியானது அடையாளம் தெரியாமல் போகக் கூடிய நிலையும், அக்கட்சியின் உறுப்பினர்களின் தொடர் கைதுகள் மற்றும் பலவகையான ஊழல் குற்றச்சாட்டுகள், மூலம் பல்வேறுபட்டோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
ஆனாலும் சிறைச்சாலைக்கு செல்பவர்கள் விரைவாக விடுவிக்கப்படுகின்றனர். இவர்களின் கைதுக்கான காரணங்களும் கைது செய்யப்படும் போது விமர்சிக்கப்படுகின்றனவே தவிர விடுதலை எவ்வாறு நிகழ்ந்தது, என்ன தீர்ப்பு கிடைத்தது என்பது மட்டும் வெளிப்படுத்தப் படுவதில்லை.
ஊழல் திருட்டுகள், நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சி, இனவழிப்பு, அரசசொத்துகளை தனியார் மயப்படுத்தியமை, கொலைக்குற்றங்கள் என பல்வேறு வகையான குற்றச்செயல்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தொடர்பில் அன்றாடம் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
அரசியல் வாதிகள், பொது மக்கள் என அனைவராலும் இவ்வாறான விமர்சனங்கள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்றன. கடந்த கால ஆட்சியில் ஊழல் செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் மஹிந்தவின் பெயரிலேயே விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஆனாலும் அரசினால் மஹிந்த மட்டும் கைது செய்யப்படவுமில்லை, விசாரணைகளுக்கு உள்ளாக்கப்படவுமில்லை.
எனினும் மஹிந்தவின் பெயரில் அவரது குடும்பத்தாரும் சுற்றத்தாரும் கைது செய்யப்பட்டு விடுவிக்கவும் படுகின்றார்கள். பெயரை மட்டும் கைது செய்ய அரசு திட்டமிட்டுள்ளதோ?
அதே சமயம், இலங்கையில் இடம் பெற்ற இறுதி யுத்தத்தில் கொத்துக் குண்டுகள் பயன் படுத்தப்பட்டன என்ற ஆதாரங்கள் வெளிவந்தன ஆனாலும், ஆதாரம் ஏட்டளவிலும், சொல்லளவிலும் மட்டுமே பேசப்பட்டு வருகின்றன தீர்ப்புகளும் தண்டனைகளும் கொடுக்கப்படுமா என்பது புரியாத புதிரே.
இவை யாரால் மேற்கொள்ளப்படுகின்றது? இலங்கையைப் பொறுத்தவரையிலும் குழப்பங்களும் பதற்றங்களும் ஆட்சியை நடாத்தி செல்வதற்கு அத்தியவசியமான ஒன்றாகவே காணப்படுகின்றது.
ஒரு தரப்பினரை பலவீனப்படுத்தி ஆட்சியில் தனது இருப்பினை பலப்படுத்திக் கொள்வதற்காக ஆளும்கட்சியின் செயற்பாடுகளா? இவை புதிய ஆட்சியாளர்கள் கட்டமைக்க நினைக்கின்ற, ”ஒரு கல்லில் இரு மாங்காய் ” நாடக அரங்கேற்றங்களுக்கான ஒத்திகைகளா? என்ற கண்ணோட்டமும் அவசியமாகின்றது.
காலத்தின் போக்கில் விடை தேடப்படும் கேள்விகளுக்கு கிடைக்கப்பெறும் பதில்களின் அடிப்படையில் தீர்ப்புகள் அமையப்பெறும் என்பது நிச்சயம் எனினும் அக்காலம் வருவதற்குள் இலங்கையில் ஏற்படும் மாற்றங்கள் எத்தகையானவையாக காணப்படும் என்பது காலத்திற்கே வெளிச்சம்.