மீள்குடியேறிய திருகோணமலை சம்பூர் மாணவர்களின் நலன்கருதி, 20 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வு கூடம் மற்றும் கணனிப் பிரிவு என்பவற்றை நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) திறந்துவைத்து உரையாற்றியோதே முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
”சம்பூர் மக்களின் துயரங்களைத் துடைக்க வேண்டிய பொறுப்பை, கிழக்கு மாகாண சபை சுமந்து நிற்கின்றது. அந்தப் பொறுப்பை எனது தலைமையிலான கிழக்கு மாகாண சபை நிச்சயமாக எமது ஆட்சிக் காலத்தில் செய்து முடிக்கும். பாதிக்கப்பட்ட மக்களை சொந்தக் காலில் நிற்கச் செய்து, அவர்களது வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாக உயர்த்தி சம்பூரை ஒரு நகரமாக மாற்றும் பொறுப்பையும் நாம் செய்து காட்டுவோம். இதற்கெல்லாம் மாகாண சபைக்கான அதிகாரப் பகிர்வு கிடைக்கப்பெறுவது மிக முக்கியம்.
கிழக்கு மாகாணம், மத்திய அரசின் பேரினவாத அதிகார மமதையிலிருந்து விடுபட வேண்டியிருக்கின்றது. 2 இலட்சம் பேர் கிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்பின்றி தினமும் எங்கோ ஓர் மூலையில் போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பது, வாடிக்கையாகி விட்டது. ஆயிரக்கணக்கான பட்டதாரிகள், வேலைவாய்ப்புக்காக எங்களை எந்நாளும் சூழ்ந்து கொள்கின்றார்கள். இதனை முடிவுக்குக் கொண்டு வருவதாக இருந்தால், எங்களது மாகாண சபைக்கு முன்னதாகவே அரசியலமைப்பில் குறித்தொதுக்கப்பட்ட அதிகாரங்களும் நிதியும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
அரசியலமைப்பில் வழங்கப்பட்ட அதிகாரங்களை எமக்குத் தராமல், மத்திய அரசு கையகப்படுத்திக் கொண்டுள்ளதால் எம்மால் எமது பிராந்தியத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியாமல் இருக்கின்றது. ஆளுநர் அதிகாரத்தைப் பயன்படுத்தி, மத்திய அரசு, மாகாணங்களை அடக்கி ஆள்கிறது.
கிழக்கில் 95 வீதமான பாடசாலைகள் மாகாண நிர்வாகத்தின் கீழ் காணப்பட்டாலும், அதற்கான நிதியை மத்திய அரசே கையாள்கிறது. குறைந்தபட்சம் கல்விக்காக, 8 வீதமான நிதியைக்கூட மாகாண சபைகளுக்கு ஒதுக்குவதில்லை. கிழக்கு மாகாணம் கல்வியிலே எட்டாவது இடத்திற்குச் சென்றிருக்கின்றது. இது கவலையளிக்கும் விடயம். இதனை மாற்றாதவரை எதுவும் நடைபெறாது. சமாதானத்தையும் அடையமுடியாது.
இந்த நாட்டில் இனியொரு புரட்சி வெடிக்குமாக இருந்தால், அது கிழக்கு மாகாணத்திலிருந்து, அதுவும் தொழிலில்லாத இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களால்தான் இடம்பெறுமென்பதை இந்த நாட்டுக்கு நான் சொல்லி வைக்க விரும்புகின்றேன்” என்றார்.