புலம்பெயர் வாழ் மக்களின் பலமும், பலவீனமும்!

உலக விடயங்களில் பொது நலம், சுய நலம் போன்று பலம், பலவீனம் என்பதும் பலரினால் பலவிதங்களில் ஆராயப்பட்டுள்ளது.
பொது நலத்தில் சுயநலமா? அல்லது சுயநலத்தில் பொதுநலமா? என்பது போல் பலம் பலவீனமாகிறதா? பலவீனம் பலம் ஆக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு இன்று உலகில் பதில் கிடைத்ததாகவில்லை.
இலங்கைத் தீவு வாழ் ஈழத் தமிழர், அதாவது, வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயகமாகக் கொண்ட தமிழர்களது கலை கலாசாரம், வாழ்வாதாரம் என்பவை ஓர் நீண்ட சரித்திரத்தை கொண்டவை என்பதை இங்கு எழுதி விவரிக்க வேண்டிய அவசியமில்லை.
காலணித்துவ ஆட்சியாளரான பிரித்தானியரிடமிருந்து இலங்கைத்தீவு சுதந்திரம் பெற்ற தினத்தில் ஆரம்பமாகிய தமிழ் மக்களது அரசியல் உரிமை, அரசியல் அபிலாசைகளுக்காக போராட்டம் இன்று வரை தொடர்கதையாக சென்று கொண்டிருக்கிறது.
சாத்வீக போராட்டத்தில் வெற்றி காண முடியாத நிலையில், ஆயுத போராட்டம் ஆரம்பமாகியது என்பது சரித்திரம். சாத்வீகத்தினால் சாதிக்க முடியாதவற்றை ஆயுத போராட்டத்தினால் வெற்றி கண்டதுடன், தமிழர்களது தாயக பூமியான வடக்கு கிழக்கில் ஏறக்குறைய
எழுபத்து ஐந்து 75 வீதமான நிலப்பரப்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள், ஓர் தன்னாட்சி கொண்ட நிர்வாகத்தை பலவருடங்களாக நடாத்தியிருந்தார்களென்பதும் சரித்திரம்.
துரதிர்ஷ்டவசமாக சிங்கள ஆட்சியாளர்கள், தமது நரித்தனமான ராஜதந்திர நகர்வுகளினால், சர்வதேச நாடுகளில் ஆதரவுகளைப் பெற்று சர்வதேச வரையறைகள் சட்டங்களிற்கு முரணான முர்கத்தனமான போர் மூலம் 2009ஆம் ஆண்டு மே மாதம் தமிழரது ஆயுதப் போராட்டத்தை வெற்றி கொண்டார்களென்பது தற்போதைய சரித்திரம்.
உலகில் ஆயுதபோராட்டம் மூலம் வெற்றிகளை கண்ட ஏரித்தீரியா, கிழக்கு தீமூர், கோசாவா, தென் சூடான் வரிசையில் வீறு நடை போட்ட தமிழீழ விடுதலைக்கான ஆயுத போராட்டம் இன்று மௌனிக்கப்பட்டுள்ளது.
இவ் ஆயுதப் போராட்டத்திற்கான விலையை மேலே குறிப்பிடப்பட்டுள்ள எந்த விடுதலை போராட்டமும் கொடுத்திருக்கவில்லை! இன சுத்திகரிப்பு, நில அபகரிப்பு, உயிர்சேதங்கள், சொத்து சேதங்களென அடுக்கி கொண்டே போக முடியும்.
ஆனால், மேலே குறிப்பிடப்பட்ட எந்தவோர் விடுதலைப் போராட்டத்திற்கு இல்லாத ஓர் பாரீய புலம் பெயர் வாழ் சமூகத்தை தமிழீழ விடுதலை போராட்டம் மட்டுமே கொண்டிருந்தது கொண்டுள்ளது.
இப்படி பாரிய எண்ணிக்கையில் புலம்பெயர் வாழ் தமிழர்கள் உலகம் பூராகவும் பரந்து வாழ்வது மட்டுமல்லாது, ஆயுதப் போராட்டத்திற்கு உறுதுணையான காரியாலயங்கள், வர்த்தக நிறுவனங்கள் வேறுபட்ட நாடுகளின் அரசியல் கட்சிகளுடனான நெருங்கிய உறவுகளின் மத்தியில் ஈழத் தமிழர் அரசியல் இருப்பை இலங்கைத் தீவில் பறிகொடுத்து இன்று அநாதரவானவர்களாக காணப்படுவதற்கு புலம் பெயர் வாழ் சமூகத்தின் செயற்பாடுகளுமே காரணியாக அமைந்துள்ளது.
தொடர்ந்து அமைகின்றது என்ற யதார்த்தத்தை யாரும் மறுக்க முடியாது.
நம்பிக்கை துரோகம்
சகல வெற்றி தோல்விகளில் முக்கிய கர்த்தாவாக விளங்குவது பலம், பலவீனம் என்பதே. உளவியல் நிபுணர்கள், ஆய்வாளர்களின் கருத்துகளில் முரண்பாடுகள் காணப்பட்ட பொழுதிலும் ஓர் பொது உண்மை இவ் தர்க்கங்களின் அடிப்படையில் வெளியாகின்றது.
இதை தான் “நம்­பிக்கை துரோகம்” என்பார்கள். அதாவது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதிகாலப் பகுதிகளில் அதாவது 2005 ஆம் ஆண்டு 2006 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் நம்பிக்கை துரோகம், காட்டி கொடுப்புக்கள் நிலத்திலும் புலத்திலும் ஆரம்பமாகி விட்டது.
இந் நிலையில் பொது நலத்தில் சுய நலமா? அல்லது சுய நலத்தில் பொதுநலமா என்ற வரையறைக்கு அப்பால் “கபட தன்மைகள்" நிலை கொண்டு விட்டன.
இன்றைய நிலையில் நிலத்தில் அதாவது தமிழர்களது தாயக பூமியில் நடப்பவற்றை ஆராய வேண்டிய அவசியமில்லை. காரணமாக அவையாவும் தற்போதைய நிலையில் வெளிப்படையாக நடைபெறுகின்றன.
ஆனால் புலம்பெயர் தேசங்களில் காணப்படும் கபட தன்மைகள் புலம்பெயர் வாழ் மக்களிடையே ஒற்றுமையின்மைக்கு வழிகோலுவதுடன் புலம்பெயர் மக்களிடையே “பிரித்து ஆளும்” தன்மையும் காணக் கூடியதாகவுள்ளது.
இவற்றின் அடிப்படை பலம் பலவீனம் என்பதே உண்மை.
பலம், பலவீனம்
புலம்பெயர் தேசத்தில் காணப்படும் பலம் என்பது புலம்பெயர்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் மேற்கு நாடுகளில் அதாவது ஜனநாயக நாடுகளில் தமது இருப்பை நிலை கொண்டிருப்பதும் பெரும்பான்மையான இந் நாடுகள் தமிழ் மக்களது நீண்டகால அரசியல் சரித்திரங்களை தெரிந்திருப்பதும், இவ்வகையில் ஜனநாயக அடிப்படையில் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கைக்கும் இந்த நாடுகளில் இடையூறு ஏற்படாது என்பதுடன் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, சுவிஸ், ஜேர்மனி, நோர்வே போன்ற நாடுகளின் அரசாங்கங்களும்
மேலோட்டமாக ஸ்ரீலங்கா நிலைகளை கண்காணிக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக “பலவீனம்” என்பதை நாம் ஆராய்வோமானால் இங்குதான் ஐக்கியமின்மைக்கான முக்கிய காரணிகளான கபட நாடகங்கள் பணம் என்ற அடிப்படையில் முக்கியத்துவம் பெறுகின்றன.
உலகின் புலனாய்வு நிறுவனங்களின் செயற்பாடு என்பது ஒருவரின் பலம் பலவீனத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வடிப்படையில் போதைவஸ்து கடத்தல் காரணமாக சிறை சென்றவர்கள், சமூக குடும்ப வாழ்க்கையில் தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்களில் நேர்மையற்றவர்கள், புத்தகப்படிப்போ பண்போ அறவே அற்றவர்கள் இனம் தெரிந்த தெரியாத புலனாய்வாளரின் பணத்திற்கு அடிமையாவதுடன், இவர்களின் பலவீனம் ஓர் இனத்தின் அழிவுக்கு வழி கோலுனிறது.
இதற்கு சில புலம்பெயர் வாழ் தமிழர்கள் விதி விலக்கானவர்கள் அல்ல. இங்குதான் யாவரும் திகைத்து நிற்கும் ஐக்கியமின்மைக்கு விடை காணப்படுகிறது.
ஆயுதப் போராட்டத்தின் முக்கிய காலப் பகுதியான 2006ஆம் ஆண்டிற்கு முன்னர் புலம்பெயர் செயற்பாட்டாளர் என்பதற்கு ஓர் அர்த்தம் காணப்பட்டது.
தகுதி நேர்மை, அர்ப்பணிப்பு போன்றவற்றின் அடிப்படையில் செயற்பாடுகள் அமைந்திருந்தன. இவற்றிலும் சில விதிவிலக்குகள் உண்டு என்பதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.
காரணம் அக்கால பகுதியில் வேலை செய்த ஒரு சிலர் தமிழீழ விடுதலைப் புலிகளை பழிவாங்கும் செயற் திட்டத்திற்கு முன்னின்று உழைத்தார்கள் என்பதை காலம் சென்றே அறிய முடிந்தது.
புலம்பெயர் தேசத்தில் காணப்படும் தற்போதைய ஐக்கியமின்மை என்பது நன்கு திட்டமிடப்பட்டு பல கோடி பணம் செலவழிக்கப்பட்டு கபட நாடகங்கள் மூலம் நிறைவேற்றப்படுபவை.
இவற்றிற்கு எந்தவித தேற்றங்களோ தத்துவங்களோ தேவையில்லை. சமுதாயத்தில் முன்பு ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் தற்பொழுது காணப்படும் இடைவெளியை பாவித்து நடைபெறும் ராஜதந்திர போராட்டத்திற்கு தலைமை தாங்க முன்வரும் பொழுது மோதல்கள், கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டே தீரும்.
என்னை பொறுத்தவரையில் தற்பொழுது காணப்படும் ஒற்றுமையின்மை என்பது சூரிய வெப்பம் வரும் பொழுது ஐஸ் கட்டி கரைவது போல் இன்னும் சில காலத்தில் கரையும் என்பதில் ஐயமில்லை.
உலகில் பொய்கள் புரட்டுதல்கள், கபட நாடகங்கள் நிலைத்ததில்லை.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila