புதிய அரசியலமைப்பில் வடக்கிற்கு மேலும் 5 ஆசனங்கள் : சுதந்திரக் கட்சி யோசனை

constitution

நல்லாட்சி அரசாங்கம் தயாரிக்கவுள்ள புதிய அரசியலமைப்பில், வடமாகாணத்திற்கு மேலும் ஐந்து நாடாளுமன்ற ஆசனங்கள் வழங்கப்படவேண்டும் என்றும், இந்த நிலைப்பாட்டில் சுதந்திரக் கட்சி உறுதியாக இருப்பதாகவும், அக்கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
30 வருடகால யுத்தத்தின் பின்னரான வடக்கை கட்டியெழுப்புவதற்கு அதிகரித்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்கள் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய தேர்தல்முறை உருவாக்கம் தொடர்பாக குறிப்பிடுகையில் டிலான் பெரேரா இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தெடர்ந்தும் குறிப்பிடுகையில், தற்போதைய விகிதாசார தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, விருப்பு வாக்கு முறைமை ஒழிக்கப்படவேண்டும் என்றும், இதில் விட்டுக் கொடுப்பிற்கு இடமில்லை என்றும் கூறினார்.
”இதற்கமைய  65 வீதம் தொகுதி அடிப்படையிலும் 35 வீதம் விகிதாசார அடிப்படையிலும் புதிய தேர்தல் முறைமை அமைய வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 245 ஆகவும் இருக்கலாம். அல்லது அதனைவிட கூடிய எண்ணிக்கைக்கு கூட செல்ல முடியும்.
எவ்வாறெனினும் 65வீத தொகுதி முறை 35வீத பிரதேசவாரி முறை உள்ளடங்களாக புதிய தேர்தல் முறை உருவாக்கப்பட வேண்டும். அதில் விருப்பு வாக்குமுறை எக்காரணம் கொண்டும் இடம்பெறக்கூடாது. தேர்தல் முறை மாற்றப்பட்டாலும் சிறுபான்மை மக்களின் நலன் கருதி பிரதிநிதிகளின் தெரிவானது விகிதாசார அடிப்படையில் இடம்பெற வேண்டும் என நாம் வலியுறுத்தியுள்ளோம்.
புதிய தேர்தல் முறைமையினால் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மிகவும் கவனமாக இருக்கிறது. அதாவது சிறுபான்மை மக்களுக்கு மேலும் ஒரு பாதுகாப்பு வலயத்தை வழங்கும் வகையில் நாம் மற்றுமோர் யோசனையை முன்வைத்திருக்கிறோம்.
அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தேர்தல் முறைமையின் பிரகாரம் வடக்கு மாகாணத்துக்கு நாடாளுமன்ற ஆசனங்கள் மேலதிகமாக வழங்கப்படவேண்டும். யுத்தத்தின் பின்னரான வடக்கை கட்டியெழுப்புவதற்கு அதிகரித்த பிரதிநிதித்துவம் அவசியமாகும். எனவே நாங்கள் இந்த விடயத்தில் மிகவும் உறுதியாக இருக்கின்றோம்.
அடுத்துவரும் இரு நாடாளுமன்ற தேர்தல்களில் மாத்திரம் இவ்வாறு வட மாகாணத்திற்கு மேலதிகமாக ஐந்து ஆசனங்கள் வழங்கப்பட வேண்டும் என கோருகின்றோம். அதன்பின்னர் அதில் திருத்தத்தை கொண்டு வர முடியும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தை கட்டியெழுப்பவே இந்த பரிந்துரையை முன்வைக்கின்றோம்.” என்றும் கூறினார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila