இந்தக் கருத்து வாக்கெடுப்பின் முடிவு, உலகத்துக்கே ஏமாற்றத்தை அளித்திருப்பதுடன், உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.
பிரித்தானிய மக்களின் முடிவு, பொருளாதார ரீதியாக இலங்கையையும் பெரியளவிலான பாதிப்புக்குள் தள்ளியிருக்கிறது,
அதேவேளை, இந்தக் கருத்து வாக்கெடுப்பு, இலங்கையின் உள்நாட்டு அரசியலிலும், சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. பொருளாதார ரீதியாக எத்தகைய தாக்கத்தை இலங்கை எதிர்கொள்ளப் போகிறது,
அத்தகைய பாதிப்பில் இருந்து விடுபடுவது எவ்வாறு என்பதில் கவனம் செலுத்துவதை விட, இந்தக் கருத்து வாக்கெடுப்பு தொடர்பாக இலங்கை அரசாங்கம் எடுத்த நிலைப்பாடு குறித்து விமர்சிப்பதற்கே கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலக வேண்டும் என்பது அந்த நாட்டின் தேசியவாத சக்திகளின் நிலைப்பாடாக இருந்தது, ஆனால், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூன் அதற்கு முரணான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவதால் பெரியளவில் பாதிப்பை சந்திக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆனாலும், அண்மையில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு அமைய அவரது அரசாங்கமே, இந்தக் கருத்து வாக்கெடுப்பை நடத்தியிருந்தது.
இந்தக் கருத்து வாக்கெடுப்பில், பிரித்தானியாவைப் பூர்வீகமாகக் கொண்ட மக்களின் வாக்குகள் மாத்திரம் முக்கியத்துவம் மிக்கதாக இருக்கவில்லை. அங்கு குடியேறியுள்ள ஏனைய நாட்டவர்களின் வாக்குகளும் முக்கியமானதாக இருந்தன.
ஒட்டுமொத்த வாக்காளர்களில் பெரும்பாலானோரின், கருத்தை அறிவதற்கே இந்தக் கருத்துவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இலங்கையர்களும் இலட்சக்கணக்கில் பிரித்தானியாவில் வாழ்வதால், தமது அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யுமாறு, இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் டேவிட் கெமரூன்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விடுக்கப்பட்ட இந்தக் கோரிக்கையை ஏற்று, அமைச்சர்கள் பலரும், லண்டனுக்குச் சென்று, அங்குள்ள இலங்கையர்கள் மத்தியில், பிரசாரங்களை முன்னெடுத்திருந்தனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூட, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறக்கூடாது என்று இங்கிருந்தே கருத்து வெளியிட்டிருந்தார்.
ஆனாலும், கடந்த 23ம் திகதி நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பு, பிரித்தானிய அரசாங்கத்துக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் மட்டுமன்றி, முழு உலகத்துக்குமே ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
பிரித்தானிய மக்கள், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம், இலங்கைக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றனர்.
காரணம், இது பொருளாதார ரீதியாக இலங்கைக்குப் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியது என்று கணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில், பிரித்தானியாவில், கருத்து வாக்கெடுப்பு தொடர்பான பிரசாரங்களில், இலங்கை அமைச்சர்கள் ஈடுபட்டமை மிகப்பெரிய விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
இந்த விமர்சனங்களை மஹிந்த ஆதரவு அணியினர் முன்வைப்பதால், அதில் நியாயமில்லை - –விதண்டாவாதம் என்று ஒதுக்கிவிட முடியாது.இன்னொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களுக்குள் – இன்னொரு நாட்டின் தேர்தல் முறைமைக்குள் செல்வாக்குச் செலுத்திய விடயமாக இது பார்க்கப்படுகிறது.
பொதுவாகவே, உள்நாட்டு விவகாரங்களில், வெளிநாட்டுத் தலையீடுகள் இருக்கக்கூடாது என்பது, முன்னைய அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்தது.ஆனால், பிரித்தானியாவின் வாக்கெடுப்பு விடயத்தில் ஒரு தரப்புக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட்டதை இப்போதைய இலங்கை அரசாங்கம் வேறுவிதமாக நியாயப்படுத்துகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிந்து சென்றால், அது இலங்கைக்குப் பொருளாதார ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தான், அத்தகைய பிரசாரங்களில் ஈடுபட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவும், தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பில் 10 சதவீதம், ஸ்ரேலிங் பவுண்டில் உள்ளதாகவும், பிரித்தானியா பிரிந்து சென்றால் அது இலங்கைக்கு பாதகமாக அமையும் என்றும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காலியில் வைத்துக் கூறியிருந்தார்.
அதுபோலவே, ஜி.எஸ்.பி பிளஸ் போன்ற வரிச்சலுகைகளை மீளப்பெறக் கூடிய நிலை ஒன்று ஏற்பட்டுள்ள சூழலில், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதிகளில் 40 சதவீதம், பிரித்தானியாவுக்கே செல்வதால், அந்தச் சலுகையின் கணிசமான பகுதியை இழக்க வேண்டி வரும் என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் விவகாரத்தினால் கடந்த ஆறு ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கை இழந்திருக்கிறது. இதனை மீளப் பெறுவதற்காக கடந்தவாரம் தான் விண்ணப்பித்திருக்கிறது.
இத்தகையதொரு கட்டத்தில் பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் போது, அந்தச் சலுகையின் பெரும்பகுதியை அனுபவிக்க முடியாத நிலை இலங்கைக்கு ஏற்படப் போகிறது.
இதனைக் கருத்தில் கொண்டே, பிரித்தானியாவுடன் அவசரமாக வர்த்தக உடன்பாடு செய்து கொள்ளப்படும் என்று, கருத்து வாக்கெடுப்பு முடிவு வெளியானதுமே அரசாங்கம் அறிவித்தது.
ஆனாலும், அத்தகைய உடன்பாடுகளைச் செய்து கொள்வதற்கு உலகின் பெரும்பாலான நாடுகள் முண்டியடிக்கின்ற சூழல் இருப்பதால், ஒவ்வொரு நாட்டுடனும் பேச்சுக்களை நடத்தி இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, உடன்பாடு ஒன்றுக்குள் நுழைவதற்கு பிரித்தானியாவுக்கு கணிசமான காலம் தேவைப்படும்.
இது இலங்கைக்கு பொருளாதார ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது,
இத்தகைய விளைவுகளைத் தடுப்பதற்காகத் தான், பிரித்தானியாவில் உள்ள இலங்கையர்கள் மத்தியில், அமைச்சர்களை அனுப்பி பிரசாரம் மேற்கொண்டதான அரசாங்கத்தின் வாதத்தில் நியாயங்கள் இருந்தாலும், இன்னொரு நாட்டின் தேர்தல் செயற்பாடுகளில் தலையீடு செய்யும் உரிமை இலங்கைக்குக் கிடையாது என்பது எதிரணியின் வாதமாக இருக்கிறது.
இங்குள்ள மக்களின் வரிப்பணத்தில், இன்னொரு நாட்டின் தேர்தலில் பிரசாரம் செய்ய அமைச்சர்களை அனுப்பும் தார்மிக உரிமை அரசாங்கத்துக்கு கிடையாது என்று தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் டியூ.குணசேகர, இதனை இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையின் மோசமான முன்னுதாரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.
மஹிந்த ஆதரவு கூட்டு எதிரணியைப் பொறுத்தவரையில், இதுவல்ல பிரச்சினை. இவ்வாறு பிரசாரம் செய்ததன் மூலம், இலங்கையில் நடக்கும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்கு பிரித்தானியாவுக்கும் அங்கீகாரம் அளிக்க வேண்டி வந்து விடுமே என்ற கலக்கம் தான் அவர்களிடம் அதிகமாக உள்ளது.
இந்த செயலின் மூலம், இலங்கைத் தேர்தல்களில் பிரித்தானியர்கள் பிரசாரம் செய்வதற்கு இலவச அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக சாடியிருந்தார் டியூ.குணசேகர.ஒரு நாட்டின் தேர்தல் விவகாரங்களில் இன்னொரு நாட்டின் தலையீடுகள் ஏற்படுவதை பெரும்பாலான நாடுகள் விரும்புவதில்லை.
உண்மையில் இதற்கான எதிர்ப்பு பிரித்தானிய அரசியல் கட்சிகளிடம் இருந்து தான் வந்திருக்க வேண்டும். ஆனால், இலங்கையிலும் அத்தகைய ஒரு தலையீடு வந்து விடுமோ என்ற அச்சத்தில் தான், இங்குள்ள கட்சிகள் அரசாங்கத்தை விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.
கருத்து வாக்கெடுப்பில், இலங்கை நடுநிலை வகித்திருக்க வேண்டும் என்ற எதிரணியினரின் கருத்தில் நியாயம் இருந்தாலும், இலங்கைத் தேர்தல்களில் பிரித்தானியா ஆதிக்கம் செலுத்த முனையும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.
ஏனென்றால், இலங்கையில் வாக்குரிமை பெற்ற பிரித்தானியர்கள் மிகச் சிலர் தான் உள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தலில், வெளிநாட்டு சக்திகளின் மறைமுகமான தலையீடுகளால் தான், தாம் தோல்வி கண்டதாக உணரும், மஹிந்த ராஜபக்ச தரப்பு, இதனை ஒரு பேராபத்தாக பார்க்கின்றது.
சூடுகண்ட பூனை என்பதால், தான் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர்.