பகைகொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்; தீராத கோபம் யாருக்கு என்ன இலாபம்? என்கிறது கவியரசு கண்ணதாசனின் கவி வரிகள்.
அவை வெறும் கவி வரிகள் மட்டுமல்ல; தத்துவார்த்தமான உண்மையும் கூட. பகை அழிவைத் தவிர வேறு எதையும் தராது. அன்பு, ஆக்கம் அனைத்தையும் தரும். ஆகையால் மக்கள் அன்புடையவர்களாக இருத்தல் வேண்டும்.
அன்பு என்பது பேதமை கடந்த மகாசக்தி. அதற்கு இனம், மதம், மொழி, நிறம் என்ற பேதமை எதுவும் கிடையாது.
ஜீவாத்மா எங்குள்ளதோ அங்கெல்லாம் கருணையிருக்கும். இதுவே அன்பின் மகிமை. இருந்தும் எங்கள் இலங்கைத் திருநாட்டில் மனிதர்கள் மீது மனிதர்கள் அன்பு காட்டும் அளவில் கூட எங்கள் நிலைமை இல்லை.
இப்போதெல்லாம் எங்கள் நாட்டின் அமைதி என்பது ஆயுதத்திற்கும் வல்லாதிக்க நாடுகளுக்கும் பயந்ததால் ஏற்பட்டதேயன்றி சிங்கள மக்கள் தமிழ் மக்களை நேசித்ததால் - தமிழ் மக்கள் சிங்கள மக்கள் தமக்குச் செய்தவற்றை மன்னித்ததால் எழுந்ததல்ல.
இப்போதும் இந்த நாட்டின் பெரும்பான்மை இனத்திடம் இலங்கை தங்களுக்குரிய நாடு என்ற நினைப்பே இருக்கிறது.
தமிழ் மக்களும் இந்த நாட்டின் சகோதரர்கள். அவர்களும் இங்கு வாழவேண்டும். எங்களுக்கு இருக்கக் கூடிய அத்தனை உரிமைகளும் அவர்களுக்கும் இருக்க வேண்டும்தானே என்ற நினைப்பு சிங்கள மக் களிடம் ஏற்பட்டிருந்தால் இலங்கை உலகில் எங்கு மில்லாத திருநாடாக விளங்கியிருக்கும்.
ஆனால் இனவாதம்; மதவாதம்; திமிர்வாதம் என் பவற்றை உருவேற்றி ஆடவைப்பதற்கென்றே அமைப்பு கள் உருவாகியுள்ளன.
அந்த அமைப்புகள் தங்கள் பணியை மிககச்சிதமாக செய்து முடிப்பதைக் காணமுடிகின்றது. இதற்கு மேலாக அரசியல்வாதிகள் தங்களுக்கான வாக்கைத் தக்கவைப்பதற்கு இனவாதத்தையும் மத வாதத்தையும் முதலீடாக்கிக் கொள்கின்றனர்.
இத்தகையதோர் நிலையில் சிங்கள மக்களின் மனநிலை தமிழர்கள் தம் எதிரிகள் என்பதாகவே இருக்கிறது.
அதேநேரம் காலத்திற்குக் காலம் தமிழினத்தை பேரினவாதம் தாக்கி அழித்து துவம்சம் செய்ததால் பேரினவாதிகளுடன் நாம் ஒரு போதும் சேர்ந்து வாழ முடியாதென்பதில் தமிழ் மக்கள் உறுதியாக இருக் கின்றனர். இந்த இறுக்கமான உறுதிப்பாடும் எங்கள் இனத்தின் இழப்புக்குக் காரணமாயிற்று.
இருந்தும் இழப்புகள் அதிகமாயினும் தென்பகுதியுடன் சேர்ந்துவாழ்வது சாத்தியமாகாது என்ற நிலைப் பாட்டில் தமிழ் மக்கள் மிகவும் உறுதியாக இருக்கின்றனர்.
இல்லை. சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழலாம்; சேர்ந்து வாழ்வதே நல்லது என்று யாரேனும் கூறினால் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ்வதற்காக சிங்கள மக்கள் காட்டிய சைகைகள் ஏதேனும் சாதகமாக உள்ளதா? என்று தமிழ் மக்கள் கேட்கும் போது எதையும் காட்ட முடியவில்லை என்ற நிலைமையில், இன ஒற்றுமை என்பது தொடர்ந்தும் கேள்விக்குரியதாகவே உள்ளது.
தமிழ் அரசியல் தலைமைகள் அரசுடன் சேர்ந்து போக வேண்டும், விட்டுக்கொடுக்கவேண்டும், புரிந் துணர்வு தேவை என்றெல்லாம் கூறினாலும் அதில் தமிழர்களுக்கான நலன் வெளிப்பாடாத காரணத்தால், தமிழ் அரசியல் தலைமைகள் கூட மிகமோசமாக சலிப்பை ஈற்றில் பெற்றுக்கொள்ளும் என்பது உண்மை.
ஆக, இந்த நாட்டில் இனவாதம், மதவாதம், திமிர்வாதம் அடியோடு இல்லாமல் போகவேண்டுமாயின் ஆட்சி பீடத்தில் இருக்கும் பெரும்பான்மை இனம் தனது சமாதான சமிக்ஞைகளை நேர்மையுடன் வெளிப்படுத்துவது கட்டாயமானதாகும்.