காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்களுக்கு அரசியல் வாதிகள் எதனை செய்தார்கள்?

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும், அதற்கு பின்னரான காலப்பகுதியிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்களுக்கு அரசியல் வாதிகள் எதனை செய்தார்கள் என மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா கேள்வி எழுப்பியுள்ளார்.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம் பெற்ற ‘தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்’ என்னும் தலைப்பில் இடம் பெற்ற கருத்துப்பகிர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘எங்களுடைய பிள்ளைகளையும், உறவுகளையும் தொலைத்த தாய்மார் இன்று என்ன செய்வது என்று தெரியாது நிர்க்கதியாக நிற்கின்றோம். தற்போது காணாமல் போனவர்களுக்கு என பிரதமர் அலுவலகத்தில் ஓர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் எமக்கு குறித்த அலுவலகம் தேவையும் இல்லை விருப்பம் இல்லை. வெளிவிவகார துறை அமைச்சரை சந்தித்த போது கூட நாங்கள் கூறினோம் குறித்த அலுவலகம் அங்கு எங்களுக்கு தேவை இல்லை என்று. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா மூலமாகாவே குறித்த அலுவலகம் அமைக்கப்பட்டதாக அதற்கு பதிலளித்த வெளிவிவகார துறை அமைச்சர் எம்மிடம் தெரிவித்தார்.
ஆனால் அவர் கூறியது சரியா? பிழையா? என்று எங்களுக்கு தெரியாது. காணாமல் போன எமது உறவுகள் சார்பாக நாங்கள் கூறுகின்றோம் குறித்த அலுவலகம் எமக்கு தேவையில்லை என்று. ஏன் அதற்குள் வந்து குறித்த அலுவலகம் வேண்டும் என்று கேட்கின்றார்கள்.? இது வரை காணாமல் போனவர்களுக்காக என்னத்தைச் செய்தீர்கள். இதுவரை எதனையும் செய்த மாதிரி தெரியவில்லை. காணாமல் போன உறவுகளின் தாய்மார்களை விட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் மனைவிமார் அதிகம் உள்ளனர்.
தமது கணவர் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவர்களின் மனைவிமார் குழந்தைகளுடன் பல்வேறு அசெகளரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அவர்களை எமது அரசியல் தலைமைத்துவங்களுக்கு தெரியுமோ? தெரியவில்லை. அவர்களின் வீடுகளில் கஞ்சி காய்ச்சி குடிக்க கூட வசதி இன்றி தவிக்கின்றனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்களை எந்தவொரு அரசியல் வாதிகளும் நேரில் சென்று பார்த்ததும் இல்லை.
அவர்களின் சுமையை சுமந்ததும் இல்லை. எங்களுடைய வலியை போக்கியதும் கிடையாது. ஒரு சில அரசியல் வாதிகள் எங்களுக்கு பின் வந்தார்கள். ‘தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்’ என்று கூறப்படுகின்றது உண்மை என்பதை கூறிக்கொள்ளுகின்றேன். இந்த அரசும், அரசியல் வாதிகளும் எங்களுக்கு இது வரை ஒன்றையும் செய்யவில்லை. காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நாங்கள் வீடு வீடக சென்று பிரச்சாரம் செய்தோம்.
ஜனாதிபதியாக மைத்திரியை கொண்டு வர வேண்டும் என்றும் வீடு வீடாக திரிந்தோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அழைத்து தேர்தல் பிரச்சாரம் செய்தோம். ஆனால் கடைசியில் ஒன்றுமே நடக்கவில்லை. மஹிந்த அரசாங்கமும் அதைத்தான் செய்தது. மைத்திரி அரசும் அதைத்தான் செய்கின்றது. நூறு நாள் வேளைத்திட்டத்தின் கீழ் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றனர்.
இன்று சுமார் 18 மாதங்களாகி விட்டது. எதனைக்காட்டினார்கள்?, உங்கள் எல்லோரிடமும் கேட்டுக்கொள்ளுகின்றேன் காணாமல் போன உறவுகளுக்கு ஒரு நல்ல முடிவை பெற்றுத்தாருங்கள். எதனையும் எமக்கு மறைக்க வேண்டாம். நாங்கள் எல்லா துன்பங்களையும் அனுபவித்து விட்டோம். எங்களுடைய பிள்ளைகளை அல்லது உறவுகளை சுட்டுக்கொன்று விட்டார்கள் என்று கூறினால் அதனை தாங்குகின்ற சக்தி எங்களிடம் இருக்கின்றது.
அந்த பிள்ளையின் படங்களை வீட்டில் கொழுவி அஞ்சலி செலுத்த முடியும். எங்களினால் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தி இருக்கின்றது. எனவே எங்களுக்கு வேறு ஒன்றும் செய்ய வேண்டாம் காணாமல் போன உறவுகள் இருக்கின்றார்களா? இல்லையா? என்பதனை தேடி கண்டுபிடித்து தாருங்கள்.
காணாமல் போன உறவுகளின் குடும்பம் ஒன்றின் ஒரு பிள்ளைக்கு கூட படிப்பு செலவு அல்லது சாப்பட்டு செலவுக்கு கூட உதவி செய்ததை நாங்கள் அறியவில்லை’ என தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila