இருவர் வலையில் வீழ்ந்தனர்:- குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:-
இலங்கை அரசினது நீண்ட பேரம்பேசல்களின் மத்தியில் இதுவரை இரண்டு கூட்டமைப்பு சார்பு உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளை வலைக்குள் விழுத்த முடிந்திருந்தது. அவ்வகையில் கணவன் மனைவியென இரு உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் நேற்று அரச பக்கம் பாய்ந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முதலாவது கட்சி தாவல் இதுவாகும்.
பருத்தித்துறை நகரசபை உறுப்பினரான நிரஞ்சன் மற்றும் அவரது மனைவியும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினருமான சிவசாந்தி ஆகிய இருவருமே இவ்வாறு கட்சி மாறியுள்ளனர்.
குளிரூட்டிய கார் பெமிட் மற்றும் இரண்டு கோடி பணம் தனக்கு பேரம் பேசப்பட்டதாக கூட்டமைப்பு சார்பு நகரசபை உறுப்பினரொருவர் தகவல் தெரிவித்தார்.
பொது மேடையில் ஏறி மஹிந்தவிற்கு ஆதரவை வெளியிட்டால் போதுமென பேரம் பேசியதாகவும் புலனாய்வு கட்டமைப்பின் அதிகாரிகளே தன்னை கட்சி மாற நிர்ப்பந்தித்தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அவ்வேளை தான் அதனை மறுதலித்ததாகவும் அவர் தெரிவித்ததுடன் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் சிலரை வலைக்குள் விழுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் 2ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மகிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முடிந்தளவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்த்தர்களை மேடையேற்ற இலங்கைப் புலனாய்வுத் துறையினர் உள்ளிட்ட மகிந்தவின் தரகர்கள் பகீரதப் பிரயத்தனத்தை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்களுக்கு 2 கோடி ரூபா குளிரூட்டிய வாகன பெமிற் சன்மானம் எனவும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு 5 கோடியில் இருந்து 10 கோடிவரையிலான பணமும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 50 கோடி கொடுப்பதற்கும் மகிந்த தரப்பு தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதே வேளை கூட்டமைப்பின் முக்கியஸ்த்தர் ஒருவர் தற்போது மகிந்த ராஜபக்ஸவுடன் டீலில் ஈடுபட்டு உள்ளதாக கொழும்பில் அரசல் புரசலாக கதைகள் பரவியவண்ணம் உள்ள போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.