அரசாங்கம் தமது முடிவுகளை தமிழர்கள் மீது திணிக்கக்கூடாது.

Konappulam-people-request-for-resettlement-to-the-president

வடமாகாண மீள்குடியேற்ற செயலணி ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உருவாக்கியுள்ளார். இந்த செயலணி உருவாக்கம் குறித்து வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார். அதாவது மக்களின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண சபையை நடத்திக் கொண்டிருக்கையில் மத்திய அரசாங்கம் மாகாணசபையினரை மதிக்காத தான்றோன்றித்தனமான முடிவுகளை எடுக்கமுடியாது என்றும், மாகாணசபையை மத்திய அரசாங்கம் தனது அடிமையாக எண்ணிச் செயற்படக்கூடாது என்றும் தெளிவு படுத்தியிருந்தார். வடக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றத்தை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை உருவாக்கினால் அது நல்ல விடயம்தானே அதை ஏன் முதலமைச்சர் எதிர்க்கின்றார்? யார்? குற்றினாலும் அரிசியானால் சரிதானே என்று சிலர் நினைக்கலாம். ஏன் என்றால் மிக அண்மையில் வவுனியா மாவட்டத்திற்கு பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கு திட்டத்தை பரிந்துரை செய்து இடத்தை தெரிவு செய்வதற்கு கலந்துரையாடல்களை நடத்தியபோது, பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மாகாண சபையில் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு பின்னர், பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில்தான் அமைக்க வேண்டும் என்று தனது முடிவை மாற்றிக் கொண்டிருந்தார். அந்த சர்ச்சை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடையே பெரும் சர்ச்சையாகவும், விவாதமாகவும் தலைதூக்கியதும், அவர்களுக்கிடையே கருத்தறியும் தேர்தல் நடத்தியும் தீர்வில்லாமல் இன்னும் இழுபட்டுக்கிடப்பதும் வவுனியா வர்த்தக மற்றும் விவசாயப் பெருமக்கள் மத்தியில் அதிருப்தியையும், கூட்டமைப்பு திட்டங்களை குழப்பியடிக்கின்றதே தவிர எதையும் வெற்றிகரமாகச் செய்யவில்லை என்ற விமர்சனத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. பொருளாதார மத்திய நிலையப் பிரச்சினையும்,யாழ்ப்பாண நகர அபிவிருத்திப் பிரச்சினையும், 65,000 பொருத்து வீட்டு விடயமும், இரணைமடு, யாழ்ப்பாணம் குடிநீர் விநியோகத் திட்டமும் இவ்வாறான குழப்பங்களினால் இழுபறிப்பட்டுக் கொண்டிருக்கையில் இப்போது வடமாகாண மீள்குடியேற்ற செயலணியை முதலமைச்சர் எதிர்க்கின்றார். இந்தத திட்டத்தின் ஊடாகவும் கிடைக்கக்கூடிய நன்மைகளையும் முதலமைச்சர் தடுத்து நிறுத்தப் போகின்றாரா? என்று சிலர் நினைக்கலாம். மத்திய அரசாங்கம் எவ்வாறான திட்டத்தை முன்வைத்தாலும் அதை எதிர்த்து தடுத்து நிறுத்துவது மட்டுமே வடக்கு மாகாண சபையினர் செய்கின்றனர்.என்று குற்றம் சாட்டுவதை வட மாகாண மீள்குடியேற்ற செயலணி விடயத்தில் ஏற்றுக் கொள்ளமுடியாது. ஏன் என்றால், ஜனாதிபதி உருவாக்கியிருக்கும் அந்தச் செயலணியில் வட மாகாண மக்களின் பிரதிநிதிகள் எவரும் உள்ளடக்கப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைமையை தமிழருக்கு கொடுத்து சர்வதேசத்தை சமாளிக்கத் தெரிந்திருக்கிறது. ஆளும் அரசாங்கத்திற்குரிய நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவப் பதவியை தமிழருக்கு விட்டுக்கொடுத்து நல்லிணக்கம் காட்டத் தெரிந்தது. மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுக்களுக்கு இணைத்தலைவர் பதவிகளை எதிரக்கட்சியான தமிழர்களுக்கு வழங்கி வாக்காளர்களான தமிழ் மக்களை சமாளிக்கத் தெரிந்திருக்கின்றது. இவற்றையெல்லாம் ஆழமாகச் சிந்தித்து இராஜதந்திரமாக முடிவெடுத்த அரசாங்கத்திற்கு மாகாணங்களில் முக்கிய வேலைத்திட்டங்களை திட்டமிடும்போது அந்த மாகாண நிர்வாகத்தினரையும் உள்ளடக்க வேண்டும் என்றும், அந்த மாகாணத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்க வேண்டும் என்றும் தெரிந்திருக்கவில்லையா? என்பதை நம்பமுடியவில்லை. குறிப்பாக வடமாகாணத்தை எடுத்துக் கொள்வோமானால் அந்த மாகாணம் யுத்த அழிவுகளை சந்தித்த மாகாணம். இன்னும் படைகளின் காணி சுவீகரிப்புக்களும், அபகரிக்கப்பட்ட காணிகளில் இருந்து முழுமையாக படைகளை அப்புறப்படுத்த முடியாத நிலைமைகளும் இன்னும் நீடிக்கிற மாகாணமாகவே வட மாகாணம் இருக்கின்றது. வட மாகாணத்தினைப் பொறுத்தவரையில், இரண்டு வகையான மீள்குடியேற்றப் பிரச்சினை இருக்கின்றது. பூர்வீக வாழ்விடங்களில் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டியவர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களிடையே இரண்டாம் தலைமுறையாக வளர்ந்து புதிய குடும்பங்களாக சொந்த வீடுகள் இல்லாமல் சொந்த நிலஙகளும் இல்லாமல் இருப்பவர்கள். புதிய குடும்பங்களுக்கு பொருத்தமான அரச காணிகள் அடையாளம் காணப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு மீளக்குடியேற்றம் செய்து எமது மக்கள் தமது பாரம்பரிய தொழில்களைச் செய்வதற்கு தடைகள் அகற்றப்பட வேண்டும். புதிய தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அடிப்படை மற்றும் அத்தியாவசியப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். மொத்தத்தில் எமது மக்களின் மீள் குடியேற்றம் என்பது அர்த்தபூர்வமாக இருக்கவேண்டும். இவை ஒருபுறமிருக்கையில் ஏற்கெனவே மீள்குடியேற்றம் செய்யப்பட்ட எமது மக்களின் வீடுகள் பூரணப்படாமலே இப்போதும் பாதிக் கல்வீட்டுக்குள் படலைக்கதவுகளும்,பாதி ஜன்னல்களுமாகவே 70 வீதமான குடும்பங்கள் வாழ்கின்றார்கள். அதிலும் குடும்பத்தலைவன் இல்லாத கைம்பெண்களுக்கு கிடைக்கப்பெற்ற மீள்குடியேற்றச் செயற்பாடுகள் அவர்களை அடிமைகளைப் போன்ற வாழ்க்கைக்குள்ளேயே தள்ளிவிட்டுள்ளது. ஆகவே வட மாகாணத்தில் மீள்குடியேற்றம் என்கின்றபோது அந்த மக்களின் பிரச்சினைகளை தெரிந்தவர்களும், அந்த உணர்வுகளையும், வலிகளையும் அனுபவித்தவர்களும் இவ்வாறான திட்டங்களில் உள்ளடக்கப்பட வேண்டும். எமது மக்களின் பிரதிநிதிகள் இல்லாமல், எமது மண்ணோடும், மக்களுடனும், வாழ்வியலுடனும் தூரமானவர்களை உள்ளடக்கி செயலணி அமைத்து வட மாகாணத்தின் மீள்குடியேற்றத்தை அரசாங்கம் பூர்த்தி செய்யமுடியாது. ஜனாதிபதி அமைத்திருக்கும் வட மாகாண மீள்குடியேற்ற செயலணியில் அமைச்சர்களான ரிஷாட் பதியூதீன், பைசர் முஸ்தபா, துமிந்த திசாநாயக்க, சுவாமிநாதன் ஆகியோர் இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் வட மாகாணத்தில் பத்துக்கும் அதிகமான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும்,முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் மாகாண சபை உறுப்பினர்களும் உறுப்பினர்களும் இருக்கின்ற நிலையில் அரசாங்கம் கொழும்பிலிருந்து முடிவுகளை தமிழ் மக்கள் மீது திணிக்க முடியாது என்பதே வட மாகாண தமிழ் மக்களின் நியாயமான நிலைப்பாடாக இருக்கின்றது. -ஈழத்துக் கதிரவன்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila