
சர்வதேச நீதி விசாரணைகளை வலியுறுத்தி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கலப்பு நீதிமன்ற விசாரணைக் கட்டமைப்பிற்கு இணங்க வைக்க, ஸ்ரீலங்கா அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி என்ன என்பதை பகிரங்கப்படுத்துமாறு வலியுறுத்தி ஸ்ரீலங்கா உச்சநீதிமன்றில் இன்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அமெரிக்காவில் வைத்து தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்தை மையப்படுத்தியே அரசாங்கத்திற்கு எதிரான இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மனுதாரரான தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகரவின் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி நுவான் பெல்லன்துடாவ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவின் மைத்திரி – ரணில் அரசாங்கத்தினால் அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளரை பிரதிவாதியாகக் குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், ஜெனீவா தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு அங்கீகரித்ததன் பின்னணி தொடர்பிலான தகவல்களை அறிந்துகொள்ள அரசியல் யாப்பின் 14 ஆவது சரத்தின் இரண்டாம் இலக்கச் சட்டமான தகவல் அறியும் சட்டத்திற்கு அமைய தனக்கு உரிமை இருப்பதாக தேசப்பற்றுடைய தேசிய அமைப்பின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், அமெரிக்காவும், ஸ்ரீலங்கா அரசும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நடாத்திய பேச்சுக்களின் போது தெரிவித்த இணக்கத்திற்கு அமையவே ஜெனீவாவில் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கலப்பு நீதிமன்ற விசாரணைக் கட்டமைப்பை உள்ளடக்கிய ஜெனீவாத் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியதாக கூறியிருந்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதிகட்ட போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,
எவ்வாறு கலப்பு நீதிமன்றத்திற்கு இணக்கம் தெரிவித்தது என்பது தொடர்பிலும், அதற்காக ஸ்ரீலங்கா அரசு கூட்டமைப்பினருக்கு எதனை வழங்க வாக்குறுதி அளித்தது என்பது தொடர்பிலும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.