ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் கடந்த சில வருடங்களாக இலங்கை விவகாரம் பேசுபடு பொருளாகியுள்ளது.
ஒவ்வொரு தடவையும் இலங்கை அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்குகின்ற போதிலும் அவை எதுவும் நடைமுறைக்கு வருவதாகத் தெரியவில்லை.
தேர்தலில் மகிந்த அரசு வீழ்ந்து போனமை உலக நாடுகள் சிலவற்றுக்கு திருப்தியைக் கொடுத்ததன் விளைவாக அந்த நாடுகள் இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் -உரிமை மறுப்புகள் தொடர்பில் எவ்வித கவனிப்பும் செலுத்தாமல் இருப்பதைக் காணமுடிகின்றது?
புதிய அரசு ஆட்சிக்கு வந்ததன் காரணமாக இனிமேல் தமிழர்களின் பிரச்சினை தீர்த்து வைக்கப்படும் என்பது போல் குறித்த நாடுகள் இருப்பதால், இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் இறுக்கங்கள் போதுமானதாக இல்லை என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.
இத்தகைய போக்குகள் ஐ.நா மீதான நம்பிக்கையைப் பலவீனப்படுத்தும் என்பதுடன் உலகின் வல்லமை மிக்க நாடுகளின் சுட்டுவிரல்கள்தான் ஐக்கியநாடுகள் சபையையும் இயக்குவிக்கின்றது என்ற முடிவுக்கு இட்டுச்செல்லும். எனவே வன்னிப்போரில் இனஅழிப்பு நடத்தப்பட்டமை தொடர்பில் ஐ.நாவின் நடவடிக்கைகள் காத்திரமானதாக இருக்க வேண்டும்.
30 ஆண்டுகால போராட்டத்தின் முடிவில் ஈழத் தமிழினம் அழிக்கப்பட்டது. அந்த மக்களின் வாழ்வியல் என்பது கேள்விக்குறியாக்கப்பட்டது.
விதவைகள், அநாதைகள், அங்கவீனர்கள், காணாமல் போனவர்கள் என்றொரு பட்டியல் ஈழத்தமிழினத்தை சின்னாபின்னமாக்கியது.
நிலைமை இதுவாக இருக்கையில், இலங்கையில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தால் அதற்கொரு நடவடிக்கை, மைத்திரிபால சிறிசேன ஐனாதிபதியாக இருந்தால் அதற்கு வேறொரு நடவடிக்கை என்பது ஆட்சியில் யார் இருக்கிறார்கள் என்று பார்க்கப்படுகிறதே அன்றி பாதிக்கப்பட்டவர்கள் பற்றி கரிசனை கொள்ளவில்லை என்பது தெட்டத்தெளிவாகின்றது.
உண்மையில் இலங்கையின் ஆட்சியில் யார் இருக்கிறார்கள் என்பது பற்றிய பார்வை தேவையற்றது. மாறாக வன்னிப் போரில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள். இன அழிப்பு நடக்கும் அளவில் போர்க் கொடுமை இருந்துள்ளது.
கொத்துக் குண்டுகள் வீசப்பட்டதற்கான தடயங்கள் உள்ளன என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
போரின் போது பொதுமக்கள், சிறுவர்கள், பெண்கள் மற்றும் போராளிகள் எவ்வாறு நிட்டூ ரப்படுத்தப்பட்டனர் என்பதற்கு சனல் 4 காணொளி தக்க சான்றாக உள்ளது.
நிலைமை இவ்வாறாக இருக்கின்ற போதிலும் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படுவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையமோ, அமெரிக்கா போன்ற நாடுகளோ தயாரில்லை.
மாறாக ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் போர்க்குற்ற விசாரணைகளின் போது சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என ஐ.நா மனித உரி மைகள் ஆணையகத்தின் உறுப்பு நாடுகள் வலி யுறுத்துகின்றன.
இருந்தும் இலங்கை அரசு தெட்டத்தெளிவாக சொல்கிறது, போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அப்படியானால் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் உறுப்பு நாடுகளின் வலியுறுத்தல்கள் எந்தளவுக்கு நடக்கப்போகிறது.
இதை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள மறுத்தால் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கும் என்ற கேள்விகள் முன்னிற்பது தவிர்க்க முடியாததே.