கிளிநொச்சி நகர அபிவிருத்திக்கு இராணுவ முகாம்களால் இடையூறு (சிறிதரன் எம்.பி சுட்டிக்காட்டு)


கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திக்கு இராணுவ முகாம்களினால் இடையூறுகள் காணப்படுவதாக யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கிளிநொச்சி நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பில் ஆராயும் முகாமைத்துவக் குழுவின் கூட்டத்தில் தலைமை வகித்து உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மாவட்டத்தின் வளம் பொருந்திய பகுதிகளும், பொருளாதார முக்கியத்துவம் மிக்க பகுதிகளும் இராணுவத்தின் வசம் இருப்பதால் போரால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி நகரத்தின் மேம்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவின் பெயரில் அமைக்கப்பட்ட இராணுவ நினைவுத் தூபி மற்றும் அதன் முன்னால் அமைக்கப்படும் கிறீன் பார்க் முதலியவை சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நகர அபிவிருத்தியின் போது மாவட்டத்தின் தனித்தன்மை, வரலாறு, அடையாளம் என்பவற்றை பாதுகாக்க வேண்டும் என்றும் கிளிநொச்சி மக்களுக்கான நகரமாக கிளிநொச்சி அமையப்பெற வேண்டும் என்றும் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வட மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர் கள், பிரதேச சபை செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள்,மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன் வைத்தனர்.

இதன்போது கிளிநொச்சி நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான முன்வரைபு ஒன்று காணொலிப் படுத்தப்பட்டு அது குறித்து ஆராயப்பட்டதுடன் நேற்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், ஆலோசனைகள் என்பனவும் புதிய முன் வரைபுக்காக குறிப்பெடுக்கப்பட்டுள்ளன.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila