அமெரிக்கத் தூதுவரின் அறிவுரையை அறியுமினே!


யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பல தரப்பையும் சந்தித்து பல்வேறு விடயங்கள் பற்றி எடுத்துரைத்துள்ளார்.

தான் சந்தித்தவர்களின் தன்மை, மனநிலை, அவர்கள் சார்ந்த அமைப்புகள் என்பனவற்றுக்கு ஏற்ப, அவர் தமது அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கூறியுள்ளார்.

உறவுகளைப் பறிகொடுத்து கண்ணீரும் கம்பலையுமாக இருக்கக் கூடிய தமிழினம் யாரைக் கண்டாலும் இவர்தான் நமக்கான மீட்பரோ! அதற்காகத்தான் வெளிநாட்டிலிருந்து வந்தவரோ! என்று நினைக்கின்ற மனநிலையிலேயே பலரையும் சந்தித்து வருகிறது.

அந்தவகையில் அமெரிக்கத் தூதுவருடன் சந்தித்தவர்கள் அமெரிக்கத் தூதுவர் தம்மிடம் கூறிய விடயங்களைப் பிரஸ்தாபித்து வருகின்றனர்.

வெவ்வேறு அமைப்புகள் சார்ந்தவர்கள் வெவ்வேறு நேரங்களில் அமெரிக்கத் தூதுவருடன் யாழ் ப்பாணத்தில் சந்தித்தவர்கள் ஒன்று சேர்ந்து அமெரிக்கத் தூதுவர் தங்களிடம் கூறியது பற்றி அளவளாவிய போது அமெரிக்கத் தூதுவர் ஒரு தரமான இராஜதந்திரி என்பதை நிரூபித்துள்ளார் என்ற உண்மையை உணர முடிந்தது.

எது எப்படியாயினும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஜனநாயக வழியில் தம் உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என அவர் கூறிய ஆலோசனை மிகவும் முக்கியமானதும் தமிழ்த் தரப்புகள் ஆழ்ந்து கவனிக்க வேண்டியதுமாகும்.

ஏனெனில் போருக்குப் பின்பு தமிழ் மக்கள் இழப்பின் கொடுமை காரணமாகவும் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற அச்ச உணர்வு காரணமாகவும் அவர்கள் மூலைகளுக்குள் ஒதுங்கிக் கொண்டனர்.

தனிநாடு கேட்டு ஆயுதம் ஏந்திப் போராடிய இனம் தாங்க முடியாத அளவில் உயிரிழப்புக்களையும், சொத்தழிவுகளையும் சந்தித்தபோது உளவியல் ரீதியாகவே சோர்ந்து போவது வழக்கம்.

இருந்தும் அந்த இனத்துக்குப் பலமான அரசியல் தலைமை அல்லது பலமான மக்கள் இயக்கம் இருந்திருக்குமாயின் அந்த அமைப்பு தன் இனத்துக்கு ஏற்பட்ட பேரிழப்புக்களை - இனவழிப்புகளை சர்வதேசத்திடம் எடுத்துரைத்து தன் இனத்துக்கு மீண்டும் இப்படியொரு அழிவு ஏற்பட்டு விடக் கூடாது என்பதைச் சுட்டிக்காட்டி தனக்கான உரிமையைப் பெற்றிருக்கும்.

ஆனால் தமிழினத்தைப் பொறுத்தவரை பலமான அரசியல் தலைமை இல்லை என்ற வெறுமை நிலையில் இருக்கும் போது எதுவும் சாத்தியமா காது என்பது உண்மையே?

இத்தகையதொரு நிலையில்தான் தமிழ் மக்கள் தங்கள் உரிமைக்காக ஜனநாயக ரீதியில் குரல் கொடுக்க வேண்டும்.

அவ்வாறு குரல் கொடுக்கும்போது தாம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என அமெரிக்கத் தூதுவர் கூறியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், காணாமல் போனவர்களின் உறவுகள் வீதியில் வீழ்ந்து அழும் அவலங்கள் அனைத்தும் ஜனநாயக உரிமைக்கானதுதான்.இருந்தும் அவை சிறு அளவில் என்பதாலோ என்னவோ அமெரிக்கா கவனிக்கவில்லைப் போலும்.

ஆகையால், தமிழ் மக்கள் அகிம்சை வழியில் ஒரு பிரமாண்டமான பேரணியை முன்னெடுப்பது பொருத்துடையது. அந்தப் பணியை மக்கள் இயக்கமாக மலர்ந்திருக்கும் தமிழ் மக்கள் பேரவை முன்னெடுப்பது காலமுணர்ந்த செயல்.

இச்செயல் வெற்றி பெற அனைத்துத் தமிழ் மக்களும் அரசியல் பேதம் கடந்து எங்கள் இனத்தின் உரிமைக்காக ஓரணியில் ஒன்று திரள்வது காலத்தின் கட்டாய தேவையாகும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila