இன்று பிற்பகல் 3.00 மணியளவில் கிளிநொச்சி 55ஆம் கட்டைப் பகுதியில் வீதியில் வைத்து முன்னாள் போராளியொருவர் கைகளைப் பின்னால் விலங்கிட்டு இனந்தெரியாதோரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,
நான்கு வருடங்கள் புனர்வாழ்வு பெற்று பின்னர் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளியான கிளிநொச்சி தொண்டமான் நகரைச் சேர்ந்த நிசாந்தன் வயது 26 என்பவர் இன்று பிற்பகல் இனந்தெரியாதோரால் ஏ9 வீதியில் வைத்து மக்கள் முன்னிலையில் கைகளை பின்னால் கட்டி விலங்கிடப்பட்டு, வெள்ளைவானில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இவரை யார் கைது செய்தார்கள்? ஏன் கைது செய்தார்கள்? எங்கு கொண்டு சென்றுள்ளனர்? என்று எவருக்கும் தெரியாது. கைது செய்தவர்கள் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளவும் இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உறவினர்களுக்கு தகவல் வழங்கியதனையடுத்து உறவினர்கள் உடனடியாக கிளிநொச்சி இரனைமடுவில் அமைந்துள்ள பிராந்திய பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு அவர்களை கிளிநொச்சி காவல்துறை நிலையத்திற்குச் செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் கிளிநொச்சி காவல்துறை நிலையத்திற்குச் சென்றபோது, அங்கு குறித்த போராளியைக் கைதுசெய்தது யார் எனத் தெரியவில்லை எனத் தெரிவித்ததுடன், உறவினர்களை வவுனியா மாவட்ட காவல்துறை நிலையத்திற்குச் செல்லுமாறும், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கைது செய்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.