தொலைபேசி வழி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன் மற்றும் சாந்தி சச்சிதானந்தனை தொடர்புகொண்ட மாவை எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ள கடற்படையினரின் கோத்தா கப்பல்படை தளத்தின் தேவைக்காக காணியை சுவீகரிப்பதற்கான காணி அளவீடு நடவடிக்கைளை தடுத்து நிறுத்த வேண்டாமென உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் இது தொடர்பிலான மக்கள் போராட்டங்கள் எதிலும் பங்கெடுக்க வேண்டாமென அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
கடந்த மூன்றாம் திகதி குறித்த பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக காணி அளவீடு செய்யும் நடவடிக்கை நில அளவை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட நிலையில், வட்டுவாகல் பாலத்தை அண்மித்த இரண்டு பகுதிகளிலும் திரண்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இந்த நடவடிக்கையை தடுத்திருந்தனர்.
இப்போராட்டத்தினில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்களுடன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன்,சாந்தி சச்சிதானந்தன் ஆகியோரும் பங்கெடுத்திருந்தனர்.
இந்நிலையினில் போராட்டங்களினை நடத்தக்கூடாதென்ற மாவையின் உத்தரவையடுத்து அதற்கான ஏற்பாடுகளினில் ஈடுபட்டுள்ள வட்டுவாகல் கிராம அபிவிருத்தி சங்கத்தினரை தொடர்பு கொண்ட சாந்தி சச்சிதானந்தன் போராட்டம் வேண்டாமென அச்சுறுத்தியுள்ளதாக மேலும் தெரியவருகின்றது.அத்துடன் தமது கட்சி தலைமை அரசுடன் பேசி காணிகளை விடுவிக்குமென்ற உறுதி மொழியை வழங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
எனினும் ஆக்கிரமிப்பிற்குள்ளான பகுதியினில் காணிகளை கொண்டுள்ள வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் இப்போராட்டம் தொடர்பினில் என்ன நிலைப்பாட்டினை கொண்டுள்ளார் என்பதை பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கவில்லை.