வடக்கு மாகாண சபையின் ஆளுநர் அவர்களுக்கு அன்பு வணக்கம். மீண்டும் ஒரு தடவை தங்களுக்கு கடிதம் எழுதுவதையிட்டு நமக்கும் மனக்கிலேசமாகவே உள்ளது.
இருந்தும் தமிழ் மக்களின் தற்போதைய நிலையை தங்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் வடக்கில் ஒன்றும் தெற்கில் இன்னொன்றுமாக தங்களின் கருத்துக்கள் வெளிவருவது தொடர்பில் ஒரு விளக்கத்தைத் தரும் பொருட்டும் இக் கடிதம் தங்களுக்கு எழுதப்படுகிறது.
வட மாகாணத்தில் பெளத்த விகாரைகள் அமைப்பதில் தவறில்லை என்று நீங்கள் கருத்துத் தெரிவித்த காணொலியை பலரும் பார்த்திருந்தனர்.
வடக்கில் பெளத்தவிகாரைகள் அமைப்பதில் என்ன தவறு உண்டு என நீங்கள் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கேட்டிருந்தீர்கள். இந்தக் கேள்வியை தென்பகுதியில் வாழும் எந்த சிங்கள மகன் கேட்டிருந்தாலும் அதுபற்றி தமிழ் மக்கள் அலட்டிக் கொள்ளமாட்டார்கள்.
ஆனால் வடக்கு மாகாணத்தின் ஆளுநராக இருக்கக் கூடிய தாங்கள் அவ்வாறு கூறியதுதான் மிகப் பெரும் அதிர்ச்சியை தமிழ் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு மாகாணத்தின் ஆளுநராகிய தாங்கள் தமிழ் மக்களின் வாழ்வியல் பற்றி நிச்சயம் அறிந் திருக்கவேண்டும். அவ்வாறு நீங்கள் அறிந்திருந்தால்,
நடந்து முடிந்த யுத்தம் தமிழ்மக்களை நிறையவே பாதித்துள்ளது; பலரை அங்கவீனமாக்கியுள்ளது; குடும்பத்தலைவனை இழந்து விதவைப்பெண்கள் தங்கள் குடும்பத்தின் சுமையை தாங்கும் பரிதாபத்தில் உள்ளனர்; யுத்தத்தால் பெற்றோரையிழந்த ஆயிரக்கணக்கான சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் தங்கி வாழ்கின்றனர் என்ற செய்திகளையே நீங்கள் தென்பகுதியில் தெரிவித்திருப்பீர்கள்.
ஆனால் நீங்களோ வடக்கில் விகாரை அமைப்பதில் என்ன தவறு என்று கேட்கிறீர்கள்?
மரியாதைக்குரிய வடக்கு மாகாணத்தின் ஆளுநர் அவர்களே! யுத்தத்தால் எல்லாவற்றையும் இழந்து போன வடக்கில் இப்போது விகாரைகள் அமைப்பது அவசியமா? என்பதை உங்கள் நெஞ்சை தொட்டுச் சொல்லுங்கள்.
விகாரைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் உங்களிடம் கேள்வி கேட்டால் அதனை விலத்திச் செல்வதே நல்லது.
அதைவிடுத்து வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல நீங்கள் பதில் அளிப்பது, நீங்கள் வகிக்கும் ஆளுநர் என்ற பதவிக்குரிய தர்மமாகாது.
அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தென் பகுதியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது யுத்தம் நின்று போனாலும் தமிழ் மக்களின் பிரச்சினை இன்னமும் தீரவில்லை எனப் பகிரங்கமாக கூறியுள்ளார்.
இது ஒரு மனிதனுக்கு இருக்கக் கூடிய தருமம். எப்போதும் உண்மையை - யதார்த்தத்தை பேசுவது பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்தும்.
உண்மையில் வடக்கு ஆளுநராக இருந்த ஜி.ஏ.சந்திரசிறி தனது ஆளுநர் பதவியை வடக்கின் அபிவிருத்திக்காக பயன்படுத்தினார் என்பது மறுக்க முடியாத உண்மை.
இருந்தும் அவர் இராணுவ அதிகாரியாக இருந்த போது நடந்து கொண்ட முறைகள் தமிழ் மக்களுக்கு அவர் மீது இனம் புரியாத வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது. உண்மையில் சந்திரசிறியை ஆளுநராக தொடர்ந்தும் வைத்திருந்தால், அவர் மனம்மாறி இருப்பாரோ என்று நினைக்கும் அளவில் நீங்கள் நடந்து கொள்ளக்கூடாது.
ஏனெனில் தமிழ்மக்கள் யுத்தத்தால் எல்லாவற்றையும் இழந்தவர்கள்; உயிர்களைப் பறிகொடுத்தவர்கள். அவர்களுடன் நீங்கள் வாதம்புரிவது நீதியாகாது. தர்மமாகாது.